வரி இல்லா பத்திரங்கள் முதலீட்டுக்கு ஏற்றதா
வரி இல்லா பத்திரங்கள் முதலீட்டுக்கு ஏற்றதா?
vayal
---------------
டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள்…
வரி இல்லா பத்திரங்கள் (டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள்) இப்போது முதலீட்டாளர் களிடையே அதிகளவில் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன. அரசுக்குச் சொந்தமான பல நிறுவனங்கள் அரசின் ஒப்புதலோடு இந்தப் பத்திரங்களை வெளியிட்டு வருகின்றன. முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்வதில் ஆர்வத்துடன் உள்ளனர். மேலும், பல நேரங்களில் அனுமதிக்கப்பட்ட தொகையைவிட கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது. வரி இல்லா பத்திரங்கள் என்றால் என்ன? அவற்றில் முதலீடு செய்வது யாருக்குப் பொருத்தமாக இருக்கும்? இதில் உள்ள லாப, நஷ்டங்கள் ஆகியவற்றை பார்ப்பதற்குமுன், வரி இல்லாத பத்திரங்களின் சில அடிப்படைகளை சுருக்கமாக பார்த்துவிடுவோம்.
அடிப்படை அம்சங்கள்!
* வரி இல்லா பத்திரங்களை விநியோகிக்க அரசிடமிருந்து முன்அனுமதி பெறவேண்டும். இதற்கான அனுமதி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ), என்டிபிசி, ஊரக மின்மயமாக்கல் கழகம் (ஆர்இசி) மற்றும் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் போன்ற அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு மட்டுமே தரப்படுகிறது.
* இந்தப் பத்திரங்கள் நீண்ட முதலீட்டு காலம் கொண்டவை. இவை 10, 15 மற்றும் 20 ஆண்டுகளுக்குப் பின்பு முதிர்வடையக் கூடியவை.
* இந்தப் பத்திரத்துக்கான வட்டி விகிதம், அரசின் கருவூலப் பத்திரங்களுக்கான தற்போதைய வட்டி விகிதம் மற்றும் பத்திரம் வெளியிடும் நிறுவனத்தின் கடன் தரக் குறியீட்டை பொறுத்து நிர்ணயிக்கப்படும்.
* வருடத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் இதற்கான வட்டி வழங்கப்படும். இந்த வட்டிக்கு வருமான வரி இல்லை. உதாரணத்துக்கு, சமீபத்தில் என்டிபிசி வெளியிட்ட 10 ஆண்டு கால பத்திரங்களுக்கு (சிறு முதலீட்டாளர் பிரிவு) வட்டி விகிதம் 7.36%. வரிச் சலுகையைக் கணக்கில் கொண்டால், 30%, 20% மற்றும் 10% வரி செலுத்தும் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் வரிக்கு முந்தைய வருவாய் முறையே 10.65%, 9.27% மற்றும் 8.21 சதவிகிதமாக இருக்கும். aaa தரமுள்ள பத்திரங்களில் இது நல்ல வரி விகிதமாகும்.
* இந்தப் பத்திரங்கள் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகின்றன. இந்தப் பத்திரங்களை முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும், விற்க முடியும். அப்படி இந்தப் பத்திரங்களை விற்கும்போது கிடைக்கும் லாபம், மூலதன ஆதாயமாக எடுத்துக்கொள்ளப்படுவதால், லாபத்துக்கு வரி உண்டு.
* பத்திரங்கள் 12 மாதங்கள் கழித்து விற்கப்பட்டால், மூலதன ஆதாயம் ‘நீண்ட கால’ லாபமாகவும், அதற்குள்ளாக விற்கப்பட்டால் ‘குறுகிய கால’ லாபமாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.
* இப்பத்திரங்கள் மூலம் பெறும் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு வருமான வரி 10% மட்டுமே. குறுகிய கால மூலதன ஆதாயம் வழக்கமான வருமானம் போலவே எடுத்துக் கொள்ளப்பட்டு, முதலீட்டாளரின் மொத்த வருமானத்துடன் சேர்க்கப்பட்டு வரி விதிக்கப்படும்.
*என்னதான் இந்த வரி இல்லா பத்திரங்கள் பிரபலமானவையாகவும், கவர்ச்சிகரமான சலுகைகளையும் கொண்டிருந்தாலும் எல்லோருக்கும் ஏற்ற முதலீட்டு திட்டம் என்று இதனைச் சொல்ல முடியாது. குறிப்பாக, சிறு முதலீட்டாளர்களுக்கு (ஒரு பாண்டு வெளியீட்டில் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்யக்கூடியவர்கள்) இது ஏற்றதல்ல என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
குறைவான ஒதுக்கீடு!
