நல்லாசிரியனின் குணாதிசயங்களுக்கு உவமையாய் நிலம், மலை, நிறைகோல், மலர் மாட்சி
நல்லாசிரியனின் குணாதிசயங்கள் எத்தன்மையதாக இருக்கவேண்டும் என்று நன்னூலில் கூறப்பட்டிருக்கிறது. அதில் ’நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சி’யும் நல்லாசிரியனுக்கு அமையப்பட வேண்டிய குணமாக சொல்லப்படுகிறது. எனவே நிலம், மலை, நிறைகோல், மலர் மாட்சி என்னவென்றும், அவைகள் நல்லாசிரியனுக்கு எங்ஙணம் உவமையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன என்றும் கீழேயுள்ள பாடல்களில் காண்போம்.
நிலமாட்சி
'தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும்
பருவ முயற்சி யளவிற் பயத்தலும்
மருவிய நன்னில மாண்பா கும்மே'.
பதவுரை:
தெரிவு அரு – ஓரிடத்தில் நின்று நிலம் முழுவதும் காண்பதற்கு ஏதுவான அருமையான
பெருமையும் – நிலப் பரப்பின் (உருவப் பரப்பின்) பெருமையும்
திண்மையும் – உழுவதற்குத் தோதான மனிதர்கள், கலன்கள், எருதுகள் ஆகியவை பாரமாகத் தன் மேல் அழுந்தினாலும் கலங்காத வலிமையும்
பொறையும் – தன்னைப் பண்படுத்த மனிதர் ஆழ உழ, தோண்ட முதலிய குற்றங்களைச் செய்தாலும் பொறுக்கின்ற பொறுமையும்
பருவம் முயற்சி அளவின் பயத்தலும் – தக்க பருவத்திலே உழவர் செய்கின்ற முயற்சி அளவுக்குத் தகுந்தபடி அவர்க்குப் பயன் கொடுத்தலும்
நல் நிலம் மருவிய மாண்பு ஆகும் – நல்ல நிலத்திற்குப் பொருத்தமான நற்குணங்களாகும்.
கருத்துரை:
ஓரிடத்தில் நின்று நிலம் முழுவதும் காண்பதற்கு ஏதுவான அருமையான நிலப் பரப்பின் (உருவப் பரப்பின்) பெருமையும், உழுவதற்குத் தோதான மனிதர்கள், கலன்கள், எருதுகள் ஆகியவை பாரமாகத் தன் மேல் அழுந்தினாலும் கலங்காத வலிமையும், தன்னைப் பண்படுத்த மனிதர் ஆழ உழ, தோண்ட முதலிய குற்றங்களைச் செய்தாலும் பொறுக்கின்ற பொறுமையும், தக்க பருவத்திலே உழவர் செய்கின்ற முயற்சியளவுக்குத் தகுந்தபடி அவர்க்குப் பயன் கொடுத்தலும் நல்ல நிலத்திற்குப் பொருத்தமான நற்குணங்களாகும்.
அதுபோல, பிறரால் வகுத்து அறியப்படாத கல்வியறிவும் பெருமையும், பெரிய வாதம் செய்து பிறர் தன் மேல் நெருக்கினாலும் கலங்காத வல்லமையும், அடுத்தவர் தன்னை இகழ்தல் முதலிய குற்றங்களைச் செய்யினும் பொறுக்கும் பொறுமையும், மாணவர்கள் செய்யும் முயற்சியின் அளவிற்குத் தகுந்தபடி அவர்களுக்குப் பயனைத் தருதலும் ஆசிரியனுக்குப் பொருந்தும் குணங்களாதலால், நிலம் அவனுக்கு உவமையாகச் சொல்லப்படுகிறது.
மலைமாட்சி
'அளக்க லாகா வளவும் பொருளுந்
துளக்க லாகா நிலையுந் தோற்றமும்
வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே'.
பதவுரை:
அளக்கல் ஆகா – அளக்க முடியாத
அளவும் – அதன் முழு வடிவத்தின் அளவும்
பொருளும் – அம்மலையில் உள்ள பல்வகைப் பொருள்களும்
துலக்கல் ஆகா நிலையும் – எவ்வளவு வலிமை உடையவர்களாலும் அசைக்க முடியாத உருவத்தின் நிலைமையும்
தோற்றமும் – நெடுந்தொலைவிலிருந்தும் காணப்படுகின்ற உயரமும்
வறப்பினும் வளம் தரும் வண்மையும் – மழையே இல்லாமல் வறண்டு போனாலும் மலையிலுள்ள மரங்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் நீர்வளத்தைக் கொடுக்கின்ற கொடையும்
மலைக்கே – மலைக்கே உள்ள நற்குணங்களாகும்.
கருத்துரை:
அளக்க முடியாத அதன் முழு வடிவத்தின் அளவும், அம்மலையில் உள்ள பல்வகைப் பொருள்களும், எவ்வளவு வலிமை உடையவர்களாலும் அசைக்க முடியாத உருவத்தின் நிலைமையும், நெடும் தொலைவிலிருந்தும் காணப்படுகின்ற உயரமும், மழையே இல்லாமல் வறண்டு போனாலும் மலையிலுள்ள மரங்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் நீர்வளத்தைக் கொடுக்கின்ற கொடையும் மலைக்கே உள்ள நற்குணங்களாகும்.
