மனிதம் விதைத்த மழை
கோடி குவித்திருந்தும் குந்த இடமற்றும்
ஓடி ஒளிய வகையற்றும் – நாடி
நரம்பு தளர்த்தி நடைபிணமாய் ஆக்கப்
பிரம்பெடுத்த மாரி பிணக்கு
கழுத்தளவு வெள்ளம் கரைதாண்டும் வேளை
பழுத்தப் பகுத்தறிவு கொண்டு – எழுத்தறிவு
இல்லா இதயத்தில் நின்ற மனிதத்தை
மெல்லக்காண் பித்த மழை.
அன்புட னென்றே அழுக்குடன் என்றென்றும்
துன்புறச் செய்து வரவேற்ற – சென்னை
புனிதம் அடைவதற்காய் பெய்தீற்றில் அங்கே
மனிதம் விதைத்த மழை.
எச்சில் கரங்கொண்டு காக்கை விரட்டாமல்
மிச்சம் பிடித்ததனால் மேலானோர், – துச்சம்
எனநினைத்தோர் மூலம் மனிதம் விதைக்க
மனவயல் செய்த மழை.
பேரிடராய் நூறிடர் பின்னினியும் வந்தாலும்
நேரிடலா மென்றிங்கே நெஞ்சுரமாய் – யாரிடமும்
கூறிடலாம் மாரி விதைத்த மனிதமினி
சோறிடுமே என்று துணிந்து.
கோடிப் பணமிருந்தும் கொட்டும் துயரத்தால்
வாடி வதைபட்டோர் வாசலினைத் – தேடிவந்து
ஏரிழுத்து ஈர மனிதம் விதைத்தாங்கே
நீரிரைத்தாள் மாரி நிறைந்து
மதங்கள் மறைத்து மனிதாபி மான
இதங்கள் இரைத்து எவர்க்கும் – உதவும்
விதிசெய்த மாரி விதைத்திட்ட திங்கு
மதிக்குள் மனித இருப்பு.
மனிதம் விதைக்க மழைகொடுத்த பாடப்
புனிதம் அழியாமல் காக்க – இனியும்
இனமத மொன்றி இணைந்தன்பாய் வாழும்
மனம்கொள்ளல் வேண்டும் மகிழ்ந்து.
ஏழையென்று யாருமில்லை எல்லோரு மொன்றென்று
கோழையையும் வீரனாக்கி கூட்டியே – வாழையடி
வாழையென வாழ்வாங்கு வாழ்ந்தோர் மனங்கொண்ட
மாழையினை மாய்த்த மழை. (மாழை –பேதைமை)
மதவாதம் மற்றும் இனவாதம் யார்க்கும்
உதவாப் பிடிவாத மென்ற – எதுவும்
இனிவேண்டா மென்றே சமத்துவப்பூப் பூக்க
மனிதம் விதைத்த மழை.
*மெய்யன் நடராஜ்
துபாய் தமிழர்சங்கமம் நடத்திய உலகளாவிய கவிதைப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று மூன்று கிராம் தங்கம் வென்ற கவிதை