ஆடுமாடு மேய்க்கயிலே
பகலவன் தன்நிழல் மறுக்கும் வேளை
தூரப் பனையில் இட்டத்துளையில் துயிலுற
தூசியாய் தூரத்தில் விரையும் கிளி
வெண் முகிலுக்கு பொட்டு வைக்கவே
நடுவானில் சிறகு விரித்த காக்கை
ஒய்யார ஊஞ்சலாடும் மணிப்புறா கம்பியிலே
கும்மாளமடிக்க குளம் குவிந்த கொக்கு
வண்ணப்பூச்சி வான் பறக்க என்
கண்ணி ரெண்டும் அதனொடு மிதக்க
செடி விடுத்து என்மடி விழுந்த
விட்டில் பூச்சி கண்ணிமைக்கும் நொடி
எனை விட்டே விரைந் தோட
மாடி ரெண்டும் முட்டி ஆட
மங்கை ஒருத்தி கண்டு ஓட
ஆடு பல அங்கிங்கு ஓட
அதட்டிக் கொண்டே அவன் நாட
இணை பிரிந்த கிளை யிடையே
இறுக வலை அமைத்து தனி
இன்பத் துயிலுறும் சிற் சிலந்தி
இலவச இறை யளித்து தற்காலிக
இடங் கொடுத்து இன்பங் காணும்
இலை பொறுக்கும் ஆ டங்கே
மரத்தடி நிழல் துண்டு விரித்து
துயிலுறும் கணமே சொர்க்கம் செல்ல
கண்ணெட்டும் தூரம் காயாப் பச்சை
அந்தி மாலை சாயையிலே அங்கே
குதித்து குளிக்கும் வேளையிலே ஆட்டம்
கொண்டாட்டம் ஆனந்தக் களிப்பு அகத்திலே
ஆநிரைப் மேய்த்து அதட்டலோடு ஆரம்பம்
வீடு பார்த்து விழி நடக்கும்.
.