இந்த உசுரும் ஒடம்பும் தேடுதையா

எத்தனையோ இருக்கு - அட
அத்தனையும் எதுக்கு?
மொத்த பித்தும் - எனக்கு,
ஒம்மேல தான் இருக்கு!

கத்த வித்த மறக்கும் - அட
ஓம்பக்கமே எனயிழுக்கும்!
புரியலையே பொழப்பும் - இங்க,
ஓனெனப்பால் - எனக்கும்!

காட்டேரியா திரியிறேன் -அட
காடுமேடு ஒலவுரேன்!
கட்டுமஸ்து மாமோய் - ஒன்ன,
காணாமதான் பொலம்புறேன்!

வச்சகண்ணு வாங்காம - அட
சொச்ச ஆட்டம் ஆடனும்!
மிச்ச விட்டுபோயிட்டா - என்னா
ஆவேன் நானும்?

மாட்டக்க வேணாம்! - அட
மல்லுகட்டும் வேணாம்!
மனச பறிச்ச மச்சான் - நீ
மொகத்த காட்டு போதும்!

பெத்தவதான் பேரேன்கேட்டு - அட
கோயில்கொளந் திரியிரா!
செத்தவளா திரியவிட்டு - எங்க
போன ஏந்-திமிரே?

பொழப்பு தேட போன - அட
ஏ ஏமனச கொண்டுபோன!
தவிக்க உசுர மட்டும் - ஏ இங்க
தனியா வுட்டு போன?

பட்டெடுத்தேங் கட்டவில்ல - அட
பொட்டுடுத்த தோணவில்ல!
வெட்டவெளி நித்தம் பாத்து - வெளிறி
நிக்கேன் பாருவந்து!

சோறுதண்ணி செல்லாம - அட
சேறுமண்ணும் காலுதின்ன!
ஊரு எல்ல வந்துவந்து - உன்ன
உசுரும் ஒடம்பும் தேடுதையா!

இந்த உசுரும் ஒடம்பும் தேடுதையா!

-கவிக்கிருக்கி. மீனு தேவன்

எழுதியவர் : ஃபெமினா (26-Jan-16, 12:56 am)
பார்வை : 1890

மேலே