வண்டிற்சவாரி
வண்டிற்சவாரி
-----------------
அ.செ.முருகானந்தன்
--------------------
இறைப்பு ஆரம்பமாயிற்று.
ஆளை ஆள் தெரியாத இருட்டு. துலாவில் இரண்டுபேர் ஏறினார்கள். பட்டைக் கொடியை ஒருத்தன் பிடித்தான். பரந்து கிடந்த புகையிலைத் தோட்டத்துள்ளே இன்னொருத்தன் நுழைந்தான். துலா மேலுங் கீழுமாக ஏறி இறங்கிற்று. 'ஆறுமுக வேலனுக்கண்ணனாமடி' என்று துலாவில் நின்ற ஒருத்தன் ஆரம்பித்தான். மற்ற இருவரும் அதற்குப் பிற்பாட்டு இழுத்தார்கள்.
இந்த அமளியில் பக்கத்தே பூவசரசு மரத்தில் அரைக்கண் உறக்கம் உறங்கிக் கொண்டிருந்த சேவல் கோழி ஒன்று சிறகடித்துக் கூவியது. அதைப் பின்பற்றி அந்த வட்டாரத்திலுள்ள ஒன்றிரண்டு கோழிகள் ஒவ்வொன்றாகக் கரகரக்கத் தொடங்கின. இறைப்புக்காரரின் கச்சேரிக்குப் பொருத்தமான பின்னணியாக அது வாய்த்து விட்டது.
ஒரு மணி கழிந்தது. இருள் சிரித்தது. கீழ்வானம் வர்ணஜாலம் காட்டிற்று. 'கச்சேரி' ஸ்வரம் இறங்கி உள்ளே உள்ளே போய்க்கொண்டிருந்தது. காலை இளந் தென்றலில் புகையிலைக் கன்றுகள் சிலுசிலுத்தன. பசுமை சொட்டிக்கொண்டிருந்த அவற்றின் இலைகள் கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாகவிருந்தன. ஏறி இறங்கிச் சோர்ந்து போனவர்களுக்கு இந்தக் காட்சி ஒருவகை உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் அளித்தது.
மண்காவி ஏறிய கொடுக்கு இடுப்பில்: அதே செம்பாட்டு நிறத்தில் பாதித் தலையை மூடிய ஒரு 'தலைப்பா': வாயில் ஒரு குறைச் சுருட்டு, தோளில் ஒரு மண்வெட்டி இத்தனை அலங்காரத்தோடும் ஒருத்தன் வந்தான்.
இறைப்பு அமைதியாய்ப் போய்க் கொண்டிருந்தது.
'கூ.....ய் எங்கே..... தண்ணியைக் காணவில்லை....'
தூரத்தே புகையிலைக் காட்டிலிருந்து திடீரென்று இப்படி ஒரு குரல் எழும்பிற்று. எல்லோரும் ஒரு கணம் திடுக்கிட்டுப் போய் நாற்புறமும் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். அள்ளி ஊற்றிய தண்ணீர் ஒரு பக்கத்திலே உடைத்து ஆறாகப் பெருக்கிக் கொண்டிருந்தது. 'ஓடு ஓடு அங்கே உடைத்து விட்டது. ஓடிப்போ' என்று மூன்று குரல்கள் அதைப் பார்த்துக்கத்தின. மண்வெட்டி கொண்டு வந்தவன் ஓடிப்போய் உடைப்புக்கு மண்வெட்டிப் போட்டு அதை அடைத்துவிட்டுத் திரும்பி வந்தான். ஸ்தம்பித்துப் போயிருந்த இறைப்பு மறுபடியும் ஓடத் தொடங்கிற்று.
'சின்னத்தம்பி நல்ல சமயத்தில் வந்தாயப்பா!' என்று உபசாரங் கூறினான் இறைத்துக்கொண்டு நின்றவன்.
'அது கிடக்கட்டும் அண்ணே! வல்லிபுரக் கோயிலுக்கு எப்போ வண்டில் பூட்டிறியள்? அல்லது இம்முறை பூட்டாமலே விடுகிற யோசனையே....?'
'நல்லாயிருக்கு! வரிசத்திலே ஒருக்கா வருகிற இதைக்கூட விட முடியுமோ? அதுவும் போக....'
'ஓ! சொன்னாப்போல் இந்தமுறை சவாரிச் சங்கதி ஒண்டும் இருக்குதல்லோ...?'
