இமை விழிப்பு
~ ~ ~ ~ ~ ~ ~ ~
இரத்தக் கிளர்ச்சிகளில் தோய்ந்த
கதிரவன் மீண்டும் மீண்டும்
புரட்சியின் உச்சம் கொண்டு
எழும்பி வரும் ஒரு வைகறையில்
பனித்துளிகள் தெளிக்க
கண்ட குளிர்ச்சியில்
மயக்கம் தெளிந்து விழிகள்
விழிக்கிறது இமைகளை
அகலித்து.....
அருகிலுள்ள மொட்டுக்கும்
போதித்து விட்டு !
புலர்தலும்
தன் எறியப் பாதையின்
மையப்புள்ளியில் குவிய
இருள் கவியும் அந்திச்சாரலில்
பொழுதின் முயக்கத்தால் துவண்டு
கருகிய இதழ் நுனியில்
காலம் எதையோ ஒன்றை தாக்கல்
செய்து தூக்கு போடுகிறது...!
ஆனால் கேசரங்களும் மகரந்தங்களும்
அயலுறவு கொண்டு பிறந்து
மாற்றான் பூங்காவிற்குள்
தென்றலின் சுகந்தம் புரியாத
எல்லைக் கட்டுப்பாட்டு முற்றத்தில்
இன்னும் சிரிப்பை
விரித்துக் கிடக்கிறது
ஒரு சிந்தனையில் அகப்படாத
சிதறல் பாளங்களாக.........!
- பிரியத்தமிழ் : உதயா-