தொலைந்து போன கடிதம்

தொலைந்து போன கடிதம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

தமிழறிஞர் மு.வ.தான் கடிதம் மூலம்
--தரமான இலக்கியத்தைப் படிக்கத் தந்தார்
நிமிர்த்துகின்ற கருத்துகளை இந்திரா வாழ்வில்
--நிலைத்திருக்கக் கடிதத்தில் நேரு தந்தார்
அமிழ்தாக அண்ணாதான் கடிதம் மூலம்
--அரசியலின் விழிப்புணர்வை ஊட்டி விட்டார்
சிமிழ்போலத் திகழ்ந்தயிந்த கடிதம் போன்று
--சிந்திக்கத் தருவோர்கள் அருகிப் போனார் !

கடிதமாகச் செய்திகளைப் புறாவின் காலில்
--கட்டிவைத்தே அனுப்பிட்டார் முன்னோ ரன்று
கடிதத்தில் கலந்தநெஞ்ச அன்பு ணர்வைக்
--காதலர்கள் வடித்தனுப்பி மகிழ்ந்தா ரன்று
கடிதத்தில் பட்டாளப் பிரிவுத் துயரைக்
--காத்திருக்கும் மனைவியுடன் பகிர்ந்தா ரன்று
முடிந்ததிந்தக் கடிதங்கள் ! எழுது தற்கே
--முடிவுரையை எழுதிட்டார் விஞ்ஞா னத்தால் !

பொங்கலுக்கு வாழ்த்தனுப்பி மகிழ்ந்த தெல்லாம்
--போயிற்று குறுஞ்செய்தி கட்செவி யாலே
மங்கலமாய் நலம்கேட்டுச் சுற்றத் தார்க்கு
--மடலெழுதி விடுத்ததெல்லாம் மாறிற் றின்று
எங்கெங்கும் இணையதளம் செல்லிடப் பேசி
--எல்லாமும் வாய்சொல்லில் நடக்கு தின்று
தங்கம்போல் பாதுகாத்துப் படித்துப் பார்க்கத்
--தந்திட்ட இன்பத்தைத் தொலைத்தோ மின்று !

கட்செவி - வாட்ஸப்

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (31-Jan-16, 10:09 am)
பார்வை : 240

மேலே