'வேறென்ன? என்னவோ குருட்டுவாக்கிலே அன்றைக்குத் தச்சன் காட்டில் காரியம் பார்த்து விட்டான்கள். வாற சனிக்கிழமை அந்தக் கெட்டித்தனத்தைக் காட்டட்டும் பார்ப்போம். சனிக்கிழமை பூச்சியன்கள் கழுகன் சோடிகளை இறக்கி எடுக்காவிட்டால் நான் இந்தச் சவாரி வியாபாரத்தையே அன்றோடு கைகழுவி விடுகிறேன்....'
'சரி சரி, எல்லாம் நடக்கட்டும். ஆனால் சண்டை கலாதி ஒண்டும் இல்லாமல் நடந்து முடியட்டும்....'
இத்துடன் சின்னத்தம்பி அவ்விடத்தை விட்டுக் 'கழண்டு' விட்டான். தூரத்தே புகையிலைக் கன்றுகளுக்குள்ளிருந்து மனித சாரீரம் எட்டக் கூடிய உச்சஸ்தாயியில் 'கூ....ய்' என்றொரு குரல் பிறந்தது. இறைப்பு நின்றது.
11
அமாவாசை வந்த பதின்மூன்றாம் நாள். இரவு முழுவதும் ஜெகஜ்ஜோதியான நிலவு. யாழ்ப்பாணத்தின் வடகோடியிலே பரந்து கிடக்கும் அந்த நீண்ட மணற் பிரதேசத்தைப் பகற்காலத்தில் வெயில் தகித்து அக்கினிக் குண்டமாக்கி விடும். ஆனால், வளர்பிறை காலத்து இரவோ இதற்கு மாறான நிலைமை. வெண்மணற் பிரதேசம் முழுவதிலும் சந்திரன் தனது அமுத கிரணங்களை வாரி இறைத்து அதைக் குளிர்ச்சி மயமாக்கிவிடும். கண்ணுக்கெட்டிய தூரம் பாற்கடலைப்போல் பரந்து கிடக்கும் மணல்வெளியை இரண்டாகப் பிளந்து செல்லும் அந்தத் தெரு வழியே நிலாக் காலத்தில் மாட்டு வண்டிப் பிரயாணஞ் செய்வதில் ஒரு தனி இன்பம் உண்டு. அந்த இரண்டுக்குமே ஒரு தனிப்பொருத்தம் என்று சொல்லவேண்டும்.
வருஷம் முந்நூற்றி அறுபத்தைந்து நாளும் மண் கிண்டி, தண்ணீர் ஊற்றி, அலுத்துப்போகும் தோட்டக்காரனுக்கு மனச்சந்தோஷத்துக்கும், ஆறுதலுக்கும் உகந்த ஓர் அருமையான பிரயாணம் இது. வழிநெடுகப் பால் போன்ற வெண்ணிலவு: வானமும் பூமியும் ஒன்றாகும் ஒரே வெளி. இவற்றைக் கடந்து கோயிலை அடைந்தால் அங்கேயும் கோயிலைச் சுற்றிலும் ஒரே வெண்மணல் வெளியும், பால் நிலவும் தென்றற் காற்றும்தான். இவற்றோடு கோவிலிலேயிருந்து நாதசுரம் இன்னிசையை பிழிந்து மிதந்து வரும் தென்றலிலே அனுப்பிக் கொண்டிருக்கும். பாமரன் உள்ளத்தின் மலர்ச்சிக்கும் குதூகலத்துக்கும் இன்னும் என்ன வேண்டும்?
வருஷா வருஷம் வல்லிபுரக் கோயிருக்குக் கூட்டம் கூட்டமாக சனங்கள் அள்ளுப்படுவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. வல்லிபுரப் பெருமான் மேல் உள்ள பக்தி சிரத்தையினால் அல்ல. அந்த மணற்காட்டுக்கும், அங்கே எறிக்கிற வெண்நிலவுக்கும், ஆடல் பாடலுக்கும்தான். சுருங்கச் சொன்னால் அன்றைய தினம் வல்லிபுரப் பெருமாளுக்குக்கூட கோவிலுக்குள் அடைபட்டுக்கிடக்க மனம் வராது. தென்றலும், இன்னிசையும், வெண்ணிலவும், பால் மணலும் சேர்ந்து வல்லிபுரக் கோவிலை – பகலில் கண்கொண்டு பார்க்க முடியாத காண்டாவனத்தை ஓர் அமர உலகமாக மாற்றிவிடும்.
