ஆதாம் ஏவாளை தேடாதீர்கள் -சந்தோஷ்
சத்தியமாக சொல்கிறேன்
எனக்கு கவிதை எழுத தெரியாது.
உருவாக்க தெரியும்..!
--
இந்த நள்ளிரவு
யாருமற்ற எனது அறை
எனது தனிமை
எந்தன் சிந்தனை
எனது மூளைமடிப்பில்
முளைத்தெழும் கற்பனை.
கையில் புகைந்துக்கொண்டிருக்கும்
சிகரெட் அனல்.
மனதில் போதையேறிக்கொண்டிருக்கும்
கவிதை கலை.
இது போதும்
நான் அதிகபட்சமாக
ஒரு மன்மதனாக..
குறைந்தபட்சமாக
நானுமொரு காவியத் தலைவனாக..
உருமாறிட..
நானற்ற நானாக உருகுலைந்திட..!
--
எப்போதும் எவ்வித தோல்வியிலும்
மனமுடைந்து, கிளர்ச்சியுற்று
கையை கத்தியால் கிழித்ததில்லை
மாறாக
கத்தியை கையால் கிழித்திருக்கிறேன்.
--
தனிமையின் புகைச்சலை விட
சிகரெட்டின் புகைச்சல் எனை
அவ்வளவு அதி வேகமாக
கொன்றுவிடாது.
எச்சரிக்கை..
சிகரெட் நல்லது..
என்னைப் போன்ற
மரணத்திற்காக கவியெழுதி
மரணத்தை காதலிப்பவனுக்கு மட்டும்....! .
---
நல்லதோர் காதல்வீணைச் செய்து
அதன் நலம்பெற
மனதில் பூட்டிவைத்தேன்.
---
எந்தன் மூளை மடிப்பில்
நீ புதைந்தாய்
தொற்றியது புற்றுநோய்..!
--
உனக்கும் எனக்கும்
அப்பப்பா
எவ்வளவு எவ்வளவு
முரண்பாடுகள், கோபதாபங்கள்..!
பெண்ணே...என் மாதவியே !
உனக்கொரு வாய்ப்பு தருகிறேன்.
மஞ்சத்தில் உன் வஞ்சத்தை தீர்த்துக்கொள்(ல்)
தலையணை மந்திரத்தில் எனை மன்னித்துக்கொள்(ல்).
--
அன்று
காதல் நுரைப்பொங்க
நீ கொடுத்த
செவ்விதழ் முத்தத்தின்
ஈரத்திலென் மீசை
இன்று நரைத்துப்போனது.
--
யார் ஊதினாலும்
குழல்.இசைந்திடுமா ?
யார் மீட்டினாலும்
யாழ் இசைக்குமா..?
தீக்குள் விரல்விட்டு
தீயை கொளுத்தலாமா?
கானல் நீரெல்லாம்
பேரலையாகுமா..?
போன காலமெல்லாம்
வசந்தமாகிடுமா.?
வரும் காலத்திலாவது
காதல் இனிக்குமா ?..
--
இன்று விட்டுப் போனது குறித்தான
கவலையேதும் எனக்கில்லை
அன்று நீ வந்தது குறித்தான
என் மனநிலை விசாரணையில்தான்
கவலையேறி துக்கம் அனுசரிக்கிறேன்.
--
உணர்ச்சி மிகுதியில்
காதல் கவிதை எழுதுவோர் பலர்
கிளர்ச்சியுற்று
காதல் கவிதை எழுதுவோர் பலர்
மகிழ்ச்சியேறி
காதல் கவிதை எழுதுவோர் பலர்
தோல்வியுற்று
காதல் கவிதை எழுதுவோர் பலர்
வெற்றிப்பூரித்து
காதல் கவிதை எழுதுவோர் பலர்.
இப்படியாக உடல் புலன்களில் உணர்ந்து
காதல் கவிதை எழுதிடுவோர் பலர்...
ஆனால்..
ஆனால்...
காதலை சுவாசித்து
காதலை நேசித்து
காதலை உணர்ந்து
காதலை மதித்து
காதல் கவிதை எழுதியோர் எவர்..
--
ஏவாளை புரிந்தப்பிறகு
அவளாகிவிட்ட
ஆதாமை தேடாதீர்கள்.
ஆதாமை புணர்ந்தப்போது
ஆண்மை விழுங்கிய
ஏவாளையும் தேடாதீர்கள்.
காதல் வரும்வரையே
இருக்கும் இருவருக்கும்
இருவிதமான பாலினம்.
--
காதல் புரியாதவர்களுக்கு
காதல் புரிவதில்லை.
---
இரா.சந்தோஷ் குமார்.
( முகநூலில் அவ்வப்போது எழுதியவை. ஒரு தொகுப்பாக இங்கு)