பேய்க்கதை
‘மச்சி . நா பேய பாக்கனும்டா .’
என்ற ஹரியை அதிசயித்துப்பார்த்தான் ராம் .
‘என்னடா திடீர்னு ? பைத்தியம் பிடிச்சிடுச்சா ?’
‘இல்ல மச்சி . கண்டிப்பா நா பார்த்தே ஆகனும் .’
இனி ஹரியிடம் வாதம் செய்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்பது ராமுக்குத்தெரியும் .
‘அப்படினா உனக்கு ஏத்த சரியான ஆளு வச்சணந்திச்சாமி தான்டா . அந்தாளபோயி பாரு . அவரு உனக்கு எல்லாம் தெளிவா சொல்லுவாரு .’
என்றவாறே அவனிடமிருந்து விடைபெற்றுச்சென்றான் ராம் . ஹரிக்கு இந்த எண்ணம் கடந்த 3 நாட்களாகத்தான் இருந்தது .பேயைப்பார்க்க அவன் எதற்கு விரும்பினான் என்று அவனுக்கேத்தெரியவில்லை . ஆனால் பேய் எப்படி இருக்கும் என்பதைப் பார்த்தேயாகவேண்டும் .ராம் சொன்ன வச்சணந்திச்சாமியைப்பார்க்க கிளம்பினான் .அடர்ந்த வனம் .கரும்இருட்டு வேறு பயமுறுத்தியது . எங்கோ தூரத்தில் ஒரு கொடூரமான மிருகத்தின் உறுமலோ இறுமலோ இவனை மேலும் திகிலாக்கியது .
‘மச்சி , அவர சாய்ங்காலத்துலதான் பாக்க முடியும் .எல்லையோரத்துல இருக்க காட்டுல தான் அவரோட இடம் இருக்குது . பகல்ல அவரு வேற எங்கயோ போயிடுவாருனு சொல்லிருக்காங்க .’
‘எங்க போவாரு மச்சி ?’
இருட்டு என்றால் பயமென்பதால் அவனுக்குள்அந்த கேள்வி எழுந்தது . ஒருவேளை அவர் பகலில் எங்கே இருப்பார் எனத்தெரிந்தால் அங்கேயே சென்று பார்த்துவிட்டு வந்துவிடலாம் .
‘பகல்ல நரகத்துக்கு போவாராம் மச்சி ’ என்றான் ரகசியமாக .
‘இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு . அப்படியே பகல்ல நரகத்துக்கு போறாருனா , இவரு ஏற்கனவே செத்தவராத்தான் இருக்கனும் மச்சி .’
‘அப்படியும் சொல்றாங்கடா ’ என்றான் ஆச்சரியமாய் .
நாம் முதலில் பேயைப்பார்க்கிறோமோ இல்லையோ , இந்த வச்சணந்திச்சாமியைப்பார்த்துவிடவேண்டும் என்று தீர்மானத்தை மனதுக்குள் எடுத்தான் . பகல்வேளை என்பதால் எளிதாக இருந்த தீர்மானம் இரா வேளையில் இராமல் போய்விட்டது .இருந்தாலும் வந்தது வந்தோம் . அவரையும் பார்த்துவிட்டுச்செல்லலாம் என்று தைரியப்படுத்தி அந்த காட்டினுள் நுழைந்தான் .
‘மச்சி . உனக்குத்தெரியுமா ? அவங்கவங்களுக்குனு ஒரு நேரம் வரும்போது பேயப்பாப்பாங்களாமாம் .’என்று 3 நாட்களுக்குமுன் ராம் தான் ஹரியிடம் கூறியிருந்தான் .
‘அப்படியா ?‘ என்று அசிரத்தையுடன் கேட்டுவிட்டு அமைதியானன் ஹரி .
‘மச்சி . பேய்ங்களுக்கு கால் இருக்குமாம்டா ’ என்று மீண்டும் ஹரியிடம் கொஞ்சநேரம் கழித்துச்சொல்லுவான் . எப்படிப்பேசினாலும் ராமின் வாதம் மட்டும் பேய் என்ற தலைப்பிலேயே வந்து முடியும் .
அந்த அடர்ந்த காட்டினுள் ஓரிடத்தில் மாத்திரம் ஒளி தெரிந்தது .அதைநோக்கிச்சென்றவனுக்கு ஒருமுனிவர் மாதிரியான ஒருவர் தவக்கோலத்தில் இருந்தார் .மெல்ல புலிபோல் பதுங்கி அவரின் அருகில் சென்று பவ்யமாக நின்றான் .
‘என்ன வேணும் ?’என்ற கணீர் குரலில் அந்த முனிவர் கண் திறக்காமலே கேட்டார் .