இந்த 'அமர உலகை'த் தரிசிக்க வருகின்ற பக்தகோடிகளின் வழிப்பயண வண்டி ஒன்று. அதைப் பார்க்க எவ்வளவோ சந்தோஷமாயிருக்கிறது! ஒரு பெரிய குடும்பம் தாராளமாக வசிக்கக்கூடிய வீடு அது! மேல்மாடிகூட அதில் உண்டு. சட்டி, பானை, பெட்டி, படுக்கை எல்லாம் வண்டிக்கு மேலேயும், கீழேயும் ஊஞ்சலாடுகின்றன. வண்டிக்குள்ளே வைக்கோல் மெத்தை மேலே புருஷன், மனைவி, தாய், பிள்ளை, பேரன், பேத்தி எல்லோரும் இருந்து கதைத்துச் சிரித்துக் கொள்கிறார்கள். மேல் மாடியிலே இரண்டொரு குழந்தைகள் தூங்குகின்றன. இன்னொரு சிறு குழந்தைக்குப் பசி. அதற்குத் தாயார் சோறு பிசைந்து கொடுக்கிறாள். இத்தனை வைபவங்களுடன் வண்டி ஊர்ந்து ஊர்ந்து போகிறது.
'ஷூட்' மடித்த மோட்டார்கள் பாட்டோடும் தாளத்தோடும் பறக்கின்றன. அவற்றைப் பின்பற்றி சைக்கிள் வண்டிகளும் ஒருபுறம் கிணுகிணுத்துக்கொண்டு ஓடுகின்றன. கால்நடைப் பக்தகோடிகள் பாட்டுக் கச்சேரி, சிரிப்புக் கச்சேரி, கூக்குரல் கச்சேரி எல்லாவற்றோடும் கூட்டங் கூட்டமாகப் போகிறார்கள். மிருகத்துக்கும். மனிதனுக்கும், மெஷீனுக்கும் வெண்ணிலவு ஒரே அளவாகப் பொழிகின்றது. வழி நெடுக இப்படியே உல்லாசமான ஊர்வலம். இன்னும் சிறிது மேலே போனால் இந்த இயற்கை அற்புதத்தால் உற்சாகம் மேலிட்டுவிட்ட பேர்வழிகளைப் பார்க்கலாம். வாலிபத் தோற்றங் கொண்ட மொட்டை வண்டிகள் நூற்றுக்கணக்கில் குவிந்து நிற்கின்றன. வண்டிச்சவாரி நடக்கப் போகின்றது.
சரி, இரண்டு வண்டிகள் முன்னே வந்து விட்டன. மாடுகள் பூட்டியாய் விட்டன. குத்தூசி, சவுக்கு, துவரங்கம்பு – எல்லாம் அவரவர் கைக்கு வந்துவிட்டன. வண்டி ஓட்டுகிறவர்கள் ஆசனங்களில் ஏறிவிட்டார்கள்.
'சின்னத்தம்பி!' என்கிறான் முன் வண்டிக்காரச் சாரதி.
'சரி, சரி எல்லாம் தெரியும்' என்றான் வண்டியில் சவுக்கும் கையுமாக நின்ற ஒருத்தன்.
வண்டிகள் கிளம்பிவிட்டன. 'கடகட'வென்ற முழக்கத்தோடு ஒன்றையொன்று உராய்ந்துகொண்டு அந்தரநிலையில் பறக்கின்றன. இதோ அதோ? சவுக்குகள் 'நொய் நொய்' என்று கீச்சிடுகின்றன. குத்தூசிக்காரன் வண்டியில் படுத்துக்கொண்டு சாவகாசமாக மாடுகளுக்கு ஊசி ஏற்றினான். துவரங் கம்புகள் 'சடார்' 'சடார்' என்று விழுந்தன.
கழுத்தில் வெள்ளைப் புள்ளிகள் விழுந்த வண்டி மாடுகள். இவைதான் பூச்சியன்களோ? முன் வண்டியைத் தாண்டிவிடுகிற சமயம் - இதோ தாண்டிவிட்டன. ஒரு நொடிக்குள்.... இதோ....
'ஐயோ! அம்மா!'
'பூச்சியன் வண்டியிலிருந்து ஒருத்தன் சுருண்டு கீழே விழுந்தான்.
