பிரசுரம்

இந்நேரம் அதிகாலை மூன்றுமணி
முச்சந்தி வீதியிலே சுற்றும்
முற்றும் எவருமில்லை
எவர் விழிகளுக்கும் இவன்
அகப்படுவதில்லை இவன்
விழிகளுக்கும் வெற்று சுவரொன்றும்
தென்படவில்லை............
சலித்துபோன சந்திப்பில்
சிந்தித்த வண்ணம் தேடுகிறேன்
அட !..... அங்கோ ஒரு சுவறிருக்க
ஆனந்தம் மனம் அடைந்துவிட
கால்களுக்கு மிதியடி எட்டா
மிதிவண்டி உருட்டிக்கொண்டு
ஓடுகிறேன் நீண்ட சுவற்றின்
ஓரம் நிறுத்துகிறேன்.........
அந்தப்பக்கமோ அரசியல் பிரசுரம்
இந்தப்பக்கமோ அரைகுறை ஆடைப்பிரசுரம்
எந்தன் இடமேங்கே என தேடும்வேளையில்
முதலாளிக்கூற்று முன்னுக்குவர
தேதிகடந்த திருமண பிரசுரம்
இதுவே இப்போது எனக்கான இடம்.........
விரித்துப் பார்த்தால்
இரு கரங்களுக்கும்
நீளம் எட்டவில்லை
உயரமும் என்னை விடவும்
குன்றியதும் இல்லை............
படுத்துறங்கும் போர்வையென விரித்து
கைப்பிடி வாளியிலே கரைத்து வைத்த
பசைகொஞ்சம் ஊற்றி விரித்த
விரல்களோடு உள்ளங்கை உலாவிடவே
இவன் கொண்டு வந்த பிரசுரமும்
இப்போது சுவற்றில் கம்பீராமாய்
காட்சி தருகிறது இன்று இவனுக்கு சம்பளம்
கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு........
இவன் ஒட்டிய பிரசுரம் இவனுக்கும்தானே
படித்துப் பார்ப்போமா ஒருமுறையேன படிக்கிறேன்
அட !........ அடடா !!....... அசந்துபோகிறேன் !!!.......
உணர்வைத் தூண்டும் வரிகள்
விடுதலை வேண்டும் வரிகள்
என்ன வரிகள் !........ என்ன வரிகள் !!........
குழந்தை தொழிலாளிக்கு இப்படி ஒரு தோழனா ?!.......
வியந்து போகிறேன் எங்கே இருப்பானோ இந்த கவிஞன் ?........
எப்படியேனும் அறிந்துகொள்ள வேண்டும் இந்த
குழந்தை தொழிலாளி யாரென்று பள்ளியில்
முதலாம் வகுப்பு படிக்கும் தம்பியிடம் எனும்
ஆவலோடு அடுத்த வீதி நோக்கி ஓடுகிறேன்
ஒட்டத்தெரியா மிதிவண்டியை உருட்டியவாறே !........
**************தஞ்சை குணா***********