பார்வைகள்
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள். நான் தொலைபேசி நிறுவனத்தில் பணியில் இருந்த நேரம். எனது அலுவலகப் பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்காக திருவனந்தபுரம் சென்றிருந்தேன். அது நாற்பது நாள் பயிற்சி முகாம். பாடங்களும் செய்முறைத் தேர்வுகளுமாக நாட்கள் போய்க்கொண்டிருந்தன.கேரளாவைச் சேர்ந்த ஒருவர் நெருங்கிய நண்பரானார்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் பரஸ்பரம் இருவரது மொழி, கலை,பண்பாடு,இலக்கியம்இவற்றைப்பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருப்போம். மலையாள மொழி ,தமிழ் ,சமஸ்கிருதம் இரண்டும் கலந்தது என்பதால் புரிந்துகொள்வது அவ்வளவு சிரமமாக இல்லை. புரியாத வார்த்தைகளுக்கு அவர் ஆங்கிலத்தில் விளக்கமளிப்பார். இப்படியாக அவர் தமிழையும் நான் மலையாளத்தையும் புரிந்துகொள்ள முயற்சி செய்து வந்தோம்.
அன்று அவர் சொந்த ஊருக்குச் செல்வதாக இருந்தது .எப்போது திரும்பி வருவீர்கள் என்று கேட்டேன்,
”ஒரு திவசம் கழிச்சு வருவேன் “,என்றார். நானும் இறந்தவர்களுக்குச் செய்யும் திவசம் என்று நினைத்துக் கொண்டு “யாருக்கு திவசம்?”,என்று கேட்டேன்.”யாருக்கு திவசமா?”,என்று திருப்பிக் கேட்டவர் பின்பு ஆங்கிலத்தில் விளக்கினார். மலையாளத்தில் “திவசம்” என்றால் “நாள்” என்று அர்த்தமாம். “ஒரு நாள் கழித்து வருவேன்” என்பதைத்தான் அப்படிக் கூறியிருக்கிறார். நான் அசடு வழிந்தேன்.
இதே மாதிரி, மொழி புரியாமல் ஆந்திராவிலும் அவஸ்தைப்பட்டதுண்டு. தொலைபேசிப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நான் முதலில் வேலைக்குச் சேர்ந்த இடம் ஆந்திர மாநிலம் கடப்பாவாகும்.
அங்கிருந்தமூன்று வருடங்களில் அவ்வப்போது சொந்த சமையலும் செய்வதுண்டு. மொழி புரியாத நேரம்.காய்கறி கடைக்குச் சென்றால் எந்தக் காய்க்கு எந்த பெயர் என்று தெரியாமல் திண்டாடுவதுண்டு.அப்படித்தான் ஒரு நாள் வெங்காயம் வாங்கிவரச் சென்றேன்.கடைக்குச் சென்று “ஒரு கிலோ வெங்காயம் கொடுங்கள்”, என்று கேட்டேன்.அவர் ஒரு கிலோ கத்தரிக்காயை எடைபோட்டுக் கொடுத்தார்.
”சார் நான் கேட்டது வெங்காயம்”, என்று தமிழில் கேட்டேன்.எனக்கு அப்போது தெலுங்கு தெரியாது.அதற்கு அவர் “வெங்காயம் தான் கொடுத்திருக்கிறேன்” என்று தெலுங்கில் பதில் கூறினார்.அவருக்குத் தமிழ் தெரியாது. அதன் பிறகுதான் தெரிந்துகொண்டேன் தெலுங்கில் “வெங்காய” என்றால் கத்தரிக்காய் என்று அர்த்தமாம். ஒருவழியாக வெங்காயத்தை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
இப்படியாக நமது மொழியின் பார்வையிலிருந்து பிற மொழிகளைக் காணும்போது சில சங்கடங்களை சந்திக்க நேர்வதுண்டு. நாம் நமக்குத் தெரிந்த அர்த்தங்களை பிற மொழியில் தேடுகிறோம்.அவர்களும் அப்படித்தான் நமது மொழியில் அர்த்தங்களைத் தேடுகிறார்கள். பார்வை ஒன்றுதான். கோணங்கள்தான் வேறுபடுகின்றன.