பக்தி

கட்டுப்பா டற்ற இறையை மதத்திற்குள்
கட்டிவைத்துக் கொள்ளும் கடும்பக்தி – பட்ட
மரத்தின்மேல் பற்றுவைத்து நீரிரைத்துப் பூவை
கரங்கொய்ய கேட்பதற் கொப்பு.

மதமற்ற வன்பேர் மதம்செய்து மண்மேல்
மதங்கொண்ட யானை மதியாய் – மிதமாய்
மதவெறி கொள்ளும் மனிதர்க்கு பக்தி
முதலற்ற தோர்வியாபா ரம்.

நியதியற்ற ஆண்டவன் மேலே பலவாய்
நியதிகள் வைத்து வணங்கும் – வியாதிகளாய்
பக்தி பரவசம் பூணும் பகல்வேசம்
முக்தி அடைவதில்லை காண்.

செய்யும் தொழில்மேல் சிரம்வைத்துக் கொன்றென்றும்
உய்ய வியர்வை உடம்பாலே – பெய்விக்கும்
தொய்வற்ற துந்தன் தொழில்பக்தி யால்நீயும்
தெய்வத்தைக் காணல் தகும்.

இறைவனென்று ஒன்றிங்கு இல்லையென்று சொல்லி
மறைமுகமாய்த் திட்டி மகிழ்வோர் – குறைகளையும்
மாய்க்குமோர் சக்தி இயற்கையன்றோ. பக்தியுடன்
வாய்த்த அதைநீ வணங்கு.

தனக்குமேல் உள்ள தலைவனவன் யாரோ?
எனக்கு முனக்குமிம் மண்ணில் – அனவரதம்
உண்ண உணவளித்து உற்ற உருமறைத்து
எண்ணத்தில் நிற்பான் அவன்.

உருவற்ற ஓர்சக்தி வையத்தில் உண்டு
அருவமாய் நிற்கும் எதையும் – உருவாக்கும்
சக்தி அதுவென்று நம்பி அடைமுக்தி.
பக்தி பரவசந்தான் பார்!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (9-Jan-16, 1:54 am)
பார்வை : 144

மேலே