அரிக்கேன் விளக்கு

நான் அரிக்கேன் விளக்கு !
லாந்தர் என்று எனக்கு ஒரு பெயர் உண்டு..
இருப்பினும் புயல்வந்தாலும் அணையாததால்
ஆங்கிலேயன் எனக்கிட்ட பெயர்
அரிக்கேன் விளக்கு !

பொழுது சாயும் வேளையில்
கிராமத்துத் திண்ணைகளில்
என் கண்ணாடி கவசத்தை
கரிபோகத் துடைத்துக் கொண்டிருக்கும்
பாட்டிமார்களை வேடிக்கை பார்த்த
அந்த அரை நூற்றாண்டுக்கு
முன்னர் பிறந்த பெயரன்கள்
என்னோடு நன்கு பரிச்சயப் பட்டவர்கள் !

போன பிறந்தநாளுக்கு
நட்சத்திர உணவு விடுதியில்
எனது போலிகளை அலங்கார
விளக்காய் பார்த்த உங்கள்
இன்றைய பேரன் என்னை
கூகுளில் தேடிக் கொண்டிருக்கலாம் !

பொள்ளாச்சி சந்தைக்கு
நெல்மூட்டை ஏற்றி அசைந்து
செல்லும் மாட்டு வண்டிகளுக்கு
அன்று நான்தான் கலங்கரை விளக்கம் !

மணிச் சத்த சந்தத்தோடு
முணுமுணுத்த நாட்டுப் பாடலுக்கு
அன்றே அசைந்திடும் ஒளிகொடுத்து
ஒலி ஒளி காட்சிகள் கிராமத்து
மண் சாலைகளில் அரங்கேற்றியவன் !

வறியவனோடு
வாழ்ந்ததனால்தானோ
என்னவோ இன்னும் என்னை
தேர்தல் சின்னங்களில்
விட்டு வைத்திருக்கிறார்கள் !

இன்றும்
நரைகண்ட மனிதனின்
மனப் பரணுக்குள்
கொஞ்சம் வெளிச்சமாய்
மிஞ்சியிருக்கும் நான்
சிலசமயங்களில் கவிதையாய்
உருவெடுப்பதுண்டு !

எழுதியவர் : ஜி ராஜன் (8-Jan-16, 11:34 am)
பார்வை : 488

மேலே