மெட்டி சத்தம்
மெட்டி சத்தம்
வெள்ளி கொலுசுகள்
கிணுகிணுத்த
ஓசை கேட்டு
நினைவுக்கு வந்தாள்
ஆசை காதலி!
கொலுசுகள் வாங்கி
கோகிலத்தின்
கால்களில்…..அணிவிக்க
கொஞ்சியே அணைத்து
வேண்டாமென்றாள் !
கொலுசு ஓசைகள்
ஓய்வதற்கு முன்னே
ஒய்யாரமான
கைகளைக் காட்டி
கைவளையல்கள் தேவையா
தையலே என்றேன்
கைவளையல்களுக்குள் இல்லை
உம் கைவளைக்குள்தான் என்றாள்
கைவளைக்குள்ளிட்டு
மைவிழியாளின்….
இமைச்சிறைக்குள்
எனை இட்டேன் !
கைவளைக்குள்ளிட்டது
போதாதென…..
கொஞ்சிய கோதையின்
நெஞ்சைத் தழுவிடும்
ஆரமொன்று வேண்டுமா
ஆரணங்கே என்றேன்!
ஆரமொன்றும் வேண்டாம்!
ஆலிங்கனம் போதுமென்றாள்!
என்றன் ஏந்திழையாளின்
ஒடிந்து விடுமளவுக்கு
இருக்கின்ற இடைக்கு ஒரு
ஒட்டியானம் வேண்டாமா ?
என்றேன் கொடியிடையாளோ
ஒட்டியாணம் வேண்டாமே என்றாள்!
என்னதான் வேண்டும்
எழிலரசி பூங்கொடியே என்றேன் !
எனக்கு வேண்டுவதெல்லாம்
இனிதான சத்தம் வேண்டும்
சத்தமில்லாமல் வேண்டும்
சத்தம் ஊருக்கெல்லாம்
கேட்க வேண்டுமென்றாள்!
என்ன சத்தம் வேண்டும்!
சத்தமில்லாமல் சத்தமா
என்ன இது புதிரோ
வேட்டு சத்தமா ?
வேணுகாண இசையா ?
வீணையின் நாதமா ?
நாயண சத்தமா , என்றேன்
இன்னும் விளங்கவில்லையா ?
இதெல்லாம் சேர்த்து
ஒரு சத்தம் மட்டும் போதும்!
”மெட்டி” சத்தம்தான்
மெட்டி சத்தத்தின் பின்னே
கட்டில் சத்தம்தான்
கண்ணாளா என்றாள் !
---- கே. அசோகன்.