திரைப்படப் பாடல்களும், இசையமைப்பும்

பொதுவாக திரையிசைப் பாடல்கள் பெரும்பாலும் பாரம்பரிய இசை ராகங்களின் அடிப்படையில் மெட்டமைத்து இசை அமைக்கப்படுகின்றன. ஒரு சில பாடல்களில் ஒவ்வொரு சரணமும் ஒவ்வொரு ராகத்தில் இசையமைக்கப்பட்டு ராகமாலிகையாக அமைக்கப்படுவதும் உண்டு. திரைப்பாடல்களை இசையமைக்க இசை அமைப்பாளர்கள் மூன்று வழி முறைகளை இதுவரை பின்பற்றி வந்துள்ளனர் எனத் தெரிகிறது.

1930 - 1960 வரை பெரும்பாலான பாடல்கள் கர்நாடக ராகங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. பாபநாசம் சிவன், S.V.வெங்கட்ராமன், S.M. சுப்பையா நாயுடு, C.R. சுப்புராமன், G.ராமநாதன், K.V.மகாதேவன் போன்ற இசையமைப்பாளர்கள் குறிப்பிட்ட காட்சியின் தன்மை, கதாபாத்திரங்களின் மன நிலை ஆகியவற்றைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதற்குப் பொருத்தமான ராகங்களை முதலில் தேர்ந்தெடுத்து, அந்த ராகங்களை பாடலாசிரியருக்குப் பாடிக் காட்டுவார்கள். தேவைப்பட்டால் ஹார்மோனியம், வயலின் ஆகியவற்றில் அந்த ராகங்களை இசைத்தும் காட்டுவார்கள்.

அதைக் கேட்டபின், அந்த ராகமெட்டுக்குப் பொருத்தமான சொற்களைக் கொண்டு பாடலாசிரியர்கள் பாடல்களை இயற்றுவார்கள். அப்பாடல்களை பாடக, பாடகியர் பாட பதிவு செய்யப்படும். அந்தக் கால கட்டத்தில் பாடலாசிரியர்களுக்கு இசைஞானமும், இசைப் பயிற்சியும் இருந்தன.

ராகங்களின் ஜீவ ஸ்வரங்களை எடுத்துக்கொண்டு கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை அதில் ஏற்றி சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி இசை அமைப்பது எஸ்.வி. வெங்கட்ராமனின் தனித்துவமாக இருந்தது.

பி.யு.சின்னப்பா, கண்ணாம்பா நடித்த கண்ணகி திரைப்படத்தில் மனம் திருந்தி வந்த கோவலனின் நிலைமையை வெளிப்படுத்தி, தன்னால் உதாசீனம் செய்யப்பட்ட மனைவியின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்று நினைத்து அவள் மீது அவனுக்கு ஏற்படும் இரக்கம், பரிவு ஆகியவை அழகாக வெளிப்பட வேண்டும்.

இதற்குப் பொருத்தமான ராகம் என்று ’சஹானா’வைத் தேர்வு செய்து, உடுமலை நாராயண கவியின் ’பத்தினியே உன்போல்’ என்ற பாடலை எஸ்.வி. வெங்கட்ராமன் இசையமைத்து இருக்கிறார். பி.யு.சின்னப்பா சஹானா ராகத்தில் பாடும் பாடலை யு ட்யூபில் கேட்கலாம்.

பல்லவி

பத்தினியே உன்போல்
இத்தரை மீதினில் உற்றவர் யார் புகல்வாய்
(தர்ம பத்தினியே)

அநுபல்லவி

சத்தியமாகவே தாய்க்குப் பின் தாரம்
தாரத்தினால் அல்லவோ சம்சாரம் (பத்தினியே)

சரணம்

பந்து ஜனமெல்லாம் வீண் பரிவாரம்
பாரினில் அவரால் ஏதுபகாரம்
அந்தரம் தனிலுன் உறவு வாழ்வாரம்
ஆபத்து வேளையில் ஆகும் ஆதாரம் (பத்தினியே)

மனைவியின் பெருமையைச் சொல்லும் ஒரு அற்புதமான பாடல் இது.

சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்தில் இசை வல்லுனரான வீணைக் கொடியுடைய வேந்தன் ராவணனுக்காக சிதம்பரம் ஜெயராமன் பாடும் பாடலைக் கேட்டிருப்பீர்கள்.

அரச சபையிலுள்ளவர்கள் வெவ்வேறு ராகங்களைப் பற்றிக் கேட்பார்கள். ராவணன் ’சங்கீத சௌபாக்யமே’ என்று பாடலைப் பாடியபடி, ஒவ்வொரு ராகங்களையும் பாடிக் காண்பிப்பார்.

காலங்களைக் குறித்துப் பாடும்போது, காலையில் பாடும் ராகம் பூபாளம் என்றும், உச்சி வேளையில் சாரங்கா என்றும், மாலையில் வசந்தா என்றும் ஸ்வரங்களோடு பாடுவார்.

குணங்களைக் குறித்துப் பாடும் ராகங்களைக் கேட்கும்போது, இரக்கத்தைக் குறிக்கும் ராகம் நீலாம்பரி என்றும், மகிழ்ச்சிக்கு தன்யாசி என்றும், யுத்தத்திற்கு கம்பீர நாட்டை என்றும் பாடுவார்.

பாக்களை எந்த ராகத்தில் பாட வேண்டும் என்ற கேள்விகளுக்கு, வெண்பா சங்கராபரணத்திலும், அகவற்பா தோடியிலும், தாழிசைப்பா கல்யாணியிலும் பாட வேண்டும் என்பார்.

