கழிவறைகள், தூய்மை இந்தியா திட்டம் பெரு நிறுவனங்களுக்கானவையா
கழிவறைகள், தூய்மை இந்தியா திட்டம் பெரு நிறுவனங்களுக்கானவையா?:
----------------------
நாடாளுமன்ற ராஜ்யசபாவில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது: மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் பெருநிறுவனங்களுக்கான பட்ஜெட் என்று கூறுகின்றனர். அப்படி என்றால் பள்ளிகளில் கட்டப்படும் கழிவறைகள் பெரு நிறுவனங்களுக்காகவா கட்டப்படுகின்றன? தூய்மை இந்தியா திட்டத்தின் அடிப்படை தூய்மையை பொதுமக்களுக்கு நாம் வழங்கவில்லையா? வீடு கட்டும் திட்டமும், ஜன் தன் யோஜனா திட்டமும் பெரு நிறுவனங்களுக்கான திட்டம் தானா? நாட்டில் உள்ள ஏழை மக்கள் நல்ல தரமான வாழ்க்கையை விரும்புகின்றனர்.
ஆகையால் தான் ஏழைகளுக்கு நல்ல வாழ்க்கை தர ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரு காலத்தில் பா.ஜ.க.வை உயர் வகுப்பினருக்கான கட்சி என்று சிலர் கூறினர். ஆனால் எனது வளர்ச்சியை கண்டவுடன் அந்த எண்ணத்தை தற்போது அவர்கள் மாற்றிக்கொண்டனர். இது போன்ற கதைகள் இப்போது பழங்கதைகள் ஆகிவிட்டன. இன்றைய நிலையில் பா.ஜ.க. உயர் வகுப்பினருக்கான கட்சியல்ல என்றும், இந்தி மொழி பேசுபவர்களுக்கான கட்சியல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னைக் கூட சிறைக்கு அனுப்புகிறோம் என்று 14 ஆண்டுகாலத்துக்கும் மேலாக மிரட்டியே வந்தனர். எதிர்கட்சிகளுடன் பேச்சு நடத்தி அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு மாநில அரசும், ஒவ்வொரு பிரதமரும், ஒவ்வொரு அரசும் காரணம் என்று செங்கோட்டையில் நிகழ்த்திய உரையில் நான் தெளிவாக குறிப்பிட்டேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நன்றி; தினகரன்