சீன பங்குச் சந்தை சரிவு… இந்தியாவுக்கு என்ன பாதிப்பு
சீன பங்குச் சந்தை சரிவு… இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
vayal
---------------
ஓராண்டு காலத்துக்குமுன்பு கிரீஸும் இத்தாலியும் உலகம் முழுக்க உள்ள பங்குச் சந்தைகளை பயமுறுத்தி வந்தன. தற்போது அந்த இடத்தை சீனா பிடித்திருக்கிறது. சீன பங்குச் சந்தைகளையும், அங்கிருந்து வரக்கூடிய புள்ளிவிவரங்களையும் கூர்ந்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உலகம் இருக்கிறது. காரணம், கடந்த ஒரு வாரத்தில் சீன பங்குச் சந்தையில் இரண்டு நாட்கள் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக உலகம் முழுக்க உள்ள பங்குச் சந்தைகள் இறக்கம் கண்டதுடன், நம்முடைய பங்குச் சந்தைகளும் கணிசமான இறக்கத்தை சந்தித்துள்ளன. சீனாவில் அப்படி என்னதான் நடக்கிறது, சீன பொருளாதாரமும், பங்குச் சந்தைகளும் ஏன் இப்படி இறங்குமுகத்தில் உள்ளன?
சரிவுக்கான காரணங்கள்
2004-க்கு பிறகு சீனாவின் வளர்ச்சியில் கட்டுமானத்துக்கான தேவைகள் முக்கிய பங்கு வகித்தன. இதன் காரணமாக, முக்கியமான கமாடிட்டி பொருட்களை உற்பத்தி செய்கிற நாடுகள் அனைத்தும் சீனாவுக்கு எக்கச்சக்கமாக ஏற்றுமதி செய்தன. இந்த ஏற்றுமதியை நம்பி பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகள் தங்கள் முதலீடுகளை அதிகரித்தன. இதனால் ஏற்றுமதி செய்கிற நாடுகளின் ஜிடிபியும் நன்கு வளர்ந்தன. 2009-ல் 6.2 சதவிகிதமாக இருந்த சீனாவின் ஜிடிபி மேல் நோக்கி நகர்ந்து, 2010-ல் 11.9 சதவிகிதமாக ஏற்றம் கண்டது. ஆனால், அதன்பிறகு படிப்படியாக குறையத் தொடங்கி, தற்போது 6.5% என்ற அளவுக்கு வந்து நிற்கிறது.
இ்ந்த நிலையில், சீன அரசாங்கம் இதுவரை உற்பத்தி துறைக்கு முக்கியத்துவம் அளித்து வந்ததை நிறுத்திவிட்டு, நுகர்வோர் சந்தையை பலப்படுத்த முயற்சி எடுத்து வருகிறது. ஆனால், இந்த முயற்சி பலனளிக்கவில்லை. ரியல் எஸ்டேட் சுணக்கம் அடைந்தது.
2014 – நவம்பர் மாதத்துக்குப் பிறகு வட்டி விகிதங்களை பலமுறை குறைத்தும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை. பங்குச் சந்தை சார்ந்த நிதி உதவிகளைச் செய்து, அதற்கேற்ப சட்டங்களை மாற்றி அமைத்து சிறு முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தி, பங்குச் சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க முயன்றது.
ஆறு வருடத்தின் குறைந்த நிலையில் ஜிடிபி இருக்கும்போது, பங்குச் சந்தைகள் மட்டும் ஊகத்தின் அடிப்படையில் அதிகரித்தன. கடந்த 2015 மே மாதத்துக்குப்பிறகு பங்குச் சந்தைகளோ அடிப்படை முகாந்திரங்கள் ஏதும் இல்லாமல் 50 சதவிகிதத்துக்கு மேல் ஏற்றம் கண்டுள்ளது. அதே சமயத்தில், சென்ற டிசம்பர் மாத பொருளாதார புள்ளிவிபரம், சந்தை எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக இருந்தது. இதனால் சீன பங்குச் சந்தைகள் பலமாக சரிகின்றன.
உற்பத்தியை உள்நாட்டு தேவைக்கு அதிகமாக தயாரித்துவிட்டு, இப்போது அவை அனைத்தும் கையிருப்பாக இருப்பதால், சீனா தனது கவனத்தை ஏற்றுமதி பக்கம் திருப்பியுள்ளது. 2011-ல் சீனாவின் யுவான் நாணயமானது, அமெரிக்க டாலருக்கு நிகராக 6.62-ஆக இருந்தது. 2014 துவக்கம் வரை 6.04 என்கிற வலுவான நிலையிலும், அதன்பிறகு தற்போது 6.52-ஆகவும் இறக்கம் கண்டு வருகிறது. யுவான் நாணய மதிப்பைக் குறைக்கச் செய்வதால், இன்னும் அதிகமான ஏற்றுமதி செய்யலாம் என்று கருதுகிறது சீனா.
