உழவர் திருநாள்

வெண்மேகம் சிரிக்க
விண்ணிலவு இறங்க
கார் முகில் கரைய
பூமித்தாய் ஆரத்தழுவ
ஆறு குளங்கள் நிறைய
உழவன் உயிர்த்தெழும்ப
பச்சை பசேலென
நெல் பயிர்க்க
குமர்ப்பருவம் தாண்டி
குடலையாகி நிமிர ....

முத்து முத்தாய்
கனிகளை ஏந்தி
நிறைமாத வயல்கள்
நெல்மணிகளைப் பிரசவிக்க
ஆனந்தக் களிப்பில்
ஆதவன் பிரவாகிக்க
முற்றங்கள் முழங்கி
வேட்டுக்களால் வரவேற்க .....

மாவிலைத் தோரணமும்
செங்கரும்பும்
சிலிர்த்திருக்க
ஏலம் கச்சான் பயறு சர்க்கரை
பச்சரிசி சேர்த்துக் கிண்டி
படைத்த பொங்கல்
பழமும் சேர்த்து இனித்திருக்க
புடைத்து உண்டு
பெருமை கொண்டு
ஆதவன் நடக்க
ஏர் இழுத்த காளைகளும்
அன்பித்து ஓய்வெடுக்க ....

புன்னகைப் பூரிப்புடன்
தை மகள் வந்தாள் !

இன்பம் பொங்கி உழவர்
இதயங்கள் வழிய
அன்பு நிறைந்து
அகமகிழ்ந்திருக்க
செல்வம் செழித்து
சிறப்புக்கள் பெருக
கவலைகள் களைந்து
களிப்பில் திளைக்க
பார் முழுவதும் பட்டினி அகல
அகிலமே ஆனந்தத்தில் மிதக்க .....

ஏர் எடுத்து உழுத பெருநாள்
எங்கள் உழவர் திருநாள்
தை மகள் வந்தாள்
தனம் தந்து மகிழ்வாள்
துயரெலாம் களைவாள்
சுகமெலாம் தருவாள் !

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (16-Jan-16, 12:58 am)
Tanglish : uzhavar thirunaal
பார்வை : 1594

மேலே