புல்லட் வண்டி

அவன் சின்னப்பயனா இருக்கையில அவங்கப்பா புல்லட் வச்சிருந்தாரு. பையன் பெரும்பாலும் மழலைப் பருவத்த அவனோட அம்மச்சி வீட்டுலதான் கழிச்சான்.. சனிக்கிழமை மாலையோ இல்ல முன்னிரவுலயோ அப்பா வருவாரு. அந்த புல்லட் ஏரிக்கரையில வரும்போதே அவனுக்கு கேட்டுடும்... உடனே துள்ளிக் குதிப்பானாம், அம்மச்சி சொல்லும்.. அப்பா நல்ல உயரம். விவசாயக்குடும்பத்துல பிறந்து வளர்ந்து விளையாட்டு வீரரா இளமைய கழிச்சவர். அதனால அவர் இந்த கதைகள்ல வர வர்ணனைகளுக்குப் பொருந்திப்போவார். அப்படி அவர் புல்லட்ட ஓட்டுறதப் பாக்கவே ஒரு கூட்டம் இருக்கும்,.. ஒன்ன வித்துட்டு இன்னொன்னு வாங்கினு புல்லட் ராஜாவா இருந்திருக்கார்..

ஆனா பையன் வளர வளர அவர் தேய்வார்னு சோசியம் பாத்தப்ப சொல்லியிருக்காங்க.. மனுசன் அத நம்பாம என் பையன நானேதான் வளர்ப்பேன்னு உறுதியா இருக்கவும், இந்த சோசியகாரங்க வாக்குப்படியே பையன் வளர அப்பன் தேயனு நடக்க கருப்பு குதிரை மேல வந்த அரசன் மாதிரி இருந்தவர் அந்த குதிரைய விக்க வேண்டிய துர்பாக்கியமான சூழல் வந்துடுச்சு... அதுக்குபதிலா கழுதே மாதிரி இருந்த பஜாஜ் செடாக் ஒன்ன வாங்கி ஓட்டிட்டு இருந்தார்... அந்த கழுதை தேயத்தேய அவர் கட்டெறும்பான கதை மீதி...

அப்பறமா பையன் வளர வளர அவன் அம்மச்சி சொல்லிட்டே இருந்தது இதுதான் "உங்கப்பா புல்லட் வச்சிருக்கையில மவராசன் மாதிரி இருந்தாரு! அத வித்தப்பறம் மனுசன் கிரீடத்த விட்ட அரசன் மாதிரி சரிஞ்சுபோயிட்டாரு... அப்பவே சொன்னேன் உன்ன எங்கூட வச்சு வளத்துக்கறேன்னு... நாளுமில்ல கிழமையுமில்ல, எம்மகன நானேதான் வளப்பேன்னு சொல்லி வளத்தாரே, நீ வளர அவர் தேயனு விதி இருந்தா யாரு என்ன பண்ண முடியும்???" எல்லாத்துக்கும் சிகரம் வச்சாப்படி பையன பன்னண்டாவது படிக்கையில பரிகாரம்னு பெருமாளுக்குத் தத்துக் குடுத்துட்டாங்க...

பையனோ சின்ன வயசுல இருந்தே பகுத்தறிவுவாதி... இதையெல்லாம் நம்பாம அவன் அப்பா பாத்துக்கிட்டார்... ஆனா ஒரு வயசுக்கப்பறம் பையனுக்கு ஒரே யோசனை... என்னன்னா இதெல்லாம் நெசமோ? ஒருவேலை தன்னாலதான் தன் அப்பாவுக்கு அடிமேல அடியோனு கவலையும் வந்துடுச்சு... எப்பேற்பட்ட பகுத்தறிவுவாதியா இருந்தாலும் இந்த அம்மச்சிங்க ஒப்பாரி வச்சா உண்மையோனு நம்பத்தோனும்... அதான் நடந்துச்சு... அதோட விடலைப் பருவத்துல தத்துக்குடுக்க வேற செஞ்சாங்க... அப்பறமாத்தான் அவனுக்குப் புரிஞ்சுது அட அப்பாவுக்கும் சின்னச்சின்ன சறுக்கலுக்கெல்லாம் இவங்க வச்ச ஓப்பாரியால மனசளவுல தான் வீழறேன்னு ஒரு எண்ணம் வந்துடுச்சு போலனு தெளிவானான்...

