கதறி அழும் காதலி

எனை ஆளும் சிவனே இவளது தாரகமந்திரம் உந்தன் பெயரே,
நினைவான கனவே உந்தன் நிழலை நோக்கும் எந்தன் துயரே,
உனைக்கானா நிமிடமனைத்தும் ஆகிப்போவேன் வாடிய பயிரே,
உணர்வுக்கென உருவம் தரித்து உலவவந்தவன் நீதான் உயிரே !

புதிதாக என் உலகுக்குள் வந்தமர்ந்தது உந்தன் உறவே,
தரிசாகத் தொடர்ந்த வாழ்வில் தூவப்பட்டது உன்னத உரமே,
எனையாண்ட தனிமையெல்லாம் உன்னைக்கண்டதும் போனது துறவே,
கால் தொடங்கி மேனி படர்ந்து காதல் கிளர்ந்து சோர்ந்தது சிரமே !

நீ புதைந்த நெஞ்சின் ஆழம் நிறைந்து ஆனது கண்ணீர்க் குளமே,
தீ வளர்ந்து தீண்டி நனைக்குது தேகம் வாடுது எந்தன் வரமே,
நா சுரந்த வார்த்தை எல்லாம் நர்த்தனமாடுது நாளும் வளமே,
போர்க்களத்து நடுவே வந்து பொருளாய் நின்றது அந்தப்புரமே !

பூ மலர்ந்து புதைபொருளானது பூமியை கடந்த எந்தன் மலையே,
நான் விரும்பி ஏற்றதுதானே உன் பிடியென்னும் வண்ணச்சிறையே,
உன் உரசலில் விழிபிதுங்கிய நொடிகட்கெல்லாம் இல்லை விலையே,
உண்மையே உனை இழந்தது உண்மையிலேயே எந்தன் குறையே !

கண்திருடிக் கண்ணீர்திருடி காதல் திருடிய சின்னப்புனலே,
என் பொழுதினிலில்லை விழுதுகள் எல்லா நகர்வுகள்தன்னிலும் தனலே,
அலைபொங்கி ஓய்ந்தது அன்பே ஆனேன் இங்கு நானும் மணலே,
அறிவுதன்னை இறுக்கிக்கட்ட சிந்தையின் கையில் இல்லை சணலே !

உனையிழந்த நாளை நினைக்கின் பொங்கிப்பெருகும் இதயக்கடலே,
ஒன்றிரண்டு இல்லை விம்மி உள்ளம் வரையுது ஆயிரம் மடலே,
இதுவரையில் துண்டாகாமல் துக்கமடைத்துத் தூங்குது குடலே,
விதி முடியும் நாளது வரையில் வாழட்டும் பிணமாகவே உடலே !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (15-Jan-16, 9:10 pm)
பார்வை : 354

மேலே