மாணவர்களின் உளவியல் நிலை

இன்றைய உலகில் மாணவர்களின் உளவியல் நிலை பற்றி ஓர் பார்வை
---------------------------------
இன்றைய எமது சமுதாயத்தில் அரங்கேறிவரும் சமுகவிரோதச் செயல்கள் பற்றி அலசி ஆராய்வோம் எனில், எம் அனைவருக்கும் சங்கடம் தரும் நிலையே தோற்றம் பெற்றிருக்கின்றது. இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என வெற்றிக் களிப்புடன் கோஷமிட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் பேரதிர்ச்சி தரக் கூடிய நிலையையே இன்றைய இளம் சமுதாயம் எதிர்நோக்கி உள்ளது. ஆழிவின் விளிம்பில் நின்ற வண்ணம் செய்வதறியாது நிலைதடுமாறி நிற்கின்றார்கள் எம் நாளைய தலைவர்கள். இந்த அவல நிலை தோற்றம் பெற அடிப்படைக்காரணி எதுவென ஆராய முனைகையில் என் மனதில் நிழலாடிய அனுமாணமே மாணவர் சமதாயத்தின் உளவியல் சார் தாக்கங்கள்.ஆம் இன்று நாம் வாழும் பூமி குற்றம் தனின் உறைவிடமாக உருப்பெற்றுள்ள இந்த அவல நிலையிலே அக்குற்றங்களுக்கு தூண்டிகளாகவும் பொறுப்பாளிகளாகவும் எம் மாணவர் சமுதாயம் மாறியுள்ள நிலை எம்மை அச்சத்திலும் மீளாத் துயரிலும் ஆழத்தியுள்ளது. இந்நிலை பலரால் விமர்சனத்திற்கு உள்வாங்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதன்று என மறுக்கப்பட்டு, மழுங்கடிக்கப்பட்டாலும் இதுவொரு நிதர்சனமான உண்மை.

இக்கசப்பான உண்மை தன் பின்னணி வலுப்பெற ஏதுவாய் அமைந்த களமே மாணவ சமுதாயம் எதிர்நோக்கியிருக்கும் உளவியல் சார் பாதிப்புக்கள். இன்றைய இலத்திரனியல் உலகமானது தொழில்நுட்பம்தனின், இராஜாங்கமாக விளங்குகின்றது. இன்றைய உலகின் ஒவ்வொரு மாணவனும் எளிதில் இவ் இலத்திரனியல் உலகினுள் உள்வாங்கப்பட அவனுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் வசதிகள் யாவும் அவர்கள் பெற்றோர்களாலேயே உருவாக்கிக் கொடுக்கப்படும் ஒரு நிலை உருவாகியுள்ளது. இவ்வாறான வசதிகள் செய்து தரப்படுவது தமக்கான சமுக அந்தஸ்தை நிலைநாட்டும் ஓர் விடயமாகவும் உணரப்படுவது யாம் அறிந்ததே. அதன் விளைவு இன்று ஆரம்பக்கல்வி கற்கும் மாணவன் ஒருவனின் கைகளில் கூட தொழில் நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டிருக்கும் வகை வகையான செல்லிடத் தொலைபேசிகள் தவழ்வதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. பெற்றோர் தம் பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்த இணையம் என்னும் புரட்சி உலகம் உசாத்துணை நூல்களாக விளங்கும் என அனுமானித்தே இவ்வாறான இலத்திரனியல் வசதிகள் அனைத்தையும் தம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். இணையம் என்ற பாரிய உலகின் வாசல்கள் மாணவருக்குத் திறக்கப்படுகின்றன.

சூழ்நிலைகளை சரியாக கைக் கொள்ளும் ஓர் முதிர்ச்சியடைந்த மனப்பக்குவம் மாணவரிடையே தோற்றம் பெறாத பருவத்திலேயே அவர்கள் இப்பரந்த உலகிற்குள் உள்வாங்கப்படுவதால் பெரும்பாலான மாணவர்கள் இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் ஆக்கத்திற்கான பாதையை விட்டு அழிவிற்கான பாதையை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர், விளைவு தாம் ஆட்சி செய்ய வேண்டிய விஞ்ஞான உலகம் தம்மை ஆட்சி செய்யும் அவல நிலைக்கு வித்திட்டு அதற்கு அடிமையாகும் நிலைக்கு ஆழாகின்றனர். தவறான நிலையில் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தும் மாணவருக்கு புதிய புதிய பிரச்சனைகள் தோற்றம் பெறகின்றன. இவ்வாறான ஒரு சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அவற்றிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவோ,பாதுகாத்துக் கொள்ளவோ தேவையான முதிர்ச்சி நிலையானது போதுமற்றதாக மாறிவிடும் பட்சத்திலும் பெறியவர்களிடம் இதைப்பற்றி ஆலோசிக்க தலைமுறைப் பாகுபாடு, அவர்களின் பிரச்சனைகளை பெரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவர அவர்களை மட்டுப்படுத்தும் வேளையிலும் அவர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர்.தனிமையெனும் இருள் அவர்களை சூழ்ந்து கொள்கின்றது.

தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளையும், அவற்றின் பாதிப்புக்களையும் பற்றி அவர்கள் இடைவேளை இல்லாது மீண்டும் மீண்டும் சிந்தித்துக் கொண்டிருப்பதன் விளைவு அவர்கள் முயற்சிக்கும் காரியங்கள் அனைத்திலும் கவனச்சிதறல்களால் தோல்விகளை வழமையாக்கிக் கொள்கின்றனர். இதனால் அவர்கள் மனதில் விரக்தி தோற்றம் பெறும். விளைவு அவர்கள் சமுக விரோத செயல்கள், வன்முறைகள் வழிச்சென்று தத்தம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முனைவர் அல்லது அதீத விரக்தியால் தம்மை அழித்துக் கொள்ள முயல்வார்கள். இவ்விரண்டில் எவ்வழி தெரிவு செய்யப்பட்டாலும் இழப்பு சமுதாயத்திற்கே. நாளை எம் நாட்டை வழிநடத்தக்கூடிய ஒரு பிரஜையை – தலைவனை நாம் இழந்து விடுகின்றோம்.

இன்றைய எம் சமுதாயத்தில் பொருளாதாரரீதியில் பல நெருக்கடிகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக அநேகர் தம் வாழ்வாதாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் உழைப்பு மற்றம் பணம் போன்றவற்றை முதன்மைப்படுத்தி போட்டி உலகில் தம் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முனைகின்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்காகவும் தம் குடும்பத்திற்காகவும் ஒதுக்கும் நேரத்தை மிகச் சொற்பமாக மட்டுப்படுத்துகின்றனர். இன்னும் சிலர் அவ்வாறு சிறிது நேரம் கூட ஒதுக்க முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதன் விளைவு பெற்றோர் தம் பிள்ளைகளுடன் தங்கள் நேரத்தை செலவிட்டு அவர்கள் தேவைகள், பிரச்சனைகள் என்பவற்றிற்கு செவிமடுத்து அவர்களின் நல்ல நண்பர்களாகவும் வழிகாட்டிகளாகவும் இருக்க வேண்டிய தம் கடமைமையில் இருந்து தவறுகிறார்கள். ஒரு குழந்தைக்கு கிடைக்க வேண்டிய அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு என்பன அவர்களுக்கு எட்டாக் கனியாகிவிடுகின்றன.

இன்றைய கல்விச் சமுகமானது சிறந்த பெறபேறுகளையும் உயர்ந்தபட்ச மதிப்பெண்களையும் மாத்திரமே ஏக குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்ற பரிதாபகரமான சூழ்நிலையை காணமுடிகின்றது. கல்வியினை ஒரு நிலையான செல்வமாக கருதும் நிலை மாறி தமது சமுக அந்தஸ்தினை மதிப்பிடும் ஓர் காரணியாகவே இன்றைய காலகட்டத்தில் கல்விச் சமுகத்தாலும் பெற்றோராலும் உணரப்படுவது,மிகவும் விசனம் தரக்கூடிய ஒரு விடயமாகும். இதன் காரணமாக மாணவர்கள் தம் சக்திக்கு அப்பாற்பட்ட விடயங்களை இலக்காக்கிக் கொள்ள நிர்பந்திக்கப்படுகின்றனர். மேலும் பலரது அபிப்பிராயப்படி கல்வியானது மாணவர்கள் மேல் திணிக்கப்படுகின்றது. இதனால் கல்வி கசப்பான அனுபவமாகவே மாணவர்களால் நோக்கப்படுகின்றது.

