வேறு நிலாக்கள் 13 பிரணவன்

இரையெனக்கொள் எஜமானே
****************************************

நித்தம் வலிதாங்கும்
நிலை வேண்டாம் எஜமானே
முழுதாய் இன்றென்னை
இரையெனக் கொண்டுவிடு

என் தேகத்தைக் கூறுபோடு

உன்னிடம் கூனிக் கையேந்தி
ஒருவேளை பசியாறும்
என்
இரைப்பை தேங்கிய
செரிமான மிச்சத்தை
கஞ்சி என
கலயத்தில் சேர்த்துக்கொள்

அடிமைத்தனம் கொண்டு
வெகுண்டெழுந்து நிமிராதஎன்
நெஞ்சைப்பிளந்து
நிறைந்தொழுகும் குருதியை
குழம்பெனப் பிசைந்துகொள்

உன் அடக்குமுறை கண்டு
ஆயுதம் ஏந்தாத
விரல்களைத் துண்டித்து
மிளகாய்ப் பிஞ்சுபோல்
நறுக்கென கடித்துக்கொள்

உரிமைக்குக் குரல் எழுப்பத்
தெரியாத குரல்வளையை
கடித்துச் சுவைத்து
கரும்பெனத் தின்றுவிடு

எதிர்த்தொரு வார்த்தை
எழுப்பாத என் நாவை
வெட்டி எடுத்து
வெற்றிலையாய் குதப்பிக்கொள்

உனக்காய் உழைத்து
உடல்கசிந்த வியர்வையை
தண்ணீராய்க் குடித்து
தாகம் தணித்துக்கொள்

அடிதாங்கி வலிதாங்கி
மரத்துப்போய் உணர்ச்சியற்று
தேகம் மூடிய என்
தோல்பரப்பை உரித்தெடுத்து
வியர்வை துடைத்துக்கொள்

ஆனாலும் எஜமானே

உன்னுள் கலந்து
உன் அணுக்கள் அத்தனையும்
நானென்று ஆனபின்னால்
ஒட்டுமொத்தமாய் ஒருநாள்
வெடித்துச் சிதறுவேன் .

-பிரணவன்

எழுதியவர் : பிரணவன் (3-Feb-16, 12:11 am)
பார்வை : 254

மேலே