அவன் அவள் அது...
கொலுசு சத்தம் கேட்கிறதே...
அவள் வந்து கொண்டிருக்கிறாள்...
இதோ அருகே அருகே மிக அருகே
ம்ம்ம், வந்து தான் விட்டாள் போல...
அவள் வந்தது தெரியாத மாதிரி
வேறு பக்கம் திரும்பிக் கொண்டு
கையில் கிடைத்த புத்தகத்தோடு
சோபாவில் சாய்ந்து கொண்டு அவன்...
"என்னங்க, காப்பி போடவா?" என்று
அவள் கேட்க வேண்டும்...
ஜமிந்தார் போல் நடத்த வேண்டும்
கொஞ்சிக் கொஞ்சி பேச வேண்டும்...
இதெல்லாம் எப்படி முடியும்?
அவளுக்கோ தலை வலி
அலுவலகத்தில் கெடுபிடி
அவளுக்கு ஒரு காப்பி கிடைத்தால் தேவலாம்....
இரண்டு மனங்களில் எண்ண அலைகள்
எதிரும் புதிருமாய் எதிர்பார்ப்போடு
காப்பி என்னவோ குடித்தார்கள் தான்
சர்க்கரைக்குப் பதில் சங்கடங்கள் கலந்து...
கொலுசுச் சத்தம் தூரே தூரே
போய்க் கொண்டே இருக்கிறது...
சத்தம் இல்லேன்னாலே தேவலாம்
என்று நித்தமும் அவனும் அவளும்...