சமத்துவப் பொங்கல்

விதவிதமாய் வண்ண
சுடிதார் உடுத்தி காளையர்
வாலிபத்தை கவரும் கல்லூரி
கன்னிகைகளை வழக்கமாய்
காணவந்தேன் வழக்கத்திற்கு
மாறாக மாறிப்போனதே உம்முடைய
அலங்காரங்கள் ஏனோ !.....

எனினும் குறையொன்றும்
இல்லை கண்ணிகைகளே !
மனம் குதூகலமானது உமது
சேலைகளின் மடிப்பில்தானே !!

இந்நாள் வரை தங்களின்
பின்னால் தொடராதது ஏனோ ?
அறியவில்லை தொடரும்
அவசியமும் இல்லை !....

இன்று உம்மைத் தொடர
வைக்கிறது இக்கோலத்தில்
எங்குதான் செல்கிறீர்
என அறிந்துகொள்ளவே !.....

ஓடும் பேருந்தில் ஓடிவந்து
பற்றி ஏறிக்கொள்கிறேன் ஏனோ
என்னையும் அறியாமலேயே !!......

சிற்சில நிறுத்துங்கள் கடந்தும்
இங்கு மட்டும் ஏன் இந்த பேருந்து
இயக்கம் அணைக்கப்பட்டது ?.......

ஓ !.........

தாங்கள் இறங்கும் இடம் வந்ததாலோ ? ஏறிய
கன்னிகைகள் யாவரும் இங்குதான் இறங்குகிரீர்........

அட.....
இக்காளைகள் இளம் அரசியல்வாதிகளா
வேட்டிகள் நெய்யப்படுவது அவர்களுக்கு என்றே
எண்ணினேன் இன்று உங்களுக்கும் எவ்வாறு தென்பட்டது
இந்த தமிழரின் பாரம்பரிய உடையானது........

இப்பேருந்தில் எவ்விடத்து
நிறுத்தத்தில் ஏறினீர்கள்
இளம்காளையர்களே இவன்
இறங்கும் இவ்விடத்தில்தான்
காண்கிறான் உம்மை !.....

அட
அதுவிருக்கட்டும் எல்லோரும் இணைந்து
எங்கே அணிவகுத்து செல்கிறீர்கள் ஏதேனும்
அரசியல் கட்சி கூட்டங்களா இல்லையெனில்
மகத்துவ மாதர் சங்கங்களின் கூட்டங்களா !.......

பின்தொடர்ந்துதான் பார்க்கின்றேனே !.....
எனக்கும் பயனுள்ளதாய் இருக்குமென்றே !!.....

வாழையடி வாழையாய் இங்கு வாருங்கள்
என்றுரைத்து நிமிர்ந்து நிற்கும் வாழைமரங்கள் !

இடைவெளியில்லா தோழமையோடு வாழுங்கள்
என்றுரைக்கும் இடைவெளியில்லா தோரணங்கள் !!

எளிமைமாய் பழமையை விளக்கும்
புதுமையான யுக்தியில் எவ்வாறு
அமைத்தீர்களோ இன்னுழைவாயிலை !!!

வருக...... வருக....... எனும்
அழைப்பு எனக்கும்தானே !

அட.....
எத்திசை காணினும் அத்திசையில்
வண்ணமிகு தோரணங்கள் விதவிதமாய்
கண்கவரும் கோலங்கள் கண்டதில்லை வேறெங்கும் !

எங்கே செல்கிறீர் குழுக்களாக பிரிந்து
நிலை தடுமாறிப் போகிறேன் எக்குழுவை
பின்தொடர்வேன் என அறியாமல் !

தமிழை மறவாது தமிழ் உணர்வோடு
தமிழையும் தன்னையும் வளர்ப்பதர்க்காய்
கூடி நிற்கிறது குழுக்கள் ஒன்று அங்கே !

அகிலத்தை சுற்றிவர எம்முதவியும்
உமக்கு அவசியமென அழைப்புகளுடன்
ஆங்கிலத்தில் அழைத்தவாறே அதன் அருகில்
கூடி நிற்கிறது குழுக்கள் ஒன்றும் அங்கே !

புவியியல் வலம்வந்து புள்ளியியல்
துல்லியத்தில் தமிழர் வளர்சிதனில்
பொருளாதாரம் பெருக்கிட வணிகமும்
அறிந்தவன் தமிழன் என எடுத்துரைக்கும்
இந்நான்கு குழுக்கள் இங்கே மறுபுறம் !........

பௌதீகத்தின் விண்ணையும் மண்ணையும்
ஆராயும் திறனோடும் அனுவோடும் அசைவோடும்
பிணைக்கப்பட வேதி ஒன்றும் இல்லையென்றால் ஏதுமில்லை
இவ்வகிலத்தில் இதனையெல்லாம் கணக்கீடு
செய்துகாட்டும் கணிதமேதை தமிழனாம் என
எடுத்துரைக்கும் இம்மூன்று குழுக்கள் இதுவன்றோ !

அட
எல்லாவற்றிற்கும் மதிப்பெண்
அளித்து இவர்களின் திறனை தேர்ந்தெடுக்கும்
தேர்வு குழுக்களா தாங்கள் அதனோடு
உமக்கு எச் செய்தி வேண்டுமெனினும்
இவ்விடம் வாருமென அழைக்கும்
பொது நூலக குழுக்களா தாங்கள்

அட.....
சுற்றும் முற்றும்
சுகாதாரம் காக்க
தூய்மை சமுதாயம்
அமைத்திட உறுதி பூண்ட
உள்ளங்கள் நாட்டு நலப்பணி
திட்ட குழுக்களா தாங்கள் !.......

இவ்விடம் எத்தனை
எத்தனை குழுக்களாயினும்
அத்தனை குழுவையும் பிற
அன்னியிரிடமிருந்து காப்போமென
சூழுரைக்கும் இளம் தேசியப் படை
குழுக்கள் தானோ தாங்கள் !......

அட....
மெய்சிலிர்க்கிறது ஒலிப்பெருக்கி
இல்லாமல் ஒத்திசைவோடு எழும்பிய
பொங்கலோ !....... பொங்கல் !!.................
ஒலிகேட்கும் இக்கணம் அறிந்தேன்
இதுவொரு பொங்கல் திருநாள் என்று !!!.......

அட
இங்குதான் சமத்துவம்
எனும் சொல்லுக்கு
சரியான இலக்கணம்
பரைசாற்றப்படுகிரதென்றால்
இதனை எவர் மறுக்க இயலும்..............

எல்லாம் முடிந்து இவ்விடம்விட்டு
வெளியேற விளைகிறேன் மனதை
இங்கேயே விட்டவாறு.......

நுழைவாயில் கடந்து ஒருமுறை
திரும்பிப் பார்க்க எண்ணம் கொண்டதால்
அண்ணாந்து பார்க்கிறேன் அழகிய
எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட
பெரியார் ஈ.வே.ரா கல்லூரியினை..........

ஆம்.......

சமத்துவம் காணவே
தன்னலம் இல்லா தமிழன்
தனித்துவம் மிக்க தலைவன்
தந்தை பெரியார் கொடையில்
தலைநிமிர்ந்து பறைசாற்றுகிறது
கல்லூரி பொங்கலெனும்
சமத்துவப் பொங்கலினை !......

(வளர்க பெரியார் கல்லூரி !........
வாழ்க பெரியார் ஈன்றெடுக்கா பிள்ளைகள் !!.....)


**************************தஞ்சை குணா***********************************************

எழுதியவர் : மு. குணசேகரன் (14-Jan-16, 12:47 pm)
பார்வை : 1057

மேலே