பொறுப்புணர்வு
நம் பாரததேசத்தில் காலம்காலமாக பன்முகம் கொண்ட அரசியல் சித்தாந்தங்கள், கட்சிகள், பொருளாதாரநிலையில் மாறுபட்டக்கோணங்கள் ஆகியவை தொடர்ந்துகொண்டுதானுள்ளன. அவற்றிற்கான விதை தெளிக்கப்பட்ட காலத்தில் அவை ஒவ்வொன்றும் ஒரு நல்ல நோக்கத்துடனே தெளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அவை ஒவ்வொன்றுமே வளர்ந்தகாலத்தில்தான் அவை ஒரு தலைமுறையின் அடையாளத்தை சிதைத்து, அதன் எதிர்காலவளர்ச்சிக்கான முட்டுக்கட்டையாக விளங்குகின்றன என்பது நிதர்சனமான உண்மை.
”கனவு காணுங்கள்” என்று நமது அப்துல்கலாம் அவர்கள் கூறினார். ஆனால், சமீபத்தில் ஐதராபாத் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர் ரோஹித் வெமுலா என்பவரின் தற்கொலை நம்தேச ஊடகங்கள் அனைத்தின் மூலமாகவும் மிகப்பிரபலமாகி, அரசியல், சாதி சார்ந்த அனைத்து இயக்கங்களையும் சுறுசுறுப்பாக்கியுள்ளது. தர்மபுரி மாணவிகள் கொலை, கும்பகோணம் பள்ளி தீவிபத்து, பள்ளிக்குழந்தைகள் வேன் மீது ரயில்மோதியது, இன்னும் ஆங்காங்கு பல சம்பவங்கள் நடந்தவண்ணமிருக்கின்றன. அதனால், ஒருபரபரப்பு நடந்தேறியபின் மீண்டும் புதிதாக ஒன்று.. அடுத்து ஒன்று… இதன்மூலம் நாம் கற்றுக்கொண்டதென்ன? திருத்திக்கொண்டதென்ன? ஒன்றுமேயில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
சுதந்திரம் பெறுவதற்கும் முன்னரே புராதனமான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இயங்கின. அவ்வாறு இயங்கிய கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் சுதந்திரத்திற்குப்பின் முற்றிலும் கட்டுப்பாடான உள்ளீடுகள் நிறைந்த சட்டதிட்டங்களை அமல்படுத்தியிருக்கவேண்டும். அன்றே அவ்வாறு செய்திருந்தால் இன்று கசப்பான சம்பவங்கள் நிகழ வழியமைத்திருக்காது. இந்தியதேச காங்கிரஸ் அரசாங்கம் செய்யத்தவறிய முக்கிய அம்சங்களில் முதன்மைப்பட்டியலில் முன்னணியில் விளங்குவதில் இதுவும் ஒன்று என்பதனை மறுப்பதற்கில்லை. சரி. என்ன செய்திருக்கலாம்?
கல்விச்சாலைகளில் நுழைந்த சாதி, மத, அரசியல், சிலகூட்டமைப்பு என கல்விச்சாலையின் அடிப்படைத்தன்மையை அசைத்துப்பார்க்கும் அமைப்புகளுக்கு முற்றிலும் தடைவிதித்திருந்தால் மாணவ, மாணவரிடையே பிரிவினை ஏற்படாமல் இருந்திருக்கும். இது மாணவ, மாணவியரிடையே மட்டுமன்றி, பேராசிரியர்கள், கல்லூரி அமைப்புகளின் அனைத்து ஊழியர்களென அனைத்து மட்டத்திலும் இப்பிரிவென்னும் நஞ்சுக்கொடி சுற்றியுள்ளது. இது எந்த அளவிற்கு பாதிப்புகளை உண்டாக்குமென்பது கல்லூரிக்கு நானும் சென்றவன் என்பதை நான் நன்கறிவேன். நன்குணர்வேன்.