அதுபோல, அளவு காணமுடியாத கல்வியினளவும், பலவகை நூற்பொருள்களும், எப்படிப்பட்ட புலமையுடையவராலும் அசைக்கப்படாத கல்வியறிவின் நிலையும், நெடுந்தூரத்தில் உள்ளோராலும் அறியப்படும் உயர்வும், பொருள் வருவாய் குறைந்தாலும் தன்னைச் சார்ந்துள்ள மாணவர்களுக்கு கல்வியை குறைவிலாது கொடுக்கும் கொடையும் ஒரு நல்ல ஆசிரியர்க்கு உள்ள குணங்களாகும். எனவே, மலையை ஆசிரியனுக்கு உவமையாகச் சொல்லப்படுகிறது.
நிறைகோல்மாட்சி
'ஐயந் தீரப் பொருளை யுணர்த்தலும்
மெய்ந்நடு நிலையு மிகுநிறை கோற்கே'.
பதவுரை:
பொருளை ஐயம் தீர உணர்த்தலும் – நிறுக்கப்பட்ட பொருளின் அளவைச் சந்தேகம் தீரக் காட்டுதலும்
மெய் நடு நிலையும் – உண்மை பெறத் தான் இரண்டு தட்டுக்கும் நடுவே ஒருபக்கம் கோணாமல் நிற்றலும்
நிறைகோற்கு மிகும் – நல்ல தராசுகோலுக்கு உண்டான மிக்க நற்குணங்களாகும்.
கருத்துரை:
நிறுக்கப்பட்ட பொருளின் அளவைச் சந்தேகம் தீரக் காட்டுதலும், உண்மை பெற, தான் இரண்டு தட்டுக்கும் நடுவே ஒருபக்கம் கோணாமல் நிற்றலும் நல்ல தராசுகோலுக்கு உண்டான மிக்க நற்குணங்களாகும்.
அதேபோல், தான் நூல்களில் கற்ற பாடங்களிலிருந்து கேட்கப்பட்ட சொற்பொருளின் இயல்பை சந்தேகம் தீர விளக்கி உணர்த்தலும், புலவர் இருவர் மாறுபட்டாராயின் உண்மையைப் பெற தான் அவ்விருவர்க்கும் நடுவாகப் பாரபட்சமின்றி நிற்றலும் நல்ல ஆசிரியர்க்கு உள்ள குணங்களாகும்.
மாணவர்கள் பலருள் ஒருவனிடத்து விருப்பாகவும், ஒருவனிடத்து வெறுப்பாகவும் இல்லாமல் ஆசிரியர் நடுவுநிலையாக இருக்க வேண்டும். எனவே, நிறைகோலை ஆசிரியனுக்கு உவமையாகச் சொல்லப்படுகிறது.
மலர்மாட்சி
'மங்கல மாகி யின்றி யமையாது
யாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
பொழுதின் முகமலர் வுடையது பூவே'.
பதவுரை:
மங்கலம் ஆகி – சுபகாரியங்களுக்கு உரியதாய்
இன்றி அமையாது – அலங்கரிப்பதற்கு அவை இல்லாமல் முடியாததாய்
யாவரும் மகிழ்ந்து மேல் கொள – காண்பவரெல்லாம் விரும்பி, மகிழ்ந்து கூந்தலிலும், கழுத்திலும் மேலாகத் தன்னைச் சூடிக் கொள்ள
மெல்கி – மென்மையான குணமுடையதாய்
பொழுதில் முகம் மலர்வு உடையது – மலர்வதற்கு உரிய நேரத்தில் மலரக்கூடிய வண்ணம் தோற்றமுடையது
பூவே – பூவின் குணமாகுமாம்.
கருத்துரை:
அலங்கரிப்பதற்கு (இல்லாமல் முடியாத) முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், காண்பவரெல்லாம் விரும்பி, மகிழ்ந்து கூந்தலிலும், கழுத்திலும் மேலாகத் தன்னைச் சூடிக் கொள்ள மென்மையான குணமுடையதாகவும், மலர்வதற்கு உரிய நேரத்தில் மலரக்கூடிய வண்ணம் தோற்றமுடையதாகவும் உள்ளதே பூவின் குணமாகுமாம்.
அதேபோல், சுபகாரியத்திற்கு உரியவனாய்ச் சிறப்பிக்க, தான் இல்லாமல் யாதொரு செய்கையும் முடியாததாகக் காண்பவரெல்லாம் விரும்பி மேலான நிலையில் தன்னை வைத்துக் கொள்ள மெல்லிய குணமுடையவனாகவும், பாடம் சொல்லுவதற்குரிய காலத்தில் முகமலர்ச்சி உடையவனாகவும் இருப்பது ஆசிரியனுக்கு மேலான குணமாதலால், பூ ஆசிரியனுக்கு உவமையாகச் சொல்லப்படுகிறது.