111
மல்லாகம் பொலீஸ் கோர்ட்டில் அன்றைக்கு ஒரு முக்கியமான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இத்தனை நாளும் அதற்குப் போடப்பட்ட தவணைக்கு ஒரு அளவில்லை. இரண்டு கட்சிக்காரரும் 'வேண்டாம் அப்பா இந்தக் கோர்ட்டு விவகாரம்' என்று சொல்லிக் களைத்துப் போகும் சமயத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்குக் கொடுத்தது, அதாவது வாதி கந்தையா: பூச்சியன் கந்தையா என்றால்தான் தெரியும். சவாரி உலகில் பூச்சியன் கந்தையா ஒரு மங்காத தீபம்! எதிரி, கழுகன் செல்லையாவும் சின்னத்தம்பியும். முறைப்பாடு என்னவென்றால், அவர்கள் இருவரும் வல்லிபுரக் கோயிலுக்குப் போகும் வழியில் வண்டிச்சவாரி நடக்கும்போது தன்னைச் சவுக்கால் அடித்துப் படுகாயப்படுத்தியதுடன் பிராணாபத்தும் உண்டாக்க எத்தனித்தது என்பது.
சின்னத்தம்பியும் 'கழுகன்' செல்லையாவும் கோர்ட்டுப் புள்ளிகள். அதாவது இப்படி எத்தனை எத்தனையோ வழக்குகளுக்கும், முறைப்பாடுகளுக்கும் வகை சொல்லிக் கைதேர்ந்தவர்கள். அப்புக்காத்துமாரையும், பிரக்கிராசிமாரையும், கோட்டை முனியப்பரையும் கைக்குள் போட்டுக்கொண்டு வானத்தை வில்லாகவும், மணலைக் கயிறாகவும் திரித்துவிடக் கூடியவர்கள். சட்ட உலகத்தின் நுட்பங்களையும் சூதுவாதுகளையும் தெரிந்தவர்கள். கந்தையாவுக்கோ இவையெல்லாம் ஓடாது. ஒரு பாவி. சின்னத்தம்பியும் செல்லையாவும் செய்த அட்டூழியத்தைப் பொறுக்கமுடியாமல் போய் வழக்குத் தொடுத்துவிட்டார். நீதி அநீதியைத் தெய்வம் கேட்கட்டும் என்று சிவனே என்று இருந்துவிட்டார். இந்தக் காலத்தில் நீதி அநீதியைக் கேட்பவர்கள் யார் என்பது செல்லையா கோஷ்டிக்குத் தெரியும். அவர்கள் அதற்கான வேலையை இரவுபகலாகச் செய்து வந்தார்கள்.
விசாரணை தினத்தன்று செல்லையாவும் சின்னத்தம்பியும் விசாரணை செய்யப்பட்டார்கள். அவர்கள் சொல்லியது: தச்சன் காட்டில் நடந்த சவாரியில் கந்தையாவின் பேரான பூச்சியன் சோடிகளை என்னுடைய கழுகன் இறக்கிவிட்டன. அதிலிருந்து அவருக்கு எங்கள் மேல் பெரிய ஆத்திரம். வல்லிபுரக் கோயிலுக்குப் போகும்போது அவரும் அவரோடு வண்டியிலிருந்தவர்களும் நன்றாகக் குடித்துவிட்டு வந்து என்னை மாடுவிடும்படி கேட்டார்கள். நான் முதலில் மறுத்துவிட்டேன். அவர்களுடைய தொந்தரவு பொறுக்க முடியாமல் பின்னர் ஒப்புக்கொண்டு மாடு பூட்டினேன். என்னுடைய வண்டில்தான் முன்னுக்குப் போனது. கந்தையாவின் வண்டில் பின்னுக்கு. சவாரி ஓடும்போது கந்தையா வண்;டியிலிருந்து விழுந்ததைப் பார்த்தேன். வேறொன்றும் எனக்குத் தெரியாது.
கந்தையாவின் வண்டியில் அன்று போன இரண்டொருத்தன்கள் இந்த வாக்குமூலத்துக்கு 'ஓம்' வைத்துச் சாட்சியங் கூறினார்கள். அதாவது தாங்கள் அன்றைக்குக் குடித்திருந்ததாக ஒப்புக் கொண்டார்கள்! உண்மையில் அன்றைக்கு அவர்கள் ஒருவருமே குடித்திருக்கவில்லை. குடியாமலே எத்தனையோ ஜனங்களுக்கு முன்னால் தாங்கள் 'குடியர்கள்' என்ற பட்டத்தைத் தங்களுக்குத் தாங்களே சூட்டத் துணிந்து விட்டார்கள்! விநோதப் பிறவிகள்!
வழக்கு முடிவைச் சொல்லவேண்டியதில்லை. செல்லையா கோஷ்டியினர் சொல்லியது போல, 'கந்தையாவின் வழக்குப் பறந்து போய்விட்டது!'