*வழக்கமாகவே, இந்த டாக்ஸ் ஃப்ரீ பாண்டு களுக்கு முதலீட்டாளர் கள் மத்தியில் அதிக ஆதரவு இருப்பதால், விண்ணப்பிக்கப்பட்ட அளவில் ஒரு பகுதிதான் ஒதுக்கீடு செய்யப்படும். உதாரணமாக, சமீபத்தில் பிஎஃப்சி வெளியிட்ட பத்திரங்களில், 1,000 பத்திரங்கள் விண்ணப்பித்தவருக்கு அதில் ஏழில் ஒரு பங்கு (139) பத்திரங்கள்தான் ஒதுக்கப்பட்டன. இப்படி குறைவான எண்ணிக்கையில் உள்ள முதலீடுகள் அதிகளவில் போர்ட்ஃபோலியோவில் இருந்தால், அதனை நிர்வகிப்பது கடினமாக இருக்கும்.
கூட்டு வட்டிக்கான வாய்ப்பு இல்லை!
*வரி இல்லா பத்திரங்களுக்கான வட்டியானது வருடா வருடம் வழங்கப்பட்டு விடுவதால், அதிக வருவாயை அடைவதற்கு மிக முக்கிய காரணியாக இருக்கும் ‘கூட்டு வட்டி (Power of Compounding) எனும் அதிசயம்’ இதில் இல்லை. சொத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டுமெனில், கூட்டு வட்டி (Compound Interest) திட்டங்களில் முதலீடு செய்யவேண்டும்.
*ஏனெனில் பெரும்பாலான முதலீட்டாளர் களுக்கு தொடர்ந்து தங்கள் வட்டி வருவாயை மறு முதலீடு செய்வது என்பது கடினமான விஷயமாக இருக்கும். பல நேரங்களில் அந்தத் தொகை குறைவானதாகவும், வெவ்வேறு காலங்களிலும் பெறப்படுகிறது. அதனாலேயே அது பெரும்பாலும் வங்கி சேமிப்புக் கணக்கில் அப்படியே தங்கிவிடுகிறது அல்லது அதை எடுத்து செலவு செய்துவிடுகிறோம்.
*உதாரணமாக, 30% வரி செலுத்தும் ஒரு முதலீட்டாளர் என்டிபிசி பத்திரத்தில், ரூ.10 லட்சம் முதலீடு செய்து, வருடா வருடம் வரும் வட்டியை, வங்கி ஒட்டுமொத்த வைப்புக் கணக்கில் தவறாமல் முதலீடு செய்து வந்தால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவரிடம் உள்ள தொகை ரூ.19.49 லட்சம். இதில் வருடாந்திர வட்டி விகிதம் வரிக்குப் பிறகு 6.9% ஆகும்.
*அதே முதலீட்டாளர், கவனக்குறைவினால் தன்னுடைய வட்டி வருவாயை தனது சேமிப்பு கணக்கில் வைத்திருந்தால், அதற்கு கிடைக்கும் 4% வட்டி (வரி உண்டு) வருவாய் 10 வருடங்களுக்குப் பிறகு முதிர்வு தொகையாக ரூ.18.35 லட்சம் கிடைக்கும். இதன் ஆண்டு வருவாய் 6.26% மட்டுமே.
உடனே விற்க முடியாது..!
பங்குச் சந்தைகளில் இந்த பாண்டுகள் மீதான வர்த்தக எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதால், நினைத்த உடனே விற்று பணமாக்க முடியாது. அதனால் இவற்றை எளிதாக விற்க முடிவதில்லை. உதாரணத்துக்கு, என்டிபிசி 2013-ல் வெளியிட்ட வரி இல்லா பத்திரங்கள் கடந்த ஓராண்டு காலகட்டத்தில் (27-நவம்பர்-2014 முதல் 26-நவம்பர்-2015 வரை) தேசியப் பங்குச் சந்தையில் 21 நாட்கள் மட்டுமே வர்த்தகம் ஆயின. அதில் 6 நாட்களில் வெறும் 10 பத்திரங்கள் (ரூ.10,000 மதிப்பு) மட்டுமே வர்த்தகம் ஆயின. 2015 பிப்ரவரியிலிருந்து ஜூன் வரையிலான 5 மாதங்களில் ஒரு நாளில்கூட வர்த்தகம் நடக்கவில்லை. இந்த ஓராண்டு முழுவதும் நடந்த வர்த்தகத்தின் மொத்த மதிப்பு ரூ.1.26 கோடி மட்டுமே.
வேறு என்ன முதலீடு?
இந்த காரணங்களை எல்லாம் பார்த்தால், வரி இல்லா பத்திரங்களைவிட வேறு சிறந்த முதலீடு ஏதும் உள்ளதா என்று கேட்கத் தோன்று கிறதல்லவா?
வேறு சிறந்த முதலீடுகள் நிச்சயம் இருக்கவே செய்கிறது. மியூச்சுவல் ஃபண்டில் நல்ல கடன் சார்ந்த முதலீடுகள் நிறைய இருக்கின்றன.
பல ஃபண்ட் நிறுவனங்கள் ஓபன் எண்டட் முதலீட்டு திட்டங்கள் பலவற்றை வழங்குகின்றன. இவை அனைத்து வேலை நாட்களிலும் விண்ணப்பிக்கும் வகையில் உள்ளன.