‘சாமி . நா பேய பாக்கனும் ’
அதைக்கேட்டதும் தன் கண்ணைத்திறந்து அவனைப்பார்த்தார் அம்முனிவர் .
‘அது உனக்கு ஆபத்து . வேண்டாம் சென்றுவிடு .’
வேண்டாம் என்று சொன்னால்தான் வேண்டும் என்று மனிதமனம் அடம்பிடிக்கும் . சிகரெட் அடிப்பது தப்பு என்றால் , அதைத்தான் செய்வோம் என்று சொல்வார்கள் மனிதர்கள் .
‘என்ன ஆபத்தா இருந்தாலும் பாத்துக்கரேன் சாமி .’
பொறுமையாக யோசித்தவர் ,
‘உன் விதி . நாளை இரவு 10.30 - க்குவடக்கே இருக்கும் ஆறுகால் மண்டபத்துக்குச்செல் . அங்கே உன்னால் பேயைத்தரிசிக்க முடியும் .’
வந்த காரியம் வெற்றிபெற்ற சந்தோஷத்தில் ஹரி இருந்தான் . ஆனால் அவனுக்கு ஒரு குழப்பம் வந்தது .
‘சாமி . பேய்னா என்ன ?’
மீண்டும் அவனை ஏற இறங்க பார்த்த முனிவர் தொடர்ந்தார் .
‘இவ்வுலகம் மூன்று பரிமாணங்களை உடையது . ஒரு பரிமாணத்தில் உள்ளவர்களுக்கு மற்றொரு பரிமாணத்தில் உள்ளவர்கள் பேய்கள் . அவ்வளவே ’
தொடர்ந்தாற்போல அவனுக்கு இன்னொரு சந்தேகமும் வந்தது .
‘சாமி .பகல்ல நீங்க நரகத்துக்கு போய்ட்டு வறிங்கலாமே ? உண்மையா ?’
இம்முறை அவரது முகத்தில் ஆத்திரத்திற்கான அறிகுறி தென்பட்டது . இருந்தாலும் பொறுத்துக்கொண்டு அவனிடம் விடையளித்தார் .
‘ஆம் .’
‘எதுக்கு சாமி போறிங்க ?’
‘டேய் . போறியா இல்ல உன்ன போட்டுத்தள்ளவா ?கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இருக்க . பொத்திகிட்டுப்போடா ’ என்றார் ஆவேசமாக .
கிழட்டுசாமி . ஒரே அடியில மயங்கிவிழுந்துடுவான் . இவன் நம்மளத்திட்டுறான் என்று மனதினுள் நினைத்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தான் .
‘தம்பி’ என்று மீண்டும் அந்த சாமியார் அழைத்தார் .
‘என்ன’ என்பதுப்போலே தெனாவெட்டாகத்திரும்பிப்பார்த்தான் ஹரி .
‘அங்கபோறது உனக்கு ஆபத்துப்பா ’ என்றார் .
‘அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம் . நீங்க சாத்திகிட்டு உங்க வேலையப்பாருங்க ’ என்று திமிராக கூறிவிட்டு கிளம்பினான் .
அடுத்தநாள் இரவு வந்தது . ராமிடம் ஏற்கனவே ஹரி கூறியிருந்தான் .ராம் பயத்தில் நடுங்க ஆரம்பித்திருந்தான் .ஹரியிடம் போகவேண்டாம் என்றுகெஞ்சிப்பார்த்தான் ; திட்டவும் செய்தான் . ஆனால் ஹரியோ நான் போயேத்தான் தீருவேன் என்றான் . சொன்னமாதிரியே கிளம்பி அந்த மண்டபத்திற்குப்போனான் . பேயடிச்சாமி சொல்லிய நேரத்திற்கு 5 நிமிடம் முன்னரே அங்கு நுழைந்து ஒருமூலையில் நின்றான் .திடீரென்று அந்த மண்டபம் மாறத்துவங்கியது .தலைக்குமேல் இருந்த சிலந்திவலைப்போய் ஒரு மின்விளக்கு எரிந்தது , மேலும் அவ்விடத்தில் தூண்கள் எல்லாம் எழும்பியது . திடிரென நின்றிருந்த இடத்தில் கம்பிகள் வேறு வந்தன . என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குள் அவன் வேறிடத்தில் இருந்தான் .அந்த சாமியும் ராமும் அவ்வளோ கெஞ்சுனாங்களே ! அவங்க பேச்சக்கேட்டுருக்கலாமோ என்று அவனுக்குள் பயம் வரஆரம்பித்தது .யாரோ ஒரு பெண் சத்தம் கேட்டது . அதைக்கேட்டதும்கம்பிக்கு பக்கத்தில் இருந்த தரையில் மறைவாக ஒளிந்துகொண்டான் . அவளின் கால் கொலுசு சத்தம் அவனை நோக்கி வர ஆரம்பித்தது . ஜிங் ஜிங் ஜிங் என்ற அந்த சத்தத்தில் , இவன் ரத்தம் ஜிவ் ஜிவ்வென ஓடுவதைப்போல் உணர்ந்தான் . நம் வாழ்க்கை இன்றோடு முடிந்துவிட்டது என்று பயத்தில் தன்னையும் மீறி அழ ஆரம்பித்திருந்தான் .