ஒருமுறை எங்கள் கல்லூரியில் நடந்த மாணவர் தேர்தலில் (யூனியன் மற்றும் கவின்கலை மன்றம்(ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப்)) திமுக, அ.தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். வழக்கம்போல் காங்கிரஸ் காணமல் போனது, கம்யூனிஸ்ட் தன் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு, ஒரு சிலகுறிப்ப்ட்ட சமூகத்திற்கு மட்டும் ஆதரவாக இருப்பது போல் ஒரு தோற்றம் கிடைக்கப்பெற்றதால், தி.மு.க, அ..தி.மு.க. மட்டுமே களத்தில் நேரிடையாகப் போட்டியிட்டன. (நான் அப்போது தி.மு.க. அபிமானி.) இதில் தி.மு.க பெருவாரியாக வென்றது. (ஒரு கட்சிதான் வென்றது. ஒரு கட்சிதான் தோற்றது. மாணவர்கள் வெல்லவில்லை). நாளிதழ்களில் சுடச்சுட செய்தி வந்தது. அண்ணாசிலைக்கு மாலைபோட்டனர். பெரியார் சிலைக்கு மாலை போட்டனர். அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு மாலை அணிவித்தனர். அத்துடன் முடிந்தது. மாணவர்களுக்கான பிரச்சினைகளினை புதிதாகத்தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. ஒன்று ஊர், அல்லது கட்சிக்குள் கோஷ்டி, அல்லது சாதி, அல்லது பொருளாதாரம் என பல தடுப்புச்சுவர்கள். வெறுத்துப்போனது.
அந்த காலகட்டத்தில் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா அவர்களால் இலங்கைத்தமிழர் பிரச்சினை வெடித்து தலைதூக்கியது. அகதிகளுக்கு உதவ, நாங்கள் உண்டியல் குலுக்கினோம். போராளிகளுக்கென நிதி திரட்டினோம். உணர்வுப்பூர்வமாக செய்தோம். ”தொப்புள்கொடி உறவுகளுக்கு உதவுகிறோம்” என்கிற பெருமிதம். ஆனால், சில வாரங்களிலேயே மனம் வெறுத்துப்போனது. தமிழக அரசியல் தலைவர்களான கலைஞர் , எம்.ஜி.ஆர் ஆகிய இருவரும் எடுத்த நேர் எதிர் நிலைப்பாடு குட்டையைக்குழப்பியது. தி.மு.க ஆதரவு போராளிகள் , அ.தி.மு.க. ஆதரவு போராளிகள் என பிரிந்துபட்டதே மிச்சம். அதன்பின் இன்றுவரை நடந்தது என்ன? நடப்பது என்ன?வென அனைவருக்கும் தெரியும்.
அவ்வாண்டில் நடைபெற்ற எங்கள் கவின்கலை மன்றத்தின் விழாவின்போது முக்கிய விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரையாற்ற வந்தவர்கள் யாரெனத் தெரியுமா? நடிகர் வாகை சந்திரசேகர் அவர்கள், நடிகர் ராதாரவி அவர்கள், மற்றும் இன்றைய தே.மு.தி.க நிறுவனத்தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் ஆகிய மூவருமே. அவர்கள் அப்போது தி.மு.க அபிமானிகள் என நன்கறியப்பட்டவர்கள். கல்லூரி முதல்வர் வந்தமர்ந்தார். இவர்களும் அழைக்கப்பட்டனர். வரவேற்புரை நிகழ்ந்தது. பின் எளிய ஒருசில உரைகளுக்குப்பின் வாகை சந்திரசேகர் அவர்கள் பேசினார். அப்போது அவருக்கு பெயர்பெற்றுத்தந்த ஒருதலை இராகம் திரைப்படத்தில் இடம்பெற்ற “குருவிக்கதை”யினை மாணவர்களின் வேண்டுகோளுக்காக நடித்துக்காட்டினார். கரவொலி விண்ணைப்பிளந்தது. உச்சகட்ட சோகமாக அவர் உணர்ச்சிப்பூர்வமாக நடித்தபோது அனைத்து மாணவர்களும் அமைதியாக இருக்க கூட்டத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒரு குழு நக்கலடித்தது. இருப்பினும், அவர் சமாளித்து, சென்றமர்ந்தார். பின் ராதாரவி பேச ஆரம்பித்தார். அப்போதும் அதேபோலே இடையூறு . ராதாரவி அவர்களுக்கு சரியான கோபம், ”நான் எதற்கும் பயந்தவனில்லை” என பல கோணங்களில் பேசிக்கொண்டேயிருக்க, எதிர்ப்புக்குரல் வலுத்துக்கொண்டே போனது. இடையில் புகுந்த கல்லூரி முதல்வர் அவர்கள் மிகவும் வேண்டி விரும்பிக்கேட்டுக்கொண்டேயிருக்க, குறிப்பிட்ட மாணவர் குழு தொடர்ந்து கூச்சலிட்டது. இவ்வளவு நேரம் பொறுமைகாத்த திரு.