பட்டணத்து இரைச்சலுக்கும் பரபரப்புக்கும் ஒரு சிறிது விலகி பரந்து கிடக்கும் பசும்புல் வெளியிலே ஒரு கோவில். சிறிய கட்டிடம். டச்சுக்காரன் கட்டிவிட்ட அந்தப் பிரமாண்டமான கோட்டைக்கு முன்னாலே இந்தக் கோயிலின் சிறுமையை நன்றாக உணரலாம். இதுதான் கோட்டையடி முனியப்பர் வாசஸ்தலம். யாழ்ப்பாணத்திலே கோட்டுப் புள்ளிகளின் 'கண்கண்ட தெய்வம்.'
திருவிழா ஒன்று நடைபெறுகிறது. வுழக்கில் வென்ற சின்னத்தம்பி செல்லையா கோஷ்டியாரின் 'உபயம்'. திருவிழாவின் கலாதியைச் சொல்லவேண்டாம். செல்லையா கோஷ்டியாருக்குச் சாதகமாக வழக்கைத் தள்ளிவிட்ட அந்த நீதிபதி அவரை அறியாமலே பதினைந்து ஆடு கோழிகளின் தலையெழுத்துக்கும் அன்றைக்குத் தீர்ப்பளித்துவிட்டார்.
வழக்கு வெற்றியைக் கொண்டாடுவதற்கு சின்னத்தம்பி கோஷ்டிக்கு இந்த ஒன்று மட்டும் திருப்தியளிக்கவில்லை. இது சாதாரணமாக நடத்தும் ஒரு சில்லறைக் காரியம்.
கந்தையாவைத் தாங்கள் வழக்கில் தோற்கடித்துவிட்டால் ஊரிலே உள்ள வைரவர் கோவிலில் ஒரு பெரிய திருவிழாச் செய்வதாக வைரவசுவாமிக்கு வேண்டுதல் செய்திருந்தார் செல்லையா. 'பொல்லாத வைரவர்' ஆகையால் அவர்கள் அவரை அலட்சியம் செய்வதற்கில்லை.
ஒரு பெரிய திருவிழாவிற்கு ஏற்பாடு செய்தார்கள். பெரிய மேளங்கள், சின்ன மேளங்கள் அத்தனையும், முத்துச்சப்பறம், லைட்மெஷின் அத்தனையும் பங்குபற்ற இரவுபகலாக ஒருநாள் முழுவதும் திருவிழா நடைபெற்றது. வாணவேடிக்கைக்கு நூற்றுக்கணக்கில் ரூபா ஒதுக்கியிருந்தார்கள்.
இவையெல்லாம் நடந்து முடிந்து ஒரு கிழமைக்குப் பின்,
கழுகன் செல்லையா வீட்டில், மனைவி புருஷனைக் கேட்கிறாள்:
'அண்டைக்கு திருவிழாவிலே வேலனை அடித்துப் போட்டீர்களாமே, எதற்காக?'
'எதற்காகவா? சபைப் பழக்கம் தெரியாத மாடுகள்! கோயிலுக்கு உள்ளே வந்து நுழைந்து விடுவான் போல நின்று எட்டி எட்டிப் பார்த்தானே.....'
'அதுபோக, பெட்டிக்குள்ளே கழட்டிவைத்த என் கழுத்துக்கொடி எங்கே? வைத்த இடத்தில் காணவில்லை.'
செல்லையா ஆடு திருடிய கள்ளனைப் போல முழிசினார்.
இந்தச் சமயத்தில் தெருவிலே இரண்டுபேர் கதைத்துக்கொண்டு போனார்கள்:
'பூச்சியன் கந்தையாவின் திமிரை செல்லையா அண்ணை அடக்கிப் போட்டார். அவன் இனிமேல் தலை தூக்கமாட்டான். அண்டைக்கு நடந்த திருவிழாவைப் பாத்தியா? ஒரு திருவிழாவும் இப்படி நடக்கேல்லை. எப்படியானாலும் செல்லையா அண்ணர் ஆள் கெட்டிதான்...'
சகதர்மிணி அம்மாளுக்கு முன்னால் அஞ்சறிவும் ஒடுங்கிப்போய் நின்ற செல்லையா 'அண்ணை'க்கு மனங் குளிர்ந்தது. தான் எங்கேயோ ஆகாசத்தில் பறப்பது போன்ற உணர்ச்சி அவருக்கு உண்டாயிற்று.
'ஈழகேசரி'