அலைகளின் கொடூரம் - சுனாமி

மௌனத்தின் உச்சம்
எல்லை மீறி பொங்கி எழ
உண்டான விபரீதம், சுனாமி
இன்னுமென் கண்முன்னே..!
காலங்கள் மறக்கச் செய்யும்
காயங்களில் நீ தந்த வடுக்கள்
நெஞ்சத்துள் அப்படியே மீதியாக..!

முன் தினம் துயில் கொண்ட விழிகள்
மூடிக்கொண்டது நிரந்தரமாகவே,..
பிரிவினை தாங்காத இதயம் - பல
முடித்துக்கொண்டது இயக்கத்தையே..
இடைப்பட்ட நூறாயிரம் உயிர்களோடு
உறைந்துவிட்டது சோகத்தின் நிழல்!..

உன் கோரத்தின் கோலத்தில்
பாசத்தின் வேர்களை
மண்ணுக்குள் புதைத்திட்டாய்,..
விதை கொண்டு எழும்
மரம் போலன்று ,
விடை கொண்டு விழும்
உயிர் கூடாக..!

ஆசை கொண்டு உன்னை
முத்தமிட்ட பாதங்களை
சுழல் கொண்டு சுழற்றிட்டாய்,..
ஈரத்தையே உன்னில் கொண்ட
நீயும் எப்படித்தான் - அன்று
நெஞ்சின் ஈரம் தொலைத்திட்டாய்!..

போதும் உன் ஒற்றை செயல்
பூமியில் வழிந்தோடியது
குருதிக் கடல்...
மனிதம் கலைந்த மண்ணில்
புனிதம் சேர்க்க வந்தாயா?..
மழலை தொலைத்த மடிக்கு
பதிலாய் எதை நீ தந்தாயோ!..

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (26-Dec-15, 10:34 am)
பார்வை : 2399

மேலே