மானுடம் வாழ்க

மானுடம் வாழ்க!

சென்னை முழுதும் மழைநீர் ஈரம் !
மழையின் விளைவுகள் மிகமிகக் கோரம்.!
கூற்றே மழையாய் வந்ததோ இன்று?
ஆற்றோம் இயற்கையின் சீற்றம் என்று

உடையோர் இல்லோர் எனப்பிரி வின்றி
உடைமைகள் இழந்து உயிர் மட்டும் சுமந்து
இடம்விட் டோடி இன்னல் உற்றோர்
இடர் உடன் களைய எழுந்தனர் பலரும்.

.
உதவிக் கரங்கள் உடனே நீட்டி
உடையும், உணவும், இடமும் அளித்தார்.
பாதிப் படைந்தோர் பலரின் பாரம்
பாதிப் பகுதியாய் குறைந்த திந்நேரம்

மாநகர் மாந்தர் மனதின் ஓரம்
முடங்கிக் கிடந்த உணர்வின் ஈரம்
பல்கிப் பெருகி ஊற்றடுத் தோட ,
முனைந்தேன் இங்கு நான் அதைப் பாட.

.
பாற்கடல் கடைகையில் நஞ்சுடன் கூட
சேர்ந்து கிடைத்த அமுதினைப் போல
ஊழி யழித்ததால் உலகமே அழுகையில்
அழியா தெழுந்த மானுடம் வாழ்க !
.
விழுந்த மாந்தர்க் குதவிகள் புரிந்து
எழுந்தவர் மீண்டும் எளிதாய் நிற்க
தழுவி அவரைத் தாய் போல் அணைத்த
விழுமிய பண்பின் மானுடம் வாழ்க !

.
தான் இடர் பட்டும் தளர் வடையாமல்
தன்னினும் மெலியொர் துயர் துடைத் திடவே
ஊனினை வருத்தி உயிர் கொடுத் துழைத்த
மானிடர் வாழ்க! மானுடம் வாழ்க!

எழுதியவர் : ரமேஷ் (கனித்தோட்டம் ) (24-Dec-15, 2:46 pm)
பார்வை : 72

சிறந்த கவிதைகள்

மேலே