தர்ஷினி பாப்புவுக்கு

தர்ஷினி பாப்பு ....
வார்த்தைகளை தின்று
ஐஸ்கிரீமை ஒழுக விடுகிறாள்

புன்னகையை மென்று....
பட்டாம்பூச்சிகளின் வண்ணத்தை
விழி வழியே வழிய விடுகிறாள்

டாமினொசில் உண்ணக் கூடாதென
வியாக்கியானம் பேசி .....
கடலை மிட்டாய்க்கு கருணை காட்டுகிறாள்

கண்ணாடிமீனை ஏந்தி சாலை கடக்கும்
லாவகத்தோடு தன்னை தூக்கிப் போகச்சொல்லி
எனக்கு தேர்வு வைக்கிறாள்

இரும்படித்து காப்பு பிடித்த கைகளில்
மலர்கொத்தாய் ஊர்ந்து
பரிட்சயம் இல்லா மென்மையில்
என்னை நெளிய வைக்கிறாள்

என்னுள் எங்கோ ஒளிந்திருக்கும்
ஒரு குழந்தையை தேடி இழுத்து
தன்னோடு விளையாட்டில் சேர்த்துக்கொள்கிறாள்

'பை' சொல்லி பிரியும் எனக்காக
காத்திருப்பதாய் கூறி
அன்பால் என் முதுகில் அறைகிறாள்

ஒவ்வொரு முறையும் என்னை திருடிவிட்டு
பதிலுக்கு கையில் ஒரு கவிதையை
மறக்காமல் கொடுத்துவிடுகிறாள்

வெயில் தகிக்கும் நீண்ட நாளின்மீது
'ஜஸ்ட் லைக் தட்' .........
நிழலை பெய்து விடுகிறாள்

இன்னும் குளிர்ந்தபடியே இருக்கிறது
என் நிலமெங்கும் .....
தர்ஷினி பாப்புவின் நிழல்


- டயானா

எழுதியவர் : மேரி டயானா (25-Jan-16, 11:58 am)
பார்வை : 131

மேலே