என் நீண்ட காதலி------- - - - - ல்

விற்றுத் தீர்த்து விட்ட
உன் மனக்கூடையில்
மிஞ்சிக் கிடக்கும்
என் மௌனங்களை
மீளத் தா ....

நீண்ட பயணத்தின்
தொடக்கத்தில் நான்
தரிப்பிடத்தில் காத்திருக்க
நீ மட்டும்
கால் நடையாய் போகலாமா ?

ஓர் ஆரம்ப பள்ளியில் அடம் பிடித்து
அழுது தீர்க்கும் குழந்தை போல
உன் இதய வாசலில்
அடம் பிடித்து நிற்கிறது
புதிய புத்தகப் பையுடன்
கூட்டிச் செல் !

கிணற்றடி வாசலில் விரிந்த
குண்டு மல்லிகை போல
முகம் காட்ட அகம் காட்டுகிறேன்
நீ கறைப்பட்ட காலைகளை
சுவாசிப்பேன் என்கிறாய் ...

என் எளிமைகளால் கட்டிய வீடு
உன் ஏழ்மை மனதை
கோடீஸ்வரியாக்க நினைக்கிறது
குடிகொள்ள வருவாயென
வந்து அமர மாட்டேன் என்கிறாய்...

நானும் என் வெறுமையும்
சேர்ந்தே துயில்கிறது
இந்த இரட்டைக் கட்டிலில்
நீ கொடுத்த வலிகளை
மீள நீ தான் பெற முடியும் !

அந்தப் பூங்காவிற்குள்
உனக்கு நடைப்பயிற்சி
பழக்கும் நாய் போல
இந்த உயிரை இதப் படுத்த
நீ தான் பயிற்சி கொடுக்க முடியும் !

நீ ஏன் என்னை
முழுப் பட்டினி கிடத்துகிறாய்
என் உயிர்
உனக்கு போதாதா
புசித்துண்ண ..?

எனக்கும் தருகிறான்
தபால் காரன் கடிதம் - அது
என்வீட்டு முகவரியற்ற பாட்டிக்கு !
சேர்த்தே தந்து விட்டுபோகிறான்
நீ கொடுத்த ஏமாற்றத்தை ....

நேற்றும் அனுப்பிய
என் கடிதம்
நீ செய்த காகிதக் கப்பலாக
மூழ்குகிறது
என் கண்ணீர்க் கடலில் !

இந்த சாம்ராச்சியத்தின்
சமுத்திரத்தில்
நீ விழுவதற்காகவே
பூவலை விரித்தேன்
உன்னை மணக்க
நீ மணந்து விட்டாய்
மனக்கவலை தான் நிறைந்து
சிக்கியது அதற்குள் !

உனக்கு என்
காதலியாக இருக்க
விருப்பமில்லையா - விட்டு விடு
மனைவியாய் வாயேன்
நம் மனை இனிமையாக !

நாம் பிரிந்து விடுவது
அவ்வளவு சுலபமல்ல முதலில்
நீ சேர்ந்தால் அல்லவா
பிரிய முடியும் !

நீ மறந்து விட வேண்டும் என
என்னை
அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்கிறாய்
தும்மல் வருகிறது எனக்கு
அதையாவது நினைக்காதிரு !

அந்த ஆம்பல் பூத்த
அழகுக் குளம் பூரித்துக் கிடப்பது போல
என் ஆழகம் காத்திருக்கிறது
ஒரே ஒரு சூரியனின் வரவிற்காக
பூத்துச் சிலிர்க்க ...

இரு கரைகளில்
நாம் துருவங்களாக
ஆற்றின் அடியில் கிடக்கும்
துடுப்பை யாரும் எடுத்து தருவாரா
உன்னோடு சேர்ந்து விட ....

இனியும் நான் காதல் செய்ய
என்னிடம் எதுவும் இல்லை
உன்னைத் தவிர
என் காதல் மட்டுமே !!!

நிலவு தேய்ந்து விடமுன்
காட்டி விட்டுப் போ
உன் முழு மதியை - அந்தப்
பிரகாசத்தில் நிலவை தேடி விட !

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (7-Jan-16, 12:19 am)
பார்வை : 392

மேலே