புத்தாண்டு பூக்கும் பொலிந்து
எழுசீர் விருத்தம்
இரண்டாயி ரத்துப் பதினைந்தா மாண்டு
---இனிதாகக் கொடுத்த தெல்லாம்
திரளாக நம்மில் திணவோடு நெஞ்சில்
---திமிராட்டம் போடும் நேரம்
வரமாக இங்கே வருகின்றாள் கன்னி
---வளமான புத்தான் டென்றே
தரமான எண்ணம் தலைமீது கொள்வோம்
---தருவாளே யாவும் நன்றே !
சிலபேர்க்கும் இந்தப் புத்தாண்டி னிக்கும்
---சிலபேர்க்கோ இனிமை குன்றும்
சிலபேர்க்கு நல்ல விடியல்கள் நேரும்
---சிலபேர்க்கோ இரவு சூழும்
சிலபேர்க்கு தெய்வம் சிறந்தவை நல்கும்
---சிலபேரின் மடமை கொல்லும்
உலகத்தில் உண்மை அதுகொண்டால் வாழும்
---ஒருநாளும் புத்தான் டன்றோ !
-விவேக்பாரதி