தொலைந்து போன கடிதம்

கடிதமும் கருத்தைச் சொல்லும்
****கவலையில் கண்ணீர் சிந்தும்
துடிப்புடன் சுற்றி வந்த
****சுகமதை நினைவில் கொள்ளும்
விடியலும் வந்தி டாதோ
****விசனமாய் வாடி நிற்கும்
நெடியதோர் பயணம் செய்த
****நெகிழ்ச்சியின் உரையைக் கேட்பீர் !

அன்பினைச் சுமந்து சென்றேன்
****ஆறுதல் தாங்கி வந்தேன்
இன்பமும் வாரித் தந்தேன்
****ஈடிலாப் பேறு பெற்றேன்
என்கடன் பணியே யென்று
****எடுத்ததைத் தவமாய்ச் செய்தேன்
தன்னிக ரற்ற சேவை
****தரணியில் வழங்கி வந்தேன் !

காதலாய்த் தூது சென்றேன்
****கன்னியின் உள்ளம் சொன்னேன்
ஆதவன் வரவைப் போலே
****ஆவலாய்க் கடமை செய்தேன்
சாதனை முடித்தே னென்றோ
****சட்டெனத் தள்ளி வைத்தீர்?
வேதனை கொண்டேன் நானும்
****வீதியில் பயணம் நின்றே !

முத்திரை என்ற பேரில்
****முகத்தினில் குத்து வாங்கி
நித்தமும் வேலை செய்தேன்
****நிம்மதி நானும் கண்டேன்
எத்தனை செய்து மென்ன
****எம்மையும் ஒதுக்கி விட்டீர்
பித்தெனப் புலம்ப வைத்தீர்
****பெருமையை மறக்க லாமோ ....???

( 25:01:2016 - தினமணி கவிதைமனியில் வெளிவந்தது )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Jan-16, 12:06 pm)
பார்வை : 95

மேலே