முதலீட்டாளர் தன்னுடைய முதலீட்டை எப்போது வேண்டுமானாலும் (முழுமையாகவோ பகுதியாகவோ), ஃபண்ட் நிறுவனங்களின் நிபந்தனைகளுக்குட்பட்டு எடுத்துக்கொள்ள முடியும்.
வருவாயை அடிக்கடி எடுக்காமல் அப்படியே வைத்திருந்து ஒட்டுமொத்தமாக, கூட்டு வட்டியின் பலனைப் பெற முடியும்.
முதலீடு மூன்று ஆண்டுகளுக்கு அப்படியே இருக்கும்பட்சத்தில், அதற்கு இண்டெக்சேஷன் பலன்களும், சலுகை வரி விதிப்பும் இருக்கும். உதாரணத்துக்கு, ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் எஸ்டி இன்கம் ப்ளான் (குறுகிய கால கடன் முதலீடு) கடந்த 10 ஆண்டுகளில் 9.14% வருமானம் கொடுத்திருக்கிறது. ஒரு முதலீட்டாளர் ரூ.10 லட்சத்தை 10 வருடங்களுக்குமுன் குரோத் ஆப்ஷனின் கீழ் முதலீடு செய்திருந்து, அதை இப்போது திரும்ப எடுத்தால், நீண்ட கால மூலதன ஆதாய வரி போக [வருவாயில் 3.3% மட்டுமே, அதாவது, ரூ.0.46 லட்சம்] அவருக்கு ரூ.23.52 லட்சமாக கிடைத்திருக்கும். இதன் வருடாந்திர வட்டி (வரிக்குப் பிறகு) 8.93% ஆகும்.
வரி இல்லா பத்திரங்கள் யாருக்கு ஏற்றது?
சொத்துக்களை உருவாக்க நினைக்காத அல்லது அவசியம் இல்லாத அளவுக்கு பணத்தை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு, ஓய்வு பெற்றபிறகும் வரி செலுத்தும் முதலீட்டாளர்களுக்கு, இந்தப் பத்திரங்கள் பொருத்தமாக இருக்கும். வரிக்கு உட்படாதவர்களுக்கு வங்கி நிரந்தர வைப்பே சிறந்தது.
குறிப்பிட்ட கால இடைவெளியில் பத்திரங்களைப் பங்குச் சந்தையில் விற்று, மூலதன ஆதாயத்தை புத்திசாலித்தனமாக மறு முதலீடு செய்துவரும் முதலீட்டாளர்களுக்கு இந்தப் பத்திரங்கள் ஏற்றவை. வட்டி விகிதம் குறையும்போது, முன்பு வெளியிடப்பட்ட பத்திரங்கள் சந்தையில் அதிக விலையில் விற்கும். அந்த சமயங்களில் அவற்றை விற்று மூலதன ஆதாயத்தை வெளியே எடுத்துவிடலாம். நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு வரிச் சலுகையும் உண்டு.
உதாரணத்துக்கு, என்ஹெச்ஏஐ ஜனவரி 2012-ல் வெளியிட்ட ரூ.1,000 முக மதிப்புள்ள பத்திரங்களுக்கு 8.20% வட்டி தரப்படுகிறது (ஆண்டு தோறும் அக்டோபர் 1-ம் தேதி). இந்தப் பத்திரம் 26 நவம்பர் 2015-ல் ரூ.1,074-க்கு வர்த்தகமானது. முதலீட்டாளர் ஒருவர் அக்டோபர் 1, 2012, 2013, 2014, 2015-ல் பெற்ற வட்டி வருவாயை வங்கி நிரந்தர வைப்பு நிதியில் 8% வட்டிக்கு மறு முதலீடு செய்து இருந்து, 26 நவம்பர் 2015, பத்திரத்தை ரூ.1,074-க்கு விற்றால் அவர் கையில் உள்ள தொகை, வரி செலுத்தியது போக கிடைக்கும் வருமானம் ரூ.1,395. வருடாந்திர வட்டி விகிதம் வரிக்குப் பிறகு 9.06% ஆகும்.
நிறுவனங்கள் தங்களிடம் உபரியாக உள்ள பணத்தை, அவசரமாக தேவைப்படாது என்றால் இதில் முதலீடு செய்யலாம்.
சிறு முதலீட்டாளர்களுக்கு (ரூ.10 லட்சத்துக்கு மிகாமல் கடன் சார்ந்த திட்டங்களில் ஒரே நேரத்தில் முதலீடு செய்பவர்கள்) மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கடன் திட்டங்கள் இந்தப் பத்திரங்களைவிட பொருத்தமானவை. ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்; முதலீட்டைத் திரும்பப் பெறலாம். மூன்று ஆண்டுகள் முதலீட்டை வைத்திருந்தால், வரிச் சலுகையும் உண்டு.
எனவே, இந்த வரி இல்லா பத்திரங்கள் குறிப்பிட்ட சில வகை முதலீட்டாளர்களுக்கு மட்டும் முதலீடு செய்ய ஏற்றவையாக உள்ளன!
நன்றி ;வயல்