உனக்காக
![](https://eluthu.com/images/loading.gif)
எப்படி படைத்தான்
பிரம்மனுனை?
எப்படி விடுத்தான்
புவியிலுனை?!...
விழிவிழுந்து
உயிர்ப்பருகிடும்
இரு விழியதுவும்
விண்மீன் திரளோ?!...
சாமம் மேவிய
கருமையென
உதிர்த்துவிட்ட
உன் குழலதில்
இயற்கை மணம்
தேடியா
ஓடி வருகிறது
இக்காற்று?!...
பொன்னும் பஞ்சும்
சேர்த்தெடுத்து
அதனுடன்
கொஞ்சம்
மஞ்சள் சலித்து
ஆக்கிய
அதிசயமிரண்டை
வெறும் கைகளெனல்
பொருட்குற்றமாகாதோ
நக்கீரரே?!...
வதனம் கொஞ்சும்
நுதலதுவும்
சந்திர மண்டிலமோ?
சற்றே கனிந்த
சுளையிரண்டும்
பழமுதிர்ச்சோலையோ?!...
இயற்கையின்
அற்புதம்
உன் தேகம்
தாங்கிடும் பாதம்
ரெண்டும் தாங்கிடல்
புவியினுக்கு
பெரும்பேறு...!
நீ மொழிந்திடும்
சொற் கேட்டு
கல்லும் காதலுறும்..!
கரும்பின் சாறென
ஒவ்வொரு சொல்லும்
காளையர்
உயிர்க்கொல்லும்...!!
உலகதிசயங்கள்
அதிசயத்திடுமென்
உயிரும்
உடலுமானவளே...!
வியாபித்த சாகரமாய்
உன்னழகு மொழிந்திட
உயிர்மெய் போதுமோ?!...
முற்றுமுனை
வடித்தெடுக்க
நான் சிற்பியல்ல...
காவியமென
கரைத்தளிக்க
மா கவியுமல்ல...!
உன்னத சொற்கள்
தெரிந்தெடுத்து
அதனோடு
எந்தன்
உயிர் சேர்த்து
"குறுக தறித்த
குறளெனவே" தமிழ்
கிழவியவள்
மொழிக்கேட்டு
உவகையித்தேன்
நீ
என் பாதியென மெல்ல...
பொருளற்ற
ஜோடனை
வார்த்தைகளடுக்கி
வேறென்ன சொல்ல?!!...
**********************