நீயுமா

கவிழ்ந்து கிடக்கும்
உன் எண்ணக்
குறிப்புக்களை
இமைகளால் சொருகி
மெல்ல இழுக்கிறேன்

என்
உணர்வுத்
தழுவல்கள்
என்னைப் போல
உன் விழிக்கணைகளை
விலத்தி விடுவதாய் இல்லை

சொருகுப்பட்ட
கண்ணசைவுகள்
எடுபட முடியாமல்
என் உன்
ஈர்ப்பு விசை வளர்ந்து
எல்லை கடக்கிறது

இமைகள்
ஒட்டிக் கொண்டே
தழுவமுடியாமல்
நினைவுக்
கதகதப்புக்கள்
உட்கார்ந்து
உதறிக் கொல்கிறது

நடுநிசியின்
நிசப்தத்தில்
நர்த்தனத்தில் சுழலும்
விழிகளுக்குள்
உன்
உயிரோட்டக் கனவுகள்
வழிந்து கிடக்கிறது

உன் மென்மையின்
அருகாமை
பிரபஞ்சத்தின்
தளிர்த்தலில்
ஓர்
இளவேனில் என்பது
கருகும் கருக்கலில்
தெரிகிறது

உன் இதழ்
விரித்த புன்னகையோ
என்னை
இளைக்க வைத்த
பிரிவின்
ரேகைகளை
வெடிக்க வைக்கிறது

உன் கன்னம் செதுக்கி
பிரம்மனும்
தடுமாறி வீழ்ந்த குழியில்
என்னை
தடக்கி வீழ்த்த
வன்முறை
ஏன் செய்தாய்

பிறை நிலவை உன்
நிழலுக்கு நிறமிட
அனுப்பியது யார்
தளிர்ப்பூவின்
மென்னிதழை உன்
செவ்விதயத்தினுள்
செருகியது யார்

துளைகளிட்ட
கனத்த மனதோடு
சலனமற்ற
குழந்தை இருட்டில்
நீயும் நானும்
வெளிச்சமாகிறோம்
நம் உணர்வுகள் மட்டும்
இருளுக்குள் நிழல்களாகிறது

சாரல் தெளிக்க
நான் நனைகிறேன்
குற்றும் ஊசிகளாய்
துளைக்கிறது பனி முட்கள்
ஆனாலும்
உச்சமாய் கொதிக்கிறது
இருதயமும் இருப்பும்

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (30-Dec-15, 11:13 pm)
பார்வை : 140

மேலே