‘அ ங் க யா ரோ இ ரு க் கா ங் க ’என்ற அந்த பெண்ணின் குரல் ஸ்லோமோஷனில் ஒலித்தது .அதைக்கேட்டதும் இவனுக்குத்தொண்டைத்தண்ணீர் வற்ற ஆரம்பித்தது .நாவெல்லாம் வறண்டு போக ஆரம்பித்தது . திடீரென ‘தடால் தடால் ’ என்ற சத்தம் கேட்டது .
கண்விழித்துப்பார்த்தவனுக்கு எல்லாம் மங்கலாகத்தெரிந்தது . யாரோ இருவர் இவனைத்தூக்கிக்கொண்டு பறந்துகொண்டிருந்தார்கள் .தான் இருக்குமிடம் எதுவென்று நன்றாக கண்ணைத்திறந்து பார்த்தான் .மில்க்கிவே கேலக்ஸியைத்தாண்டி பல பேரண்டங்களுக்கு நடுவில் பறந்துகொண்டிருந்தான் . அவன் அருகில் இருவர் . அவர்களுக்கு மூக்கு , கண் , காது என்று எது எங்கெங்கு இருக்கவேண்டுமோ அதற்கு நேரெதிராக இருந்தது . சிறிது நேரத்தில் ஒரு கோளினை அடைந்தான் .அந்த கோள் கிட்டத்தட்ட சூரியனைப்போல நெருப்பைக்கக்கிக் கொண்டிருந்தது . அந்த கோளினுள் சிலர் வீடுகட்டும் செயலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள் . அவர்களில் ஒருவன் தன் கையால் நெருப்புக்குழம்பை எடுத்து , இன்னொருவனைப்படுக்கவைத்து அவன்மேல் பூசினான் .அதேபோல் பலரைப்படுக்கவைத்து சிலர் அவர்கள் மேல் நெருப்பைப்பூசிக்கொண்டிருந்தார்கள் . நெருப்பை அள்ளுபவர்கள் ஒவ்வொருமுறை நெருப்பைப்பூசும்போதும் நெருப்போடு அவர்களின் கை அப்படியே துண்டாகி விடுவதையும் அதைத்தொடர்ந்து மீண்டும் அவர்களுக்குப்புதுக்கை கிடைப்பதையும் பார்த்துக்கொண்டிருந்தான் . இன்னொருபுறம் விவசாயம் செய்ய சிலர் ஏதேதோ கருவிகளைவைத்து முயற்சித்துக்கொண்டிருந்தார் . அவர்களின் விவசாயம் என்னவென்றால் தண்ணீர் . ஒரு சொட்டுத்தண்ணீருக்கு கிட்டத்தட்ட 100பேர் நெருப்புக்குழம்புகளுக்கு நடுவே கதிறிக்கொண்டே உற்பத்திச்செய்துகொண்டிருந்தார்கள் .அவன் புரிந்துகொண்டான் . இது நரகம் .
அவன் நினைத்தது போல அந்த கிரகமே நெருப்புக்குழம்பால் ஆனதல்ல . வெறும் அரையடி ஆழம் மட்டுமே நெருப்புக்குழம்புஇருந்தது . அதன்கீழே சாதாரண மண் தான் . ஆனால் ஒரு அதிசயம் என்னவெனில் ஒவ்வொரு முறை நெருப்பில் கால் வைக்கும்போதும் அவன் கால் வெந்துபோகிறது. அந்த வலியால் துடிதுடிக்கிறான் . ஆனால் அவன் காலுக்கு எதுவுமே ஆகவில்லை .அவனை ஓரிடத்தில்கொண்டுவந்து நிறுத்திவிட்டு அனைவரும் கிளம்பிவிடுகிறார்கள் .திடீரென வெண்ணிற ஒளி ஒன்று அவன்முன்னால் தோன்றியது .
‘தவறை ஏற்றுக்கொள்கிறாயா ?’என்றது அக்குரல் . அதில் ஒரு கடுமை மிகுந்திருந்தது .