விஜயகாந்த் அவர்கள் எழுந்து, தனக்கே உரிய ஸ்டைலில் நாக்கைதுருத்தி, விரலை நீட்டி அந்த மாணவர் குழு இருந்த இடத்தை நோக்கி எச்சரித்தார். கூடவே மைக்கைக் கைப்பற்றி, “நான் கல்லூரிக்குச் சென்று படிக்கும் அளவிற்கு வசதி இருந்தும் நான் பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஆனால், உங்களுக்கு அந்த வாய்ப்பு இருக்கிறது. அதனை நாகரீகமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். நான் இப்போது பேசுவது சந்திரசேகர் பேசியபோது இடையூறுசெய்ததற்கோ அல்லது ராதாரவி பேசியபோது இடையூறு செய்ததற்கோ அல்ல. இந்த கல்லூரி பாரம்பரியம் மிகுந்த கல்லூரி. இங்கு மெத்த படித்தவர், நல்லவர், பண்பாளர், வயதால் மூத்தவரான இந்த கல்லூரியின் முதல்வர் அவர்கள். அவர்களுக்கிணையாக நான் அமர்வதையே பெருமையாகக் கருதுகிறேன். அப்படிப்பட்ட அவர் மற்றும் பிற பேராசிரியர்கள் அனைவரும் இங்கு இருக்கிறார்கள். இவர்களின் முன்னிலையில், முதல்வரின் வேண்டுகோளையும் மீறி அவரையும் உதாசீனப்படுத்தும் உங்கள் பண்பை என்னவெனக் கூறுவது? இதெல்லாம் நல்லதற்கல்ல.” . என்று கண்டித்துப்பேச பிரச்சினை மேலும் பெரிதானது. பின் முதல்வர் கூட்டத்திலிருந்து நடிகர்களைப்பிரித்து தனது அறைக்குள் அழைத்துச்சென்றுவிட்டார். சரி… இவ்வளவு பெரிய கதை எதற்கு?.அவ்வாறு பிரச்சினைக்குக் காரணமானவர்கள் வேறுயாருமல்ல… அ.தி.மு.க.வைச் சேர்ந்த, மாணவர் அமைப்புத்தேர்தலில் தோல்வியுற்றவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களுமே என்பது கவனிக்கப்படவேண்டியது. கல்லூரி முதல்வர் மிகுந்த அவமானப்பட்டதாகக் வருத்தப்பட, திரு. விஜயகாந்த் உள்ளிட்டோர் அவர்களுக்கு ஆறுதல் கூற…. ஒருவழியாக பிரச்சினை முடிவுற்றது.
இதனை எதற்கு நினைவு கூறுகிறேன் என்றால், இப்படி சில கட்சிகளால் பிரிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள், இப்போது சாதீய அமைப்புகளால் சிக்குண்டு போகின்றனர். இதற்காகவா மேற்படிப்பு?
ஐதராபாத்தில் ஆளாளுக்கு ஆர்ப்பார்ட்டம் செய்கின்றனர். தேசியக்கட்சி துணைத்தலைவர் தனது “விடுமுறைகாலம்” முடிந்து போரட்டக்காரர்களுக்கு மட்டும் ஆதரவாக பேசுகிறார். அவர் போராடுவதில் தவறில்லை. ஆனால், மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுப்பதாக காட்டிக்கொண்டு பிரச்சினையை மேலும், ஊதிப்பெரிதாக்க தூபம் போடுகிறார். பலரும் இவ்வாறே நடந்துகொள்கின்றனர். சமூகத்தில் அக்கறையுள்ளவர்கள் பிரச்சினையின் உண்மை நிலையை நடுநிலையோடு ஆராய வேண்டும். மக்களிடம் தெரியப்படுத்தவேண்டும். அதை விடுத்து கீழ்த்தரமாக மேலும் மேலும் மாணவர்களைத்தூண்டிவிட்டு, அரசியல் குளிர்காய்கின்றனர்.
தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கும் முன்னர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு ஒருதலைமுறையையே முட்டாளாக்கினர்.