பாதிப்புகளும் பக்க விளைவுகளும்!
சீனாவுக்கு எந்த நாடுகள் எல்லாம் ஏற்றுமதி செய்ததோ, அந்த நாடுகள் எல்லாம் தற்போது பாதிப்புக்குள்ளாகி உள்ளன. ஆஸ்திரேலியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகியவை இரும்புத்தாதுவையும், சவுதி அரேபியா கச்சா எண்ணெய்யையும் சீனாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகின்றன. இந்த நாடுகள் அனைத்தும் தற்போது சிக்கல்களுக்கு ஆளாகி இருப்பதால், அமெரிக்க டாலருக்கு நிகராக இந்த நாடுகளின் நாணய மதிப்பு 20% முதல் 45 % வரை இறக்கம் கண்டு, பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
சீனாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சரிவு, நம் நாட்டிலும் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தவே செய்யும். எப்படிப்பட்ட பாதிப்புகள் நமக்கு வரலாம் என்பதை பட்டியலிடுவோம்.
நவீன நகரங்கள் (Smart Cities)
மத்திய அரசின் இந்த திட்டத்தில் கட்டுமானம் முக்கிய பங்கு வகிப்பதால், இதற்கு தேவையான உலோகங்களான இரும்பு, காப்பர், அலுமினியம் போன்றவை சீனாவின் இறக்குமதி குறைந்ததின் அடிப்படையில் தற்போது 6 வருட குறைந்தபட்ச விலையில் வர்த்தகமாகிறது. இதனால் அரசுக்கு ஏற்படும் செலவினங்கள் குறையும். அதே சமயத்தில் நம் நாட்டில் இதே உலோகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை பாதிப்படையச் செய்யும்.
கச்சா எண்ணெய் விலைச் சரிவு!
உலக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சீனா, பொருளாதார மந்தநிலை காரணமாக, இறக்குமதியைக் குறைத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிவுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவால் இந்தியாவுக்கு அந்நியச் செலாவணி மிச்சமாகிறது. இந்த விலைச் சரிவு, நம் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை இடைவெளியை குறைக்கச் செய்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை Sஓரளவுக்கு தடுக்கிறது. மற்ற வளரும் நாடுகளின் நாணய மதிப்பு, டாலருக்கு நிகரான வீழ்ச்சியை ஒப்பிடுகையில் குறைவு. எரிபொருள் மீதான பணவீக்கம் குறைய வழி வகுக்கிறது
வாகனத் துறை (Auto Sector)
வாகனத் துறையில், வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படலாம், குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜேஎல்ஆர் கார் விற்பனையில் 15% சந்தை சீனாவாக இருப்பதாலும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான டயர் விலை குறைவாக இருப்பது, நம் நாட்டின் உற்பத்தியாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இதன் தாக்கம் வாகனத் துறையில் இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
தங்கம்!
உலக அளவில், தற்போது தங்கத்தை பயன்படுத்துவதில் இந்தியாவைவிட சீனா முதலிடத்தில் இருக்கிறது. சீனாவின் தங்க இறக்குமதி அதிகரித்து வருவது, இதன் விலையில் பிரதிபலிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
செல்போன்!
சீனாவின் ஏற்றுமதியில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் முக்கியப் பங்கு வகிப்பதாலும், அதுவும் சீனாவின் நாணயமான யுவானை மதிப்பிறக்கம் செய்துள்ளதால், நம் நாட்டை நோக்கி அதிக அளவில் செல்போன்கள் திருப்பிவிடப் படக்கூடும். சந்தையில் மலிவு விலையில் செல்போன் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
கடன்கள் (Loans)!
நிறுவனங்கள் வெளிநாட்டுக் கடன்களை அமெரிக்க டாலரில் பெற்றிருந்தால், அத்தகைய கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு கஷ்டப்பட வேண்டியிருக்கும். சீனாவின் பொருளாதாரச் சரிவினால், நமக்கு சில சாதகங்களும், சில பாதகங்களும் ஏற்படப் போகிறது. பாதகங்களை ஒதுக்கிவிட்டு, சாதகங்களை தேடி நாம் செல்வோம்.
நன்றி வயல்