பையன் படிப்ப முடிச்சதும் மொத வேலையா அப்பாவுக்கு ஒரு வண்டி தேட முடிவு செஞ்சான்.. ஆனா அப்ப அவன் குடும்பம் இருந்த நிலையில அவனால புல்லட் வாங்க முடியாதுனு தெரிஞ்சது. உடனே வீட்டுல ஒரு வண்டி வாங்குனா நல்லாயிருக்கும்னு சொல்ல அவன் அம்மா சரி என் நகைய வச்சு ஒரு வண்டி வாங்கிக்கனு சொன்னாங்க... அவன் அந்த பொறுப்ப அப்பாகிட்ட குடுக்கவும் அவர் இந்த டிவிஎஸ் ஸ்டார் ஒன்ன புதுசா வாங்கி நிப்பாட்டியிருந்தார். அதப்பாத்த பையனுக்கு வந்துச்சு பாருங்க கோவம்!! அந்தக் கழுதையாச்சும் பரவாயில்ல இந்த பன்னிய எதுக்குப் புடிச்சிட்டு வந்தீங்கனு ஆத்திரப்பட்டு உடனே அத கொண்டுபோயி கடையிலயே விட்டுட்டுட்டான்... கடக்காரன் காசத் திருப்பித் தரமாட்டேன், நீங்க வேற வண்டி எடுத்துக்கங்கனு சொல்ல, பையான் சுத்திப்பாக்க அங்க கருப்புச் சிறுத்தையாட்டம் ஒரு வண்டி இருந்தது.. புல்லட்டுல காவாசி இருந்தாலும் அந்தப் பன்னிக்கும் கழுதைக்கும் இது தேவலைனு அத வாங்கிட்டான்...

அப்புறமென்ன அவன் அப்பா அத ஓட்ட ஓட்ட கொஞ்சம் பழைய தீரம் வர ஆரம்பிச்சது. பையனுக்கு தன்னோட கணக்குகள் அந்த சோசியகாரனுங்க கணக்க மிஞ்சினதுல மகிழ்ச்சி... அதோட அவன் மனசக் கவர்ந்த பொண்ண வேற அந்த வண்டியில ஒருநாள் கூட்டிட்டுப் போகவும் அவனுக்கு அந்த வண்டி உயிராயிடுச்சு..

இதோட முடியல...

பின்ன பையன் பெங்களூருக்கு வேலைக்குப் போகவும் அவனுக்கு வண்டி தேவைப்படவும் அப்பா இந்த வண்டிய எடுத்துக்க நான் அந்த "ரதத்த (பையன்ப பொருத்தவரை அது கழுதை)" ஓட்டிக்கிறேன்னு சொல்லிட்டார்.. பையனுக்கு மறுபடியும் கவலை வந்துடுச்சு... அப்பாவுக்கு அந்த புல்லட்ட வாங்கிடலாமானு யோசிக்க ஆரம்பிச்சான்... சரி புல்லட்னு சொன்னா ஒன்னரை லச்சமானு சொல்லி நம்ம தடுக்கப் பாப்பாங்க... அதனால புல்லட்டுல பாதி இருக்க ஒரு வண்டிய எடுக்கனும்னு முடிவு பண்ணான்...

அப்படித் தேடையில அவன் கண்ணுல இந்த சுசுகி GS150R னு ஒரு பனிச்சிறுத்தை பட்டது.. அந்த அன்னைக்கே அவன் சேமிப்ப முன்பணமா போட்டு உடனே கடன் தர ஒரு தனியார் வங்கிய புடிச்சு வண்டிய தூக்கிட்டான்... அவன் அப்பா முகத்துல அப்படி ஒரு பெருமிதம்... அந்த வண்டிய ஓட்ட அரம்பிச்ச உடனே அவருக்கு முப்பது வயசு குறைஞ்சாப்புல ஆகிடுச்சு...

அப்பறம் ரெண்டு வருசம் கழிச்சு பையன் புல்லட் ஒன்னு வாங்கலாம்னு சொன்னப்ப வீட்டுல ஒன்னரை லச்சம் போட்டு அத வாங்கறதுக்கு கார் வாங்கிடலாமேனு சொன்னாங்க... அப்பாடா நம்ம கணக்கு இந்தளவுக்கு வீட்டு நிலைய மாத்திடுச்சேனு பையனுக்குப் பெருமிதம்!!!

ஆனாலும் பையனுக்குள்ள அந்த புல்லட் வண்டி மேல இருக்க மோகம் தீரல... அவன் அப்பாவ அந்த வண்டிய ஓட்ட வச்சா நிலைமைய முழுசா மாத்திடலாம்னு கணக்குப் போட்டுட்டு இருக்கான்...

நீதி: சில சமயம் மனமே வீழ்ச்சிக்குக் காரணமாகிறது... மனசை தூக்கி நிறுத்தினாலே பாதித் பிரச்சினைகள் முடிஞ்சிடும்... அத விட்டுட்டு நேரம் காலம் தோசம்னு திரிஞ்சா இருக்கறதும் போயிடும் பாத்துக்கங்க...

எழுதியவர் : நிரஞ் பிரபு (6-Jan-16, 11:49 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : bullat vandi
பார்வை : 162

மேலே