இன்றைய கல்லூரிக்கல்வியின் தரமானது பன்முகப்பட்ட இந்திய கலாச்சாரத்தின் ஒன்றுபட்ட உணர்வு ஆட்டம் காணுமளவிற்கு போகிறது சாதிகள் இல்லையென்று கூறிக்கொண்டே.. சா”தீய” உணர்வுக்கு அடித்தளமிடுகின்றனர். இடஒதுக்கீடுகளில் மேலும் மேலும் உள் ஒதுக்கீடுகளை அதிகரிக்கவேண்டுமென போராட்டங்களை ஊக்குவிக்கின்றனர்.
அறுபதாண்டுகாலத்திற்கும் மேலாக ஒதுக்கீடுகளையும் சலுகைகளையும் வழங்கியபோதும் சில சமூகங்கள் முன்னேறாமல் இருக்கின்றன எனக்கொள்வோமானால், இது நிர்வாகக்கோளாறன்றி வேறென்ன இருக்கமுடியும்? சட்டப்பிரிவுகள் அளித்துள்ள சலுகைகளைக் கொண்டு முன்னேறியவர்கள், தங்களுக்கான சலுகைகளை, அதே சமூகத்தைச்சேர்ந்த பிறருக்கு தந்துதவலாமே… அவ்வாறு இல்லாமல் சாகும்வரை தொடர்ந்து, தாங்கள் மட்டும் அனுபவிப்பதிலேயே குறியாக உள்ளனர். இது எவ்வகையில் நியாயம்? இதற்கென வரையறை கிடையாதா? அவ்வாறானவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளால் , பல்வேறு சமூகப்பிரிவுகளில் உள்ள பிற மாணவர்கள் புழுங்கலாமா? அவ்வாறு புழுங்கவிடுவது அரசுகளுக்கு தகுமா? திறமைக்கான அங்கீகார அளவுகோல் என்பது என்ன?
ரோஹித் வெமுலா என்கிற மாணவரின் தற்கொலையானது ஏற்கக்கூடியதல்ல.. இதுபோன்ற நிலை இனியும் தொடரக்கூடாது. இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிற செயல், அதுமட்டுமல்ல ஒரு அறிவார்ந்த சமூகம் என சொல்லிக்கொள்ளும் நாம் வெட்கித்தலைகுனிய வேண்டியதருணம். கூட்டத்தோடு கோவிந்தா போடும் அரசியலையும் கடந்து .. பண்புமிகுந்த, அறிவார்ந்த, சமத்துவம் பொங்கும் சமூக நீதிதரும் செயல்திட்டங்களே இப்போதைய தேவை.
ஆகவே, கல்லூரிகளில் மாணவர்களுக்கான தேசபக்தி சம்பந்தமான, பொதுஅறிவூட்டக்கூடிய, அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளம் அமைக்கக்கூடிய அமைப்புகளே கல்லூரிகளுக்குள் இயங்க அனுமதிக்கவேண்டும். மாணவ சமூகத்தை கூறுபோடும் அமைப்புகளுக்கு தடைவிதிக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறு செய்ய அரசு முன்வருமானால் (இல்லையேல் மாற்றுக்கட்சியினரும் ஒன்றாக வற்புறுத்தலாம்) அனைத்துகட்சிகளும் இப்பிரச்சினையில் முரண்பாடுஇல்லாமல் சமூகஅக்கறையோடு சுமுகதீர்வு காணவேண்டும். ஏனெனில், எதிர்காலத்தூண்கள் என வர்ணிக்கப்படும் இளைய மாணவசமூகம் பாரபட்சமில்லாமல் அமையும். நமது முன்னோர்கள் அன்றைய சூழலுக்கு செயல்பட்டிருப்பர். நாம் புதுமைகளையும், பாகுபாடில்லாத சமூகத்தை வடிவமைக்க வாஞ்சை கொள்வோம். அப்போதுதான் தேசத்தை எதிர்நோக்கியுள்ள பல்வேறு சவால்களைக் களையமுடியும். இது எனது தனிப்பட்டக்கருத்துமட்டுமல்ல… நான் சந்திக்கும் அறிவார்ந்த பெருமக்கள், மாணவசமூகம் என பலரும் தெரிவிக்கும் கருத்தாகும்.