காட்சிப் பிழைகள் -39 கயல்விழி

காட்சிப் பிழைகள்-39 கயல்விழி
மனமுடைந்து மார்க்கம் இன்றி மரணவழி செல்கையிலே
வரமாய் வந்து வாழ்வு தந்த வானத்து தேவதையே...!
நடு வழியில் தவிக்க விட்டு
நீ மறைந்த காரணத்தை சொல்லாயோ.
என் அன்பில் ஏதும் குறையுண்டோ -இல்லை அகத்தினில் குறை கண்டாயோ
சொல்லிவிட்டு செல்லடி நீ
திருத்திடுவேன் என் தவறை.
தூண்டிலில் ஒரு புழுவானேன்
சுடுமணலில்
மீனானேன்.
ஸ்வரம் இழந்த வீணையாய்
சுதிசேரா ராகமாய்
துணையிழந்து நானானேன்.
ஒளிதந்த சுடர்விழியே
நீ இன்றி
சோக இருளில் மூழ்கலானேன்.
வெண்மதியே என் ரதியே
என்னை பிரிந்தது நியாயமா.?
கடல் அலையை விட்டுக் கரை பிரிந்தால்
உயிர்கள் மண்ணில் வாழுமா .?
அன்பென்றால் அம்மா
என்றார் -அன்பே எனக்கு நீ என்றேன்
அழகே என்னிடம் வந்துவிடு -உன் அணைப்பில் ஆறுதல்
தந்துவிடு.
எப்போதோ மரித்திருப்பேனே
கண்ணே நீ இல்லையென்றால்,
இப்போதும் மரித்துக்கொண்டிருக்கின்றேன் பெண்ணே
நீ இல்லையென்று.
ஜன்னலோர நிலவடி நீயெனக்கு
அன்று
பெளர்ணமியாய் வந்தாய்...
இன்று ஏனடி
அமாவாசையானாய்.?
தூக்கணாங்குருவியென
நீயும்
கூடென நானும்
ஒன்றாய் வாழ்ந்திருந்தோம்...
நீ பறந்துவிட நான்
தொங்கிக்கொண்டிருக்கின்றேன்
உயிர் இழந்த வெறும் கூடாய்.
அழையா விருந்தாளியாய் உன் நினைவும்
அடுக்களைக்குள் பூனையாய் என் காதலும் அடம்பிடிக்கிறது
வெளியேற மனமின்றி.
ஆண் மனதின் நேசம் தான்
வான் அளவை மிஞ்சி விடும்
அருகில் நீ இருந்திருந்தால் உனக்கும் அது புரிந்திருக்கும்.
பாலைவன தடங்களாய் காத்திருக்கின்றேன்
பனித்துளியே நீ வருவாய் என்று...
கானல் நீராகியே போகிறது நம் காதலை போல என் காத்திருப்பும்.
என் இதயச்செடியில்
காதல் மலரானவளே முள்ளின் மேல் காம்பாய் எனை தவிக்கவிட்டு முகம் மறைக்கும் காரணம் சொல்லடியே
முத்தமிழே-என் முத்தழகே
வாய் திறந்து பேசிவிடு
மெளனம் உன் மொழி என்றால்
மரணமே என் வழியாகும்.
கஸல் என்னும் பெயரில் கயலின் கன்னி முயற்சியே.நிச்சயம் தவறுகள் இருக்கும் எனவே மன்னிக்க வேண்டுகின்றேன்.