மலரும் மழலைகள்

நீ விளையாடும் பொழுதுகளில்
பொம்மைகளும் உயிர் பெற்று விடுகிறது
.
நீ உறங்கும் பொழுதுகளில்
உறங்கிக் கொள்கிறது கொஞ்சம்
பொம்மைகளோடு சேர்ந்து வீடும்
.
நீ அழும் பொழுதுகளில்
அழவே செய்கிறது சிதறிக் கிடக்கும் பொம்மைகளும்
சமாதானம் செய்யும் என் மனமும்
.
வெள்ளையடிக்க மனமில்லை வீட்டுச் சுவரை
லியானர்டோ டாவின்சியை தோற்கடித்த ஓவியங்கள்
உன் பிஞ்சு விரல்களின் கிறுக்கல்களில்
.
இரு கைகளால் கண்களை மூடி
கள்ள அழுகை அழுகிறேன்
கைகளைப் பிடித்து இழுத்து முகம் பார்க்கிறாய்
நானோ கடவுளைப் பார்க்கிறேன்
.
நீ தத்தி தத்தி நடக்கும் வேளைகளில்
கூட்டனி சேர்ந்துக் கொள்கிறது என் மனம்
உன் அரைச் சலங்கையோடும் கால் கொழுசோடும்
.
தவம் கிடக்கதான் செய்கிறது தாய் மொழிகளெலாம்
நானா.. கூகா... பப்பா... மாமு.. என
நீ தப்பு தப்பாய் மழலை மொழிய...
.
கவிதைகள் சண்டையிட்டால் இப்படிதான் இருக்கும் போல
கிழித்துக் விளையாடுகிறாய் நானெழுதிய கவிதைகளை
தோற்றுதான் போகிறது என் கவிதைகள்
மழலையெனும் ஆகச்சிறந்த கவிதையின் கைகளில்..
.
உறக்கத்தில் சிரிக்கிறாய் நீ
எனக்கு இப்படிதான் தோன்றுகிறது
மனிதர்களுக்கு பயந்து ஒளிந்த கடவுள்
மழலையோடு விளையாட வந்திருப்பார் போல...
.

எழுதியவர் : மணி அமரன் (27-Dec-15, 7:22 am)
Tanglish : malarum mazhalaikal
பார்வை : 772

மேலே