பகை அசுரர்களின் மூன்று கோட்டைகள் பகுதி 2

பகை அசுரர்களின் மூன்று கோட்டைகள் என்ற கட்டுரையின் தொடர்பாக மேலும் ஒரு செய்தி:

இதில் சிலப்பதிகாரத்தில், சோழ நாட்டின் நிலை பற்றி மாடலனைத் தனி இடத்து அழைத்து செங்குட்டுவன் வினவும் போது, மாடலன் பதில் உரைக்கும் இடத்தில் இவ்வாறு சொல்லப்படுகிறது.

சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம் நீர்ப்படைக் காதையில் இளங்கோவடிகள் மாடலன் உரைப்பதாக,

’வெயில்விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப
எயில்மூன் றெறிந்த இகல்வேற் கொற்றமும்
குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க
அரிந்துடம் பிட்டோன் அறந்தரு கோலும்
திரிந்துவே றாகுங் காலமு முண்டோ’ 164 – 169

என்று கூறுகிறார்.

பதவுரை:

வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப - ஒளி விளங்குகின்ற மாணிக்கக் கலன்பூண்ட வானவர் வியக்கும் வண்ணம்,

எயில் மூன்று எறிந்த இகல்வேற் கொற்றமும் - வானிலே தூங்கிய மூன்று மதிலினையும் அழித்த மாறுகொண்ட முருகப் பெருமானின் வேலின் வெற்றியும்,

குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர - குறுக நடக்கும் நடையினையுடைய புறாவினது மிக்க துயரம் ஒழிய,

எறிதருபருந்தின் இடும்பை நீங்க - அப் புறவினை எறியுமாறு துரந்த பருந்தின் பசித் துன்பம் நீங்க,

அரிந்து உடம்பு இட்டோன் அறந்தரு கோலும் - தன் உடலினை அரிந்து அப் பருந்திற் களித்தவனது அறத்தினை வளர்க்கும் செங்கோலும்,

திரிந்து வேறு ஆகுங் காலமும் உண்டோ - பிறழ்ந்து மாறுபடுங் காலமும் உண்டாமோ! ஆகாதன்றே.

பொருளுரை:

ஒளி விளங்குகின்ற மாணிக்க அணிகலன் பூண்ட வானவர் வியக்கும் வண்ணம் வானிலே உள்ள மூன்று கோட்டைகளையும் அழித்த மாறுகொண்ட முருகப் பெருமானின் வேலின் வெற்றியும், சிறு அடி எடுத்து நடக்கும் நடையினையுடைய புறாவினது மிக்க துயரம் ஒழிய, அப் புறாவினை இழந்த பருந்தின் பசித் துன்பம் ஒழிய, தன் உடலினை அரிந்து அப் பருந்திற்கு அளித்தவனது அறத்தினை வளர்க்கும் செங்கோலும் பிறழ்ந்து மாறுபடுங் காலமும் உண்டாமோ! ஆகாது என்று இளங்கோவடிகள் உரைக்கிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jan-16, 3:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 61

மேலே