கனவுகள்

கனவுகள் காணுங்கள் - உங்கள்
கனவுகள் நனவாக – தினம்
களைப்பின்றி உழையுங்கள்.
தனக்கென எண்ணாது - எதையும்
தரணிக்காய் தாருங்கள் - அந்தத்
தன்மையில் வாழுங்கள்
மனதாலே எதையும் – மிக
மலிவாக எண்ணாமல் – நல்
மதிப்பினைத் தாருங்கள்
இனங்கூறி வருகின்ற – பெரும்
இன்னலைத் தொலைத்திட – மனத்
திண்மையில் வாழுங்கள்.

வெள்ளத்தை நெறிபடுத்தி - பல
நெடும்வயலை உருவாக்கி - நல்
நெல்மணிகள் தாருங்கள்
கள்ளத்தை கொண்டு - மனம்
கரைபட்டுப் போகாமல் - ஒரு
கனிவோடு பாருங்கள்
பள்ளத்தில் வீழாமல் – ஒரு
பாவியென ஆகாமல் - இனம்
பார்த்திங்கே சேருங்கள்
உள்ளத்தில் உணர்வோடு - தினம்
ஊருக்கும் உழைக்கின்ற - ஒரு
உத்தமனாய் மாறுங்கள்.

இல்லாரும் இல்லாத – ஒரு
இந்தியா உருவாக – தினம்
இணைந்திங்கு நில்லுங்கள்
பொல்லாங்கை வேரோடு – இங்கு
பிடுங்கியே எரித்திட – இளம்
படைஒன்று கொள்ளுங்கள்
நல்லாரே எந்நாளும் – இந்த
நாட்டையே ஆண்டிட – நல்
நினைப்போடு வெல்லுங்கள்
கல்லாரே இல்லாத – எதிர்
காலத்தை உருவாக்க – ஒரு
கனவொன்றைக் காணுங்கள்.

விளைகின்ற நிலமெல்லாம் - தினம்
வீணாகிப் போகாமல் – நல்
விவசாயம் பண்ணுங்கள்
களையாகி நாட்டில் – பல
கலகங்கள் செய்வாரை - சிறைக்
கூண்டினிலே தள்ளுங்கள்
பிழையாகி நின்றே – மனித
பிழைப்பதனைக் கெடுக்கின்ற – கொடும்
பாவிகளைக் கிள்ளுங்கள்
கலையாக்கி நாட்டை - ஒரு
களிப்போடு காட்ட – நல்
கனவுகளைக் காணுங்கள். .

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (30-Jan-16, 7:47 pm)
Tanglish : kanavugal
பார்வை : 233

மேலே