ராவணின் மனைவி மண்டோதரி தன் கணவனிடம், ‘கயிலைநாதரை தங்கள் கானத்தால் கவர்ந்த ராகம் எது’ என்று கேட்பார். அது ’காம்போதி’ என்றும் பாடுவார்.

K. V.மகாதேவன் பெரும்பாலும் கவிஞர்களுக்கு முழு சுதந்திரமளித்து முதலில் அவர்கள் பாடல் எழுதிக் கொடுத்த பிறகு, அவர் மெட்டமைப்பார்.

M.S. விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரண்டு வழிகளில் பாடல்களை எழுதச் சொல்லி, கேட்டுப் பெற்றார்கள். ஒன்று, பழைய மரபின்படி ராகத்தைப் பாடிக் காட்டி அல்லது ஹார்மோனியம், வயலின் ஆகியவற்றில் வாசித்துக் காட்டி அந்த ராகமெட்டுக்கு ஏற்றவாறு பாடலை எழுதச் சொல்லிப் பதிவு செய்தனர்.

இரண்டாவதாக, தங்கள் கற்பனையில் உருவாக்கிய இசை மெட்டுக்களை ஹார்மோனியம் அல்லது வயலினில் இசைத்துக் காட்டியும், ‘தத்தகாரம்’ என்ற சந்தங்களை வாயால் சொல்லிக் காட்டியும் அந்த சந்தங்களுக்குப் பொருத்தமான சொற்களைப் பயன்படுத்தி, பாடலாசிரியர்கள் எழுதும் பாடல்களைப் பெறுவார்கள்.

‘தத்தகாரம்’ எனப்படும் அந்த சந்தங்களுக்கு சிறந்த உதாரணமாகத் திகழும் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ என்ற படத்தில் இடம் பெற்ற இந்த பாடலைப் பாருங்கள்.

தையர தத்தன தையர தத்தன
தையர தன்னன தாரதத்தன தன்னன்னா...

....சிப்பியிருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரமில்லடி ராசாத்தி

இந்தப்பாட்டில் முழுப்பாடலும் சந்தமும், பாடல் வரிகளுமாகவே மாறி மாறி வருவதை யு ட்யூபில் கேட்கலாம்.

எல்லாப் பாடல்களிலும் இவ்வாறு சந்தங்கள் வருவதில்லை. ஆனால் ‘தத்தகாரம்’ எனப்படும் சந்தங்கள் முன் கூட்டியே சொல்லப்பட்டு அவற்றிற்கு தகுந்தாற்போல் பாடல்கள் எழுதப்படும்.

M.S. விஸ்வநாதனின் "ல லல லல ல ல" என்ற மெட்டுக்கு கவிஞர் கண்ணதாசன் எழுதிய இன்னொரு பாடல்.

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவி எண்ணிலா
நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா (வான்)

இளையராஜா அனேகமாக எல்லாப் பாடல்களுக்குமே முன் கூட்டியே தாம் தீர்மானிக்கும் மெட்டுக்களை ‘தத்தகாரமாக’ச் சொல்லித் தான் பாடல்களை எழுதச் சொல்வார் எனத் தெரிகிறது.

அடுத்ததாக, ‘பாடல் மெட்டுக்களை ஆர்மோனியத்தில் வாசித்து அதை ஒலிநாடா காசெட்டுகளில் ஏற்றி, அதன் பிரதிகளை பல பாடலாசிரியர்களுக்கும் அனுப்பி, அவர்கள் எழுதிக் கொண்டு வரும் பாடல்களில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்து அதைப் பதிவு செய்யும் வழக்கம் வந்தது என்றும், இம்முறையில்தான் இன்று பெரும்பாலான பாடல்களும் எழுதப்பட்டு, இசை சேர்ப்பு செய்து பதிவு செய்யப்படுகின்றன’ எனத் தெரிகிறது.

A.R.ரஹ்மான் ஏதாவது வெளிநாட்டில் இருந்து கொண்டே பாடலின் மெட்டை ‘கீபோர்டு’ மூலம் வாசித்து அதைக் கணினியில் பதிவு செய்து ‘இணையவலை’யில் ஏற்றி ‘வாய்ஸ் மெயிலாக’ பாடலாசிரியருக்கு அனுப்பி விடுகிறார்.

அதைப் பார்த்தும் கேட்டும் அந்த மெட்டுக் கேற்றவாறு பாடலெழுதி, அதைத் திரும்பவும் கணினி மூலம் பதிவு செய்து ‘இணையவலை’ மூலம் ரஹ்மானுக்கு அனுப்பி வைக்கிறார் பாடலாசிரியர்.

அது தமக்கு திருப்தியளிக்கும் வகையில் இருந்தால், A.R.ரஹ்மான் அத்துடன் பிற இசைகளையும் சேர்த்துப் பதிவு செய்கிறார் எனப்படுகிறது.

இதிலிருந்து திரைப்படத்திற்குப் பாடல்கள் எழுதுவதும், இசையமைப்பதும் சுலபமல்ல என்பது தெளிவு. தகுந்த தீவிர பயிற்சியும், விடாமுயற்சியும், மூத்த இசையமைப்பாளர் மற்றும் மூத்த கவிஞரின் ஆதரவும் அவசியம் வேண்டும் என்று கருதுகிறேன்.

ஆதாரம்:லக்‌ஷ்மண் ஸ்ருதி வலைத்தளம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jan-16, 3:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 522

மேலே