வேறு நிலாக்கள் -4 பாலா

கவிதை விற்பவன்
**************************


வார்த்தைகளின் பூட்டினைத்
திறந்து
வைகறையின் விளிம்புகள் ஊடே
இளங்காற்றில் ஓர் இலையைப்போல
கனமற்றவர்களாய்
சிட்டுக்குருவியினொரு
சிற்றிறகினைப்போல
மிருதுவாய்ச் செல்லுங்கள் ....

சொற்களினிதழ் விரித்து
வண்ணத்துப் பூச்சியின்
தேனுரி குழாய்கள் போல்
ரசனையின் தேனுரிய
மெல்ல நுழையுங்கள்
அதிவேகம்
தளரும் விரைவில்
மெதுவாகச் செல்லுங்கள்
இயக்கமே அற்றதுபோல் மெதுவாக ...

நீரைப்போல் வடிவமற்றுப்போய்
அர்த்தங்களின் பள்ளத்தாக்குகளில்
தங்கிவிடுங்கள் -
புரிதலில் சிரமமுள்ள
உயரங்களில்
முயற்சித்து மெல்ல ஏறுங்கள்...

வலதுகாலெடுத்து வைக்கவேண்டியதில்லை
இடம்வலமேதுமற்ற
கவிதைகளின் முன்முற்றத்தில்
பின் நிலவின்
பாலொளியென
மெல்லப் படருங்கள் ...

வழிபாடுகள் பிரார்த்தனைகளேதுமற்ற
கவிதையின் கங்கைக்குள்
மெல்ல மூழ்கி
காலிப்பாத்திரம் போல்
அள்ளிப்பருகுங்கள் ...

எந்த ஒலியுமற்றொரு
இனிய ஒலியினை
உணரலாம் -
எவ்வண்ணமுமற்ற
வெண்மை வானவில்லினை
கவிதைகளில் மட்டுமே
நீங்கள்
தரிசிக்க முடியும் ...

உருகும் பனித்துளிபோல்
ஏதோ ஓரிடத்தில்
எங்கோ
ஒரு நொடிப்பொழுதில்
உருகிவிட முடியும் -
வடிவமேதுமற்று ஆடும்
தீச்ஜுவாலையென
ஆடுவதற்கான
வாய்ப்பிங்குண்டு...

காட்டாறுகளில் நீந்தும்
வனமீன்களைப் போல்
பறிக்க ஆளின்றி
தானாயுதிரும்
மலைக் கனிகளைப்போல்
கவிதைகளில்
நீந்தி உருகுங்கள் ....

உங்களுக்காக காத்திருக்கிறது
யார் யாரின் மனதிலோ
இன்னமும் உருவாகா
ஓராயிரம் கவிதைகள்


-பாலா (லம்பாடி )

எழுதியவர் : பாலா (21-Jan-16, 11:16 pm)
பார்வை : 307

மேலே