தாயின் மடியில்

அம்மா !
கர்ப்பப்பை நோக
முன்னூறு நாட்கள்
எட்டி எட்டி உதைக்கிறேன்
நீ - என் மகன்
துடிப்பானவன் என்கிறாய்
தாங்கித் தாங்கி இன்புறுகிறாய் !
பாறாங்கல்லாய்
உன்னை அழுத்தி பாரமாகிறேன்
"கொடிக்கு காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை
தாய்க்கு பாரமா "
கோபத்துடன் பாடுகிறாய் .
உன்னை அடியோடு பிசைந்து
சுழன்று கழன்று
பூமி பார்க்க எத்தனிக்கிறேன்
மூச்சடக்கி ஈன்று
உயிர் மீண்டு
என்னோடு மீண்டும்
நீயும் பிறக்கிறாய் .
மடி வைத்து
மாசற்ற மனம் வளர்த்து
நிலாக்காட்டி - என்
நிறை கூட்டி
அடி வைக்க பயிற்றுவித்து
விடி வெள்ளியாக்கிவிட - நீ
பொடியாகிப் போனவளே
உன் மடியில் தலை வைக்க
தவம் என்ன செய்தேன் யான் ......!
இடியேறு வந்து
என்னை
எரித்து சாம்பலாக்காதோ
கொடி மலரே !
கூடி நின்ற
குழுமத்திலே - உனக்கு
கொள்ளி வைத்த இப் பாதகனை.....!
முடியாது.............!
உன் மடியில் தவழ்ந்திருக்கும்
சுகமெனக்கு இனியேது.?
துயர் துடைக்க
உன் மடிக்கு நிகரேது ..?
அம்மா !
என் மடியில்
நீ தவழ்ந்தால்
இப்பிறப்பிற்கு இணையேது........!
- பிரியத்தமிழ் -