‘என்ன தப்புபண்ணேன் ?’என்றான் . வார்த்தைகளில் நடுக்கமும் , நாக்கில் குழறலும் தெள்ளத்தெளிவாக அவனது பயத்தை எடுத்துரைத்தது .உடனே அந்த ஒளி மறைந்தது .இருவர் வந்து அவனைப்பிடித்து இழுத்துச்சென்றார்கள் .அவர்களுடனே பயணித்த அவன் ஒரு கோட்டையை அடைந்தான் . அங்கு உருவமல்லாமல் வெண்ணிற ஒளி , பொண்ணிற ஒளி, செந்நிற ஒளி என்று சில ஒளிக்கற்றைகள் மட்டுமே இருந்தன .
‘நீ உன் நண்பனைக்கொலை செய்துவிட்டாய் .’என்று வெண்ணிற ஒளி கூறியது .
‘இல்ல இல்ல . சத்தியமா இல்ல .’என்று அவன் பதட்டப்படலானான் . அந்நேரம் அந்தஒளிக்கற்றைகள் அனைத்தும் இணைந்து ஒரு பெரியத் திரையாக அவன்முன் விரிந்தது . அதில் சில காட்சிகள் ஓடியது .
‘நோ . இதுக்கெல்லாம் அவன்தான் காரணம் . நா உன்ன கொல்லாம விடமாட்டேன்டா’ என்று ஹரி கோபாவேசத்தில் அலறினான் .அவனை இரு உருவங்கள் இழுத்துச்செல்ல எதிரே வச்சணந்திச்சாமி அவனைக்கண்டும் காணாமல் ஒளிகளை நோக்கிச்சென்றுகொண்டிருந்தார் .
அதேநேரம் ராம் , அவளை மடியில் கிடத்திக்கொண்டிருந்தான் .அவள் மெல்ல கண்விழித்துப்பார்த்தாள் .
‘ ராம் .டைம் என்ன ? ரொம்ப நேரம் தூங்கிட்டனா ?வா சீக்கிரம் கிளம்பலாம் ’என்று அவள் பேசிக்கொண்டே எழுந்தாள் .
‘ஜமுனா . இனிமேல் நீ உங்க வீட்டுக்குப்போக தேவையில்ல ’
‘ஏன்டா ? இப்படியே எங்கயாச்சும் ஓடிடலாம்னு சொல்றியா ?’
‘இனிமேல் எங்கயும் ஓடவேண்டியதில்ல ஜமுனா .நம்ம வாழ்க்கைய இங்கயே ஸ்டார்ட் பண்ணிக்கலாம் . புதுசா ஒரு வாழ்க்க .’
‘என்னடா சொல்ற ?’
‘ஒரு வாரம் பொறு . உனக்கே எல்லாம் ஞாபகம் வரும் .’என்று அவன் எளிமையாகத்தான் கூறினான் . அவளுக்கோ ஒருவாரம் முழுவதும் குழப்பத்துடனும் பயத்துடனும் இருந்தாள் . ஒருவாரத்திற்குப்பின் அவளுக்கு எல்லாம் நினைவுக்கு வந்தது .அவளும் ராமும் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்தது , ராமின் நண்பன் ஹரி ,ஜமுனாவை ஒருதலையாக காதலித்து ராமைக்கொலைசெய்தது , ஜெயிலில் இருந்து பரோலில் வந்த ஹரியைஇவள் விஷம் கொடுத்துக்கொன்றது , பின் இவள் ஜெயிலுக்குச்சென்றது , ஜெயிலில் யாரோ இவளைத்தாக்கியது என அனைத்தும் ஞாபகம் வந்தது .
‘அதெல்லாம் சரி . இறந்துபோன ஹரி எங்க ?’
‘அவனுக்கு நரகத்துல தண்டனை கிடைச்சிருக்கும் .’
‘ஏன் ?’
‘ஏன்னா உன்ன கொலை செஞ்சதுக்கு .’
‘அப்போ நானும் தானே கொல செஞ்சேன் .எனக்கு ?’
‘உனக்குத்தான் உலகத்துலயே தண்டன கெடச்சிடுச்சே .’
‘அப்போ இது என்ன இடம் ?’
‘பூமிக்கும் நரகத்துக்கும் இடைப்பட்ட ப்ளேஸ் . இங்கயும் தப்புசெஞ்சா தான் நரகத்துக்கு கொண்டுபோவாங்க’ என்றவாறே அவளை அணைத்துக்கொண்டான் .
__________________________________
படைப்பு: மெக்னேஷ் திருமுருகன்