சுழல் நாற்காலியில்------

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
அங்கே
ஒரு காலச் சக்கரம் சுழன்று
கொண்டிருக்கிறது
உதிர்ந்து விடும் என்று இருப்பை
நிர்ப்பந்திக்கப்படும் அடைப்புக்களை
தாங்கி நகர்த்திக் கொண்டு
மௌனங்களின் மொழிகளில்
பொதிந்துள்ள ஆழமான பகுதிக்கு
நகர்கிறது பால்யத்தின் படிவுகள்
நத்தையாய். .....
இலைகள் வாசத்திற்குப் பிறகு
சுவாசத் திசுக்களை இழந்து மீண்டும்
ஓர் உயிர்ப்பித்தலுக்காக
உரமாக உதிர்க்கிறது
ஒரு பிரக்ஞையற்ற பொழுது
பிரமைகளை கடந்த பிரபஞ்சத்தின்
தளிர்த்தலில் ஓர் இளவேனில் என்பது
கருகும் கருக்கலில் புரிந்து விடுகிறது
ஆனாலும். ........
மேலும் மேலும் ஒரு புதிய தேடல்
முடிவுகளின் அர்த்தப் படுத்தலில்
கனவுகளே என்பது
காய் நகர்த்தலில் எல்லைக்குள்
அத்துமீறி நுழைந்து சுழற்சியில்
ஒரு குழந்தையாய் மாறி
அத்தனை புரிதலும் பொய்யா
என புத்தி பேதலிப்பு நிகழ்த்தி விடுகிறது
இந்த வாழ்வின்
கடைசி அத்தியாயத்தில். .....!
- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ்: உதயா (3-Feb-16, 3:00 pm)
சேர்த்தது : தமிழ் உதயா
பார்வை : 63

மேலே