பொறியின்மை யார்க்கும் பழியன்று
எழுந்து வாடா மானிடனே ! - உன்
...எழுச்சி காட்டு வானிடமே !
விழுந்திட நீயும் விதையல்ல ! - பெரும்
...விருட்சம் நீதான் சிதையல்ல !
காலை யிழந்தால் கையுண்டு - அட
...கண்ணை இழந்தால் காதுண்டு
தோலை யிழந்தால் எலும்புண்டு - வா !
...தோல்வி யிழப்போம் செயமுண்டு !
நம்பிக்கை என்னும் கையிருந்தால் - ஒரு
...நசையறு மதியுடன் மெய்யிருந்தால்
அம்புவி கூடஉன் கையோடு - மிக
...அழகாய்ச் சுழலும் ! போராடு !
வாழ்ந்திடத் தானே வாழ்க்கையடா ! - அதில்
...வந்திடும் துன்பம் வேட்கையடா !
தாழ்ந்திடத் தானா நீபிறந்தாய்? - பின்
...தலையை ஏன்தான் குனிகின்றாய் ?
பொறியில்லை என்றால் கவலையென்ன ? - வெறும்
...போட்டி மிகுந்தஇவ் வுலகினிலே
நெறியது கொண்டே நெஞ்சுயர்த்து ! - உனை
...நெரித்திடும் தீயை எரித்துவிடு !
தளரா முயற்சி அதுவிருந்தால் - உடன்
...தன்னம் பிக்கை மதுவிருந்தால்
வளரா பொறியால் செய்யுவதை - மன
...வன்மையி னாலே செய்திடலாம் !
பொறியின்மை யார்க்கும் பழியன்று - ஒரு
...போக்கில் லாமை பெரும்பழியாம் !
வறுமை நிலையொரு பிழையன்று - மன
...வலிமையி லாமை பிழையாமே !
-விவேக்பாரதி