பாடசாலை விட்டு வீடு வந்தவுடன் தனியார் வகுப்புக்களும் தம் கைவரிசையை வெளிக் கொணரத் தவறுவதில்லை. தனியார் வகுப்புக்களில் ஆண்,பெண் என இருபாலரும் சந்தித்துக் கொள்ள வாய்ப்புக் கிட்டுகின்றது. இந்த சூழ்நிலைக்கேற்ப தம்மை சரிவர இசைவாக்கம் செய்யத் தவறும் மாணவருக்கு பிரச்சனைகள் தோற்றம் பெறுகின்றன. தொடர்ச்சியான தனியார் வகுப்புக்கள் காரணமாக பெற்றோருடன் உறவாட போதிய நேரம் இல்லாமையாலும், பாடசாலையில் கடைப்பிடிக்கப்படும் கடுமையான சட்ட திட்டங்களுக்குப் பயந்தும் தம் பிரச்சனைகளை பெரியோருக்கு தெரிவிப்பதில் மாணவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். வீட்டில் பெற்றோருடனான ஓர் குழந்தையின் உறவும; பாடசாலையில் ஆசிரியர் ஒருவருடனான ஓர் மாணவனின் உறவும் தளர்வடைந்த நிலையில் காணப்படுவதை இன்று பெரும்பாலும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இது விமர்சனத்திற்குரிய ஒரு விடயமாகும்.ஒரு மாணவனின் தனிப்பட்ட முன்னேற்றத்திலும், ஒரு சமுகத்தின் முன்னேற்றத்திலும், ஒரு நாட்டின் முன்னேற்றத்திலும் கல்வியானது அத்தியவசியமானதொன்று என்பதை மறுக்க முடியாது. ஆனால் கல்வி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதேயளவு ஓர் மாணவனின் உளநலமும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றே.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் அதே போல் ஒரு மாணவனின் உள நலம் விருத்தியடைந்திருந்தால் தான் அவனால் நாளை நாட்டிற்குத் தேவைப்படும் ஒரு நல்ல தலைவனாக உருவாக முடியும். ஓவ்வொரு மாணவனும் தனித்துவம் வாய்ந்தவன். ஆதலால் ஒவ்வொரு மாணவனின் திறமையறிந்து அதற்கேற்ப அவனை தயார் செய்ய வேண்டும். சமுக அந்தஸ்து மற்றும் பல்வேறு சமுகப்பிரிவினைகளை மையமாகக் கொண்டு மாணவர்கள் கையாளப்படும் விதம் இன்றும் இலைமறைகாயாக ஆங்காங்கே அரங்கேறி வருகின்றது. இவ்வாறான ஒரு சூழ்நிலையிலே மாணவர்கள் மனதில் தாழ்வு மனப்பாங்கு மற்றும் விரக்தி வித்திடப்படுகின்றது. அவர்களின் ஆளுமைவிருத்தி மழுங்கடிக்கப்படுகின்றது. இது விரும்பத்தக்க விடயமன்று, சீர் செய்யப்பட வேண்டிய விடயம். இவ்வாறான மாற்றத்தை உருவாக்க கல்விச் சமுகம், பெற்றோர்; பெரியோர் அனைவரும் ஒருமனதினராய் செயற்பட வேண்டும்.



' சரியாகும் சமுதாயம் தனியொருவன் கையில்

தனிமனிதன் தான் தன்னை சரிசெய்யும் நிலை வேண்டும்'

ஆதலால் சமுதாயத்தின் அங்கங்களான நாம் அனைவரும் எங்கள் தவறுகளை இனங்கண்டு அவற்றை சீர் செய்வதோடு சமுதாயத்தின் வளர்ச்சியிலும், நாளைய தலைவர்களான இன்றைய மாணவ சமுகத்தின் உருவாக்கத்திலும் அக்கறை கொண்டவர்களாய் எம் கடமைகளை சரிவர ஆற்றி விஞ்ஞானத்தை ஆக்கத்திற்கு வித்திட்டு வடுக்களும் - வலிகளும் நிறைந்த எம் கடந்த கால கசப்பான நினைவுகளை அத்திவாரமாகக் கொண்டு புதியதொரு வரலாறு படைப்போம், புதியதொரு உலகினை உருவாக்குவோம்.

நிக்கலின் ஸ்ரனிஷா அன்ரன்

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (25-Dec-15, 8:15 pm)
பார்வை : 1934

சிறந்த கட்டுரைகள்

மேலே