தூய்மை இந்தியா’ திட்ட ஓராண்டு விளம்பர செலவு ரூ94 கோடி

தூய்மை இந்தியா’ திட்ட ஓராண்டு விளம்பர செலவு ரூ.94 கோடி
-------------
பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் விளம்பரத்துக்காக கடந்த ஓராண்டில் ரூ.94 கோடியை மத்திய அரசு செலவிட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் தெரியவந்துள்ளது

இதுதொடர்பாக உத்தரப் பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்த சஞ்சய் சர்மா என்பவர் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

கடந்த 2014-15 நிதியாண்டில் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான விளம்பரம் மற்றும் பிரச்சாரத்துக்காக ரூ.2.15 கோடியை அரசு செலவிட்டுள்ளது. இதுபோல் அச்சு ஊடக விளம்பரத்துக்கு ரூ.70.8 லட்சமும், ஒலி மற்றும் காட்சி விளம்பரத்துக்கு ரூ.43.64 கோடியும், டிஏவிபி மூலம் தொலைக்கட்சி சேனல்களில் விளம்பரம் செய்ய ரூ.25.88 கோடியும், தூர்தர்ஷனுக்கு ரூ.16.99 கோடியும், வானொலிக்கு ரூ.5.42 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கான நிதி மாவட்ட நிர்வாகம் மூலம் கிராம பஞ்சாயத்துகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சுகாதார திட்டம் மாநில அரசு பட்டியலுக்குட்பட்டது. எனவே, இதை செயல்படுத்த வேண்டியது மாநில அரசுதான்.

மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையால் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முந்தைய ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்டு வந்த நிர்மல் பாரத் அபியான் திட்டம்தான் இப்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு தொழிநுட்ப மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள ஊரகப் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம். கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டத்துக்காக 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.

Keywords: தூய்மை இந்தியா திட்டம், விளம்பரச் செலவு, மோடி அரசு, ஆர்டிஐ தகவல்

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (26-Dec-15, 9:07 am)
பார்வை : 422

மேலே