12ஆதாமின் அப்துல்லா - பொள்ளாச்சி அபி

பிளேக் நோயின் வாதையிலிருந்து மீளாத கைருன்னிசா இறந்துபோய் ஆண்டொன்று ஓடியிருந்தது.பக்தூருக்கு சென்று இனி ஆகப் போவது ஒன்றுமில்லையென,அப்போதே முடிவு செய்துகொண்ட பாத்திமா,அக்காவிற்கு சொந்தமான அந்த வீட்டிலேயே இருந்துவிட்டாள்.

அக்காவின் நான்கு குழந்தைகளும்,அவளுடையது ஒன்றும் என ஐந்து குழந்தைகளுக்கு இப்போது தாயாக இருந்த பாத்திமாவின் வாழ்க்கை இறக்கை கட்டிக் கொண்டதை போலப் பறந்து கொண்டிருந்தது.

குழந்தைகள் சற்றுப் பெரியவர்களாகி இருந்தார்கள்.மூத்த மகள் மாஜு,பெரிய மனுஷியாகி, இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தது.

நாகூர்மீரான் பக்கத்திலிருந்த மார்க்கெட்டில் சம்சுதீனின் ஆலோசனையின்படி துவங்கியிருந்த பழக்கடையின் மூலம், வந்து கொண்டிருந்த வருமானம் இப்போதெல்லாம் பற்றாக் குறையாகிக் கொண்டிருந்தது. அதனால் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக செல்லும் நேரம்கூட படிப்படியாகக் குறைந்து போனது. ‘ஆண்டவன் நாடினால் என்னை மன்னித்து விடுவான். காரணம்,குழந்தைகளின் பசியைப் போக்க வேண்டுமெனில் நான் வெயிலிலும்,மழையிலும் நிற்கத்தான் வேண்டும் என்பதையும், வியாபாரத்தைக் கவனித்துக் கொள்ளத்தான் வேண்டும் என்பதையும் அவன் அறிவான். இறுதித்தீர்ப்பு நாளில் எனக்கான ஒளியாகவும்,ஈடேற்றத்திற்கு ஆதாரமாகவும் அவனே இருப்பான்.!’, அவ்வப்போது வருத்தம் ஏற்படும்போதெல்லாம் தனக்குள் எண்ணிக் கொண்டிருந்த நாகூர்மீரானுக்கு,இப்போதெல்லாம் வருத்தம் நீடித்துக் கொண்டே.. இருக்கிறது. அவரால் வேறொன்றும் செய்யமுடியவில்லை.

பாத்திமாவிற்கோ வாழ்க்கை பெரும் நெருக்கடியாகவும், சவாலாகவும் கழிந்து கொண்டிருந்தது. கூடுதல் வருமானத்திற்காக நாகூர் மீரானை வற்புறுத்தவும் முடியவில்லை. இப்போதெல்லாம் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் ஓரிரு தினங்கள் படுத்துவிடுகிறார். மேலும் அவ்வப்போது ஓயாத இருமல் வேறு அவரைப் பாடாய்ப் படுத்துகிறது.முகத்திலிருந்த தேஜஸ் எல்லாம் போய்,சற்று இளைத்தும் கறுத்தும் காணப்படும் அவரைப் பார்க்கும் போதெல்லாம் பாவமாகத் தோன்றுகிறது பாத்திமாவிற்கு.

ஒரு இரவில், ஏற்பட்ட நீண்ட யோசனைக்குப் பிறகு,தனது வீட்டிலேயே இட்லிக் கடை ஒன்றைத் துவங்கிவிட்டாள்.பிற ஆடவர்கள் முன்,அவசியமில்லாமல் வருவதே தடை செய்யப்பட்டிருந்த வழக்கத்தைக் கொண்டிருந்த,அதனையே தங்கள் குடும்பப் பெண்களின் மாண்பாகப் பழகிப்போயிருந்த பெண்கள்,இன்று பலரும் நடந்துசெல்லும் வீதியில் கடை வைத்து, வியாபாரம் செய்யவேண்டிய நிர்ப்பந்தமான சூழல் தங்களுக்கு வாய்த்து விட்ட சோகம், பாத்திமாவின் மனதை அறுத்துக் கொண்டேயிருந்தாலும்,இப்போதைக்கு சாத்தியமான வேறு வழி..? அவளுக்கு விடை தெரியவில்லை.

இப்போதெல்லாம் வியாபாரத்தைக் கவனித்துக் கொள்வது அவ்வளவாக சிரமத்தை ஏற்படுத்தவில்லை.மகள்கள் மாஜுவும், ஜெயராவும் உதவி செய்கிறார்கள். கூடவே, சம்சுதீனை நிக்கா செய்து கொண்டிருந்த, முன்னர் முனியம்மாவாக இருந்த கதீஜாவும் பாத்திமாவிற்கு ஒத்தாசை செய்துகொண்டிருக்கிறாள்.

