நாய்க்குட்டி

குரைத்து வளரும் நாய்க்குட்டி
கும்மாளம் போடும் நாய்க்குட்டி
சிறிதாய் இருக்கும் போதினிலே
சிணுங்கி கத்தும் நாய்க்குட்டி
சோறும் கறியும் நாம்வைத்தால்
சுவைத்து உண்ணும் நாய்க்குட்டி
வெளியில் எங்கே சென்றாலும்
விரும்பி உடன்வரும் நாய்க்குட்டி
உண்ணும் உணவை நாம்தந்தால்
உள்ளத்தில் என்றும் நினைத்திருக்கும்
நன்றியை என்றும் மறவாமல்
நம்மைக் கண்டால் வாலாட்டும்
அறிவே ஆறுள்ள மனிதர்க்கும்
அமையா நன்றி உணர்வினையே
ஆண்டவன் அதற்கு கொடுத்தனால்
அனைவரும் அதனை விரும்புகிறோம்
இரவையும் பகலையும் பாராமல்
இமைகளை சிறிதும் மூடாமல்
இருட்டில் வருகின்ற திருடர்களை
குரைத்து அடையாளம் காட்டிடுமே
நன்மையில் மட்டும் உறவாடும்
நாநயம் மிகுந்த மனிதரிலும்
நாய்எவ் வளவோ உயர்ந்ததடா
நமக்கும் நல்ல தோழனடா
நாமும் ஒருநாய் வளர்த்திடுவோம்
நட்பாய் அதனுடன் பழகிடுவோம்
வீட்டைக் காக்கும் விலங்குஅதை
வெறுத்து விடாமல் போற்றிடுவோம்
எழுதியவர்
சொ. பாஸ்கரன்