அம்மாக்களின் கதைகளுக்குள்

சொல்லப்படாத உணர்வுகளை வடிவமைக்க எழுத்துருக்களை கோர்த்துக்கொண்டு இருக்கிறேன் .. ஒரு ஊரில் என தான் ஆரம்பிக்கிறது ஒவ்வொரு கதையும் ... எனக்கான கதை இது ..

முன்பு ஒருநாள் கூட்டுக் குடும்பமொன்றில் முளைத்த புது மரத்தின் சிறு கிளையாய் நான் வளர்ந்த போது என் தந்தையின் தாய்க்கிழவி கதை சொல்வாள். "ஒரு ஊரில் ஒரு பெரிய வீடு அந்த வீட்டில் ஒரு குட்டி இளவரசி . அவள் கை அசைத்தால் வேலை செய்ய ஆயிரம் உறவுகள் வந்து நிற்கும்" என ஆரம்பிப்பாள். அந்நாட்களில் கேட்ட ஆயிரம் கதைகளும் இப்படித்தான் ஆரம்பமாகும். சிறுகிளை, இரண்டு இலையிலிருந்து நான்காக மாறும் போது கதையில் ஒரு வேறொரு ஊர் புதிதாக முளைத்தது. அது ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி உலகத்தின் மறு பக்கத்தில் இருந்தது. அந்த ஊரிலிருந்து வீரன் ஒருவன் அந்த இளவரசியை மணந்து கொள்ள குதிரையில் வருவான்.(கடலிலும் குதிரை ஓட்டினானா என்பது மட்டும் இன்றும் விளங்கவில்லை). ஆயிரம் சாகசங்கள் செய்து அவளை மணந்து கொள்வான் என்று கதை முடியும் ..

பின்னாட்களில் புது மரம் தனிக்குடும்பமான நேரத்தில் இளவரசி வெறும் பெண்ணானாள். அவளை பாதுகாக்க வீரன் ஒருவன் வீட்டில் பிறந்திருந்தான். அவனின் முக்கிய வீராதி வீர செயல் அவன் தமக்கையை நல்ல ஒருவனுக்கு மணமுடித்து கொடுப்பதாகும் என்று போதனையாகவே இருக்கும் கதைகள் அனைத்தும்.(சில சமயங்களில் ரோதனையாகவும் இருக்கும்).

கதை கேட்டவுடன் நாம் கதையின் நாயகர்கள் ஆகிவிடுவோம் இல்லை ஆக்கிவிடுவார்கள் . இந்த நினைப்பில் பள்ளியிலிருந்து வீடு திரும்பினால் வீரனுக்கு சோறிட்டு வளர்ப்பது அக்கா அல்லது தங்கையின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகிவிடும். மறுத்துவிட்டால் கருட புராண தண்டனைகள் இருக்குமா என்று தெரியவில்லை.. அம்மாவின் பழ புராணம் பெரிய தண்டனையாகிவிடும்..

கதையில் இருந்து நிஜத்திற்கு வருவோம் . இது நம் வீடுகளில் நடக்கையில், "ஆயிரம் தான் இருந்தாலும் அவ ஊரான் வீட்டுக்கு போறவதான" என்ற வார்த்தைகள் கேட்காத வீடுகளில் குழந்தைகளை குழந்தைகளாக மதிக்கிறார்கள் எனக்கொள்வோம்.. ஆறு வயதை தாண்டிவிட்டால் பெண் குழந்தை பெண்ணாக மாறிவிடுகிறாள் இல்லை மாற்றிவிடுகிறீர்கள்...

மீண்டும் பேசுவோம்

மகிழினி

எழுதியவர் : நித்யா (4-Jan-16, 10:43 am)
பார்வை : 896

மேலே