காட்சிப் பிழைகள் - 21

உமர் கய்யாமின் ஒப்புமை உணர்வில்
உயிரில்லாத என் பயணம்.
உன் கண்கள் வீசிடும் கசல் கண்ணிகளில்
தினம் தடுக்கி விழுகிறது.
சாய்ந்திட உன் தோள் தருவாயா
சோக சுர யாழ் தருவாயா ?

மகரந்த யாழுக்கு மணிச்சங்கு
கழுத்தெப்படி என
மகரந்த மலர்களைக் கேட்டேன்
மலராத மொட்டுகள்
நாணி நகைக்கிறது
சிதறிப் போகிறது உறைபனி முத்துகள்

சிந்துவும் ஹரப்பாவும்
உன் பின்னலில் தொங்கும்
”நாகரீகத் தொட்டில்கள்”
மொகஞ்சதாரோ மட்டும்
முடிக்குள் மறைந்து கிடக்கிறது.
மேகமூட்டம் இன்னும் கலையவில்லை.

அருவி அலைகளில் ஆடைகட்டி
மீன்களின் சகவாசத்தோடு
வண்டுதுளை மூங்கிலிசையில்
கந்தர்வ மண சுகவாசம்.
பிரித்தது கிரகக் கோளாறா புரியவில்லை.
கிறக்க கோளாறு மெய்யானது.

பெளர்ணமி நிலவிறங்கிய
அரபுநாட்டு பாலை நிலப் பேரிச்சை நீ
என் முல்லை நில இதய வயலுக்குள்
எதை விதைத்துப் போனாய் ?
அறுவடை அடுத்த நாளே.
நெல்லுக்குப் பதிலாய்
பெரும் இச்சை பேரிச்சைகள்.

புருவமும் பருவமும் சேர்ந்து
வளைக்கப்பட்ட
உன் விழிக்கணை ஒரு சக்கர வியூகம்.
இதில் தப்பி வருவேனென்று
நம்பிக்கை இனியில்லை எனக்கு.
இறந்தும் இருக்கிறேன் எப்போதும் உனக்குள்

எண்ணங்களின் காதல் முத்திரைகளை
விஷ முத்தங்களாய்
இதயத்தில் பதித்தாய்.
சவ்வூடு பரவும் அதன் வீரியத்தில்
சாமரப் போரின் என் வெற்றி.
உன் இதய இணையத்தில் அல்ல
சவப்பெட்டி மூடிக்குள்.

சுடுநெல் வாடையின் சுகங்களை
மட்டும் அறிந்த எனக்கினி
உன் நெடுநல்வாடையின்
சுகந்தங்களெப்படி சாத்தியமாகும்...!
சுவாச துவாரங்கள் அடைக்கப்பட்ட
அஃறிணையாய் நான். .

நாகரீகம் நுழையாத நைல் நதியின்
முகத்துவாரம் நீ.
மனம் மட்டும் அலையடுக்கிய
பாலை மணற் பரப்பாய்.
தோண்டிப்பார்
தண்ணீருக்குப் பதிலாய்
என் எலும்புகள் தென்படலாம்
தொல்லியல் சின்னங்களாய். !

என் உயிரின் சுவாசத்திடம்
வினவும் உன் விற்புருவ தாளங்களுக்கு
ஒற்றை வரியில்
பதில் சொல்லத் தெரிவதில்லை...
உன்னையே சுற்றித்திரியும்
மொழியிழந்த என் உயிரின்
மூச்சுக்காற்றிடம்
நீயே கேட்டுத் தெரிந்து கொள்.
இனி மெளன மொழிகளும் சாகட்டும்

கண்களில்லா இரத்த அணுக்கள்
பஞ்சபூதங்களிடம்
பார்வை வரம் வேண்டி
காத்திருக்கின்றன.
உயிர் பிரியுமுன்
உன் வரவைச் சொல்லி வை.
இறுதி வளர்சிதை மாற்றம்
வளரும் சிதையிலும் நடந்தேறக் கூடும்.

எங்கெங்கோ புதையுண்ட
மொத்த நினைவுகளும்
எழுந்து நடமாடும் உனக்குள்
”கிராமத்துக் கிறுக்கன்” நான் மட்டும்
இன்னும் ஆழமாய் புதைகிறேன்.
பரவசப் புத்தாண்டாய் உன் கொண்டாட்டம்

இலவம் பஞ்சாய் மிதக்கிறேன்
என்றிருந்தேன்
கனவில் ஏதோ காட்சிப் பிழையென்று
எழுந்திருக்கப் பார்த்தேன்
இன்று இறந்தவர்களில்
நானும் ஒருவனானேன்

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (1-Jan-16, 7:44 am)
பார்வை : 660

மேலே