பேயும் மனதின் அறியாமையும்
பலமுறை அங்கு சென்றிருக்கிறேன். என்னுடைய உறவினர்கள், நண்பர்களின் உறவினர்கள், நண்பர்கள் எனப் பலர் இறந்ததற்குப் போயிருக்கிறேன். சிலமுறை உறவினர்களால் ஒதுக்கிவைக்கப்பட்டவர்களின் உடலை நண்பர்களாகச் சேர்ந்து எல்லாக் காரியமும் செய்து குழியில் இறக்கியிருக்கிறோம். முதன்முதலில் என் பாட்டியின் சவம் எரிவதைப் பார்க்கும் போது ஒருவிதப் பதட்டம் இருந்தது. அப்போது சிறுவனாதலால் அவர் எரிக்கப்பட்ட அந்த சாலையோர இடுகாட்டைக் கடக்கும்போதெல்லாம் பயம் தொத்திக்கொள்ளும். நடந்து சென்றால் கண்ணை மூடிக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடிவிடுவேன்.
ஊர் மாரியம்மன் கோவிலில் சித்திரையில் கம்பம் போட்டிருப்பார்கள். அங்கு பராக்குப்பார்த்துவிட்டு நள்ளிரவில் திரும்பி அந்த இடுகாட்டின் வழியே வரவேண்டும். நான் எப்போதும் மற்றவர்களைவிட சற்று உயரம் அதிகம். அந்த இடுகாட்டைக் கடக்கும்போது சற்று நடுங்குவதை வைத்து அத்தைமார்கள் ஓட்டித்தள்ளிவிடுவார்கள். சகவயது பெண்கள் அதைக்கேட்டு சிரிக்கும்போது பயம் ஒருவித அவமானமாக மாறிவிட்டது. அப்படியே இரவின் மீதும் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுவிட்டது.
என்னுடைய அப்பச்சி "வேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுனு" எனும் பாட்டைப் பாடி எனக்கு தைரியமூட்டுவார். விடுமுறைகளில் அவர் இரவில் தண்ணீர் பாய்ச்சும்போதெல்லாம் என்னையும் அழைத்துச்செல்வார். ஆனாலும் உள்ளுக்குள்ளே நடுங்கிக்கொண்டிருந்தேன்.
இதற்கொரு முடிவுகட்ட எண்ணி சற்றுப் பெரியவனானதும் ஒரு கோடை விடுமுறையின்போது நள்ளிரவில் என்னுடைய வளர்ப்பு நாயான முண்டா'வை துணைக்கு அழைத்துக்கொண்டு கையில் ஒரு கோலுடன் சில நாட்கள் எங்கள் அப்பாரின் தோட்டத்தைச் சுற்றிவர ஆரம்பித்தேன். அப்படியே இரவின்மீதான பயத்தைப் போக்கிவிட்டேன். அடுத்த கோடைவிடுமுறையில் இடுகாட்டின்மீதான பயத்தைப்போக்க ஒரு நள்ளிரவில் பவானி ஆற்றங்கரையிலிருக்கும் எங்கள் ஊரின் இடுகாடுவரை போய்விட்டு வந்தேன். அங்கு போக நேர்வழியிலில்லாமல் எங்கள் தோட்டத்தைச் சுற்றியோடும் மரங்களும் புதர்களும் மண்டிய கொடிக்காலில் இறங்கி அது ஆற்றை அடையும் முகத்துவராத்தில் பிரியும் ஒற்றையடிப்பாதையில் ஏறி அந்த இடுகாட்டை அடைந்தபோது இதயம் உச்ச வேகத்தில் துடிக்க ஆரம்பித்துவிட்டது.
அங்குபோய் சேர்ந்தவுடன் உடலில் உச்சியிலிருந்து உள்ளகால்வரை ஒருவித படபடப்பு ஒட்டிக்கொண்டது. உள்ளங்கே வியர்த்துவிட்டது. ஆனாலும் எதற்கும் அஞ்சக்கூடாது, இங்கு இறந்தவர்களின் மக்கிக்கொண்டிருக்கும் உடலையும், அந்த மக்கும் உடலை உண்டு வளரும் தாவரங்களையும் தவிர வேறேதும் இல்லை என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டே ஒரு பத்து நிமிடம் அங்கே நின்றுகொண்டிருந்தேன். பிறகு வீட்டுக்குத் திரும்ப ஆரம்பித்தேன்.
மறுபடியும் அந்த ஒற்றையடிப்பாதையிலும் கொடிக்காலிலும் வரும்பொழுதும் பின்னால் ஏதோ வருவதுபோன்ற பிரமை. வீடு வந்த பிறகே எதுவுமில்லை என்று மனம் நிம்மதியானது. அதன்பிறகு இந்த பயமெல்லாம் சுத்தமாக இல்லாமல்போனது.
ஆனால் 2009க்குப் பிறகு சில இரவுகளில் என்னைச்சுற்றி யாரோ ஒரு பெண் தலைவிரிக்கோலமாக அமர்ந்து அழுவதுபோலத் தோன்றும். சிலநாட்கள் பல பெண்களும் குழந்தைகளும் அழுவதுபோலவும் ஓலமிடுவதுபோலவும் தோன்றும். டக்கென்று விழிப்புவந்துவிடும். எழுந்து என்னவென்றுபார்த்தால் யாரும் இருக்கமாட்டார்கள். ஏன் யார் அப்படி அழுவதுபோலத் தோன்றுகிறது என்று எண்ணிப்பார்ப்பேன். பிறகுதான் புரிந்தது. ஈழப்படுகொலைச் சம்பவங்களைப் பார்க்கும்போதெல்லாம் ஏதும் செய்ய இயலாத எனது கையறு நிலை மனதில் ஒரு குற்ற உணர்வாகப் பதிந்து, இரவுகளில் அழுகுறலாக கேட்டுக்கொண்டிருக்கிறதென்று
இப்போதும் பல நள்ளிரவுகளில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு நடந்து வருவது வழக்கம். வழியில் ஒரு கல்லறைத்தோட்டம் இருக்கிறது. மயான அமைதி சூழ்ந்திருக்கும் அந்தப் பகுதியைக்கடக்கும் போதெல்லாம் ஒன்று தோன்றும், பயமென்பது மனதின் அறியாமையில்தான் புதைந்திருக்கிறதென்று.