யாசகன்

கூவிடும் குயிலும் முகிலும்
குதித்திடும் மயிலும் மரமும்
தாவிடும் மரையும் மலையும்
தழைத்திடும் தளிரும் விதையும்
அன்னமும் அமுதும் தேனும்
ஆனையும் அளையின் பாம்பும்
புன்னையின் நிழலும் குளிரும்
தென்னையின் நீரும் கனியும்
புனலும் பூக்களின் மனமும்
புதுக்குழலும் குழவியின் குரலும்
மணலும் மதுவின் சுவையும்
மாக்கடலும் கலைகளின் கவினும்

விண்ணும் வீணையின் பண்ணும்
விளைமுத்தும் முளைத்திடும் நிலவும்
எண்ணும் எழுநிற வில்லும்
எழில்விழியும் விரிந்திடும் சுடரும்
கன்னியும் களிசேர்க் காதலும்
கழிப்பொன்னும் பொழிந்திடும் மழையும்
வன்னியும் வளஞ்சேர் வேம்பும்
வாழ்ந்திடும் இன்னும் பலவும்
தம்மின் தன்மைகள் யாவையும்
தமிழ்தனில் இயம்பிடக் கேட்டல்
நம்செவி நுழைவது நோக்கி
நகைத்திடும் நற்றமிழ் அன்னோய் !

பொங்கிடும் எண்ணம் யாவும்
பொழிந்திடச் செய்யும் வண்ணம்
தங்கிடும் திருக்கொள் தமிழில்
தனிக்கவிஎனத் தந்திடல் வேண்டும்
இப்பணிச் செய்யும் வண்ணம்
இளந்தமிழ் போற்றும் வண்ணம்
ஒப்பிலா உந்தன் புகழை
ஒலிஉலகனைத்தும் உணர்த்தும் வண்ணம்
முப்பெரும் சங்கங்கள் வளர்த்த
முதுதமிழ் முழுமையாம் தன்னை
இச்சிறுத் தொண்டன் இளையோனெமக்கும்
இக்கணம் யாசித்தருள்வாய் தாயே!

எழுதியவர் : சுரேஷ்குமார் (29-Dec-15, 9:01 pm)
பார்வை : 91

மேலே