இயற்கையும் அறியும் வாழ்க்கையின் தத்துவம்

செங்கதிரவனே !
இயற்கை தோற்றத்தில்
வெகுமதி அளிக்க
இயலா மிகுதியானவனே !!...........

அட !
நீ கூட
தினம் தினம்
எடுத்துரைக்கிறாயே !
வாழ்க்கையின் தத்துவத்தை !!.......

ஆம்.......

அதிகாலை வேளையிலே தினம்
மெல்லமெல்ல மேல் எழும்புகிறாயே !
அகிலத்தாரின் உள்ளத்தைக் கவர்ந்தவாறே !!

உனக்கும் கூட
ஆறு ஜாம நாழிகையும்
அவசியம்தானா எவர்கண்ணும்
உன்னை எட்டாவண்ணம் உயர்ந்திட
நண்பகல் உச்சிதன்னை அடைந்திட !

அட !....
ஒருநாளும் நீ
அறிந்ததில்லையோ
மனிதன் அறிந்த
புகழையும் கௌரவத்தையும்......

ஆம்.........
நீ அறியவில்லை அதன்
அவசியமும் உனக்கில்லை
அறிந்திருந்தால் அதுவே
அகிலத்திற்கே தொல்லை.........

அதனால்தானோ ?!.........

வானின் உச்சிதனை
எட்டியவன் மீண்டும்
மாலைநோக்கி இறங்கிவர
எண்ணம் கொண்டாய்.....
அட !....

அதிலும்கூட என்னதொரு நிதானம்
எடுத்துக் கொள்கிறாயே ஏறுவதற்கான
அதே ஆறு ஜாம நாழிகையை.........

வருடத்தின் அனைத்து
தினங்களும் ஒன்றை
எடுத்துரைத்தவாறே எங்களை
கடந்து செல்கிறாயே........

ஆம்......

வாழ்க்கை என்பது
ஏற்றமும் இறக்கமும் கொண்டது
அங்கே புகழின் உச்சியில் கௌரவமும்
உனக்கு இருக்கை ஒன்றை தந்துவிடும் !.......

அதிலேயே நீ
அமர்ந்துவிட்டால் உந்தன்
கடமை நோக்கிய பயணம்
அங்கேயே உறங்கிவிடும் என !.......

ஆறறிவு ஜீவனாம்
அவனே மனிதனாம்
அவன்கூட அறிந்துகொள்ள
விளைவதில்லை ஏனோ ?!......
இயற்கை காட்டும் தத்துவத்தை !

*********************தஞ்சை குணா****************************

எழுதியவர் : மு. குணசேகரன் (13-Jan-16, 12:16 pm)
பார்வை : 338

மேலே