அண்ணன் மதார்ஷா வேலை செய்து கொண்டிருந்த பஞ்சாலையிலேயே சுக்கூருக்கும் இப்போது வேலை கிடைத்திருந்தது.குடும்பத்தின் தள்ளாட்டம் இப்போதுதான் நிலைக்கு வந்திருக்கிறது.

கைகளில் வலு இருக்கும்போதே, முதலில் மாஜுவுக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்பது,அடுத்த இலக்காக பாத்திமாவின் முன்நின்றது. சின்ன,சின்ன ஆபரணங்களைக் கூட வாங்கி வைத்துவிட்டாள் பாத்திமா.

அந்த நேரத்தில்தான்,மாஜுவைப் பெண்கேட்டு வந்தார் காதர்ஷா.

காதர்ஷாவின் மனைவி இறந்து சில மாதங்களே ஆகியிருந்தது. தான் மறுமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும்,தங்களுக்கு சம்மதமெனில், மாஜுவை இரண்டாம் தாரமாக மணந்துகொள்வதாகவும்,நிக்காவிற்கான அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

அவரால் அது முடியும்.அவருக்கு சொந்தமாக விசாலமான இடத்துடன் கூடிய மூன்று பெரியவீடுகள் இருந்தன. சில குதிரை வண்டிகளும்,குதிரை லாயமுமாக ஒரு பெரிய இடத்தையும் வைத்திருந்தார்.வாடகைக்கு விடப்பட்டிருந்த வீடுகள் மட்டுமின்றி குதிரை வண்டிகளிலிருந்தும் கணிசமாக வருமானம் வந்துகொண்டிருந்தது. செல்வந்தராக இருந்ததால், ‘நம்ம ஜமாத்துலே அவர்தான் பெரிய மனுஷன்’ என்று,ஒரு சமூகஅடையாளமும் அவர்மேல் விழுந்திருந்தது.

“உங்கள் சம்மதத்தை இரண்டு நாட்களுக்குள் சொல்லி அனுப்புங்கள்..!” காதர்ஷா போய்விட்டார்.

பாத்திமாவிற்கு இப்போது பெரிதும் மன நெருக்கடியாக இருந்தது. இளம்பெண்ணான மாஜுவை இரண்டாம் தாரமாகக் கொடுப்பதா.? மாஜுவின் விருப்பத்தைக் கேட்க வேண்டாமா.? அவள் திருமணத்தைக் குறித்து அவள் என்ன கனவை வைத்திருக்கிறாளோ..? பாத்திமா தனது கடந்தகால அனுபவத்தை மனதுக்குள் ஓடவிட்டுக் கொண்டாள்.

நாகூர்மீரானிடம் ஆலோசனை கேட்டபோது, “நாம்தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அவளாவது நல்லாயிருக்கட்டுமே.இரண்டாம் தாரம் என்பதைத் தவிர அவளுக்கு வேறு என்ன குறை வந்துவிடப்போகிறது.? நன்றாக யோசித்துப் பார்..” என்றார்.

ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பது,ஆண்களின் பார்வையில் அவ்வளவுதான்..! என்று புரிந்து கொண்டாள் பாத்திமா.

அடுத்த சில மாதங்களிலேயே,ஜெயராவிற்கும் நிக்கா முடிந்தது.மில் தொழிலாளியான முகமது கவுஸின் மனைவியாக,போத்தனூருக்கு சென்று விட்டாள் ஜெயரா.

“ஆதரவற்ற குழந்தைகளாய் இருந்த பெண்களுக்கு,எப்படியோ ஆண்டவன் நல்ல வழி காண்பித்துவிட்டான்..” நாகூர் மீரான்,அன்று இரவு நிம்மதி பெருமூச்சுடன் சொல்ல, பலத்த யோசனையுடன்,அங்கீகரிக்கும் வகையில் மெதுவே தலையாட்டினாள் பாத்திமா. பாத்திமாவும்,நாகூர் மீரானும் இப்போது சற்று கவலைகளை மறந்து உறங்குவது சாதாரணமாயிருக்கிறது.

உறக்கத்தில், எந்நேரமும் தன்னை அமிழ்த்திக் கொண்டிருந்த, உயிர்களைச் சுமக்கும் பெரும் பாரத்திலிருந்து தான் கொஞ்சம் கொஞ்சமாய் விடுபட்டதாய் உணர்கிறாள் பாத்திமா. ஆனாலும்,தீ நாக்குகள் பரவிப் படரும் அடுப்பும்,அதன் மேலிருந்த ஆவி பறக்கும் இட்லிச் சட்டியும்,கையிலே அவ்வப்போது ஏற்பட்ட தீப்புண்களும்,வீதியில் எந்நேரமும் நடந்து கொண்டிருந்த மனிதர்களுமாக பாத்திமாவிற்குள் அடிக்கடி கனவுகள் வந்து கொண்டே யிருக்கின்றன.

-------------------தொடரும்.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (3-Jan-16, 4:12 pm)
பார